உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, கழிவுகளை நீக்குகிறது, எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
சில நேரங்களில் தவறான உணவுப் பழக்கங்கள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்கூறுகள் போன்றவற்றால் சிறுநீரகம் மோசமாக பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் தான் சிறுநீரக கற்கள், சிறுநீரக புற்றுநோய் மற்றும் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கின்றன. இன்னும் சில நேரங்களில் இப்பிரச்சனை அதிகரிக்கும் போது சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்.
சிறுநீரகங்களின் செயல்பாடு
உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியைச் செய்கிறது. மேலும் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்குகின்றன மற்றும் எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன.
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்
- உடல் வீக்கம்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- பசியின்மை
- சருமத்தில் வெடிப்பு
- எரிச்சல் உணர்வு
- அதிக குளிர்ச்சி உணர்வு
சிறுநீரகத்தை செயலிழக்கும் உணவுகள் மற்றும் பழக்கங்கள்
காபி
காபியில் அதிகளவு காப்ஃபைன் உள்ளது. அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோயில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே காபியை அதிகமாக குடிப்பதை குறைத்து கொள்வது நல்லது.
இதையும் படிக்கலாம் : நோய்களுக்கு நோ சொல்லும் பனங்கருப்பட்டி
உப்பு
உப்பு அல்லது சோடியம் அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்த அளவை அதிகரிப்பதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
உப்பில் சோடியம் உள்ளது, இது பொட்டாசியத்துடன் சேர்ந்து, உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது, ஆனால் உப்பை உணவில் அதிக அளவில் சேர்த்தால், இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சிறுநீரகங்களில் தொடர்ச்சியாக அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படும் போது, அது சேதமடைகிறது.
ஆல்கஹால்
அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுவதோடு, மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் ஆனது சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, பிற உறுப்புக்களிலும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் புரதம் அதிகளவு உள்ளது. இந்த புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இதன் வளர்சிதை மாற்ற செயல்முறை மிகவும் கடினமானது என்பதால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
புரதம் அதிகம் நிறைந்த இறைச்சி உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தை அஅதிகரிக்கு என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
செயற்கை சுவையூட்டி
தற்போது கடைகளில் விற்கப்படும் இனிப்புகள், குக்கீஸ் மற்றும் பானங்கள் ஆகியவற்றில் செயற்கை இனிப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் சிறுநீரகம் தொடர்பான நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இம்மாதிரியான உணவுகளை சாப்பிடவே கூடாது.
தண்ணீர் குடிக்காதது
தண்ணீர் அதிகம் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.
சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.