நாச்சியார் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

மற்றிருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)

நாணி இனியோர் கருமம் இல்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் (3)

அங்கைத்தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணும் கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர்! துழதிப்படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடுமின் (6)

வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின் (7)

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ
கற்றன பேசி வசவுணாதே காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் (8)

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)

மன்னு மதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே (10)

நாச்சியார் திருமொழி – கண்ணனென்னும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *