லட்சுமி தேவியை நம் வீட்டில் குடியமர்த்துவதற்கு நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதில் ஒன்று பூஜையறையில் கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவதாகும்.
செட்டிநாடு பகுதியில் கோலத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்போது அனைத்து நகரங்களிலும் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் வாசலில் கோலம் போடுவது வழக்கம்.
கோலத்தில் பல வகைகள் உண்டு. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டின் முன் பசுவின் சாணத்தை தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.
முன்பெல்லாம் தமிழ் மக்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக் கடமைகளை முடித்துக் குளித்துவிட்டு, வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவார்கள். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.
சாணம் ஒரு கிருமி நாசினி. மாவிலை தோரணங்கள் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.
காலையில் பெண்கள் குனிந்து கோலம் போடுவதன் மூலம் உடற்பயிற்சியோடு, நல்ல கோலம் உருவாகும். புத்தாண்டு, தீபாவளி, அறுவடைத் திருநாள், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளில் வண்ணமயமான கோலம் போடும் வழக்கம் நம்மிடமும் உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, நம் வீட்டிற்குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைகிறார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். கணபரமாத்மா நம் இல்லங்களில் வந்து வழிபாடுகளை ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.
மாதங்களிலேயே மார்கழி மாதத்தில் தான் கோலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடு தான் என்பதை அனுபவத்தின் மூலம் மட்டுமே உணர்கிறோம்.
இதையும் படிக்கலாம் : பணம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்