நாச்சியார் திருமொழி – தாமுகக்கும்

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே (1)

எழில் உடைய அம்மனைமீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே (3)

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல்
இச்சை உடையரேல் இத்தெருவே போதாரே (4)

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே (5)

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்
செய்ப்புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து
பெண்ணாக்கை ஆப்புண்டு தாம் உற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே (7)

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே (8)

கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே (9)

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டு இருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே (10)

நாச்சியார் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *