நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வும் தெரிந்துகொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது என்று ஏளனமாக சொல்வார்கள். அவசர காலத்துக்கு அடுப்பு உதவுமா என்பது போல அவசர சமையலில் ஒட்டிவரும் தோசை யோடு போராட முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.
அதனால் தான் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மண் பாத்திரங்கள், செம்பு, பித்தளை, வெண்கலம் தாண்டி சில்வர், அலுமினியம் என்று வந்து இன்று நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டோம். கிட்டதட்ட கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான். இது பயன்படுத்துவது எளிது பராமரிப்பதும் எளிது என்றாலும் இந்த பாத்திரங்களுக்கு ஆயுள் காலமும் உண்டு என்பது இல்லத்தரசிகளுக்கு தெரிவதில்லை. இது குறித்து சற்றுவிரிவாக பார்க்கலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள்
இது உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது. இந்த பாத்திரங்கள் பார்க்க வளவளப்பாக இருக்கும். இதில் உணவு பொருள்கள் ஒட்டாமல் இருக்க டெஃப்ளான் பூச்சு சேர்க்கப்படுகிறது. இவை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரை ஆரோக்கிய குறைபாடு இல்லை.
ஆனால் அடுப்பை அதிகப்படியான தீயில் வைத்து சமைக்கும் போது இந்த பாத்திரத்தை அப்படியே சில நிமிடங்கள் வைத்தாலும் கூட அதிலிருந்து PFOA ( Perfluorooctanoic acid) என்னும் நச்சு பொருள் வெளியேறுகிறது. இந்த புகையை சுவாசிக்கும் போது காய்ச்சல் வருவதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
நான்ஸ்டிக் இல்லாமல் எப்படி சமைக்க முடியும். எவ்வளவு எளிதாக சமைக்கலாம், எண்ணெய் அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை, சற்று நேரமானாலும் உணவு அடிபிடிக்கும் தொல்லை இல்லை இப்படி பல விஷயங்கள் சட்டென்று கைகொடுப்பதால் இதை விட முடியாது தான். ஆனால் சரியான முறையில் பாதுகாத்தால் ஆபத்தில்லை என்று சொல்லலாம்.
சமைக்கும் போது
நான்ஸ்டிக் தவா, வாணலி, பாத்திரம் இப்படி எதுவாக இருந்தாலும் சமைக்கும் போது முதலில் தீயை அதிகம் வைக்காதீர்கள். பொதுவாக பிரஷர் குக்கரில் கூட தீயை அதிகமாக வைக்க கூடாது என்று சொல்வார்கள்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் வைக்கும் போது சமைக்கும் வரை தீயை அதிகரிக்காமல் குறைவான தீயில் வைத்து சமைத்து எடுங்கள். வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்திருக்க வேண்டாம். உணவு பொருளை கிளறுவதற்கு சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சில்வர் கரண்டிகள் தவிர்க்க வேண்டும். இவை வேகமாக கிளறும் போது அந்த பாத்திரங்களில் கீறல்களை உண்டாக்கி விடும்.
இதிலிருந்து நச்சு வெளியேற வாய்ப்புண்டு. அதனால் அதற்கு ஏற்றவை மரக்கரண்டிகளை தான் பயன்படுத்த வேண்டும். இவை பாதிப்பு உண்டாக்காது என்பதோடு பாத்திரத்தின் விளிம்பு முதல் அடி வரை எந்த பாதிப்பையும் உண்டாக்காது.
சுத்தம் செய்யும் போது
பாத்திரத்தை சுத்தம் செய்யும் போதும் கூடுதல் கவனம் தேவை இந்த வகையான பாத்திரங்களை சுத்தம் செய்வது மிக எளிது. அதே நேரம் ஸ்கரப் போன்று கடுமையான பாத்திரம் தேய்க்கும் தூளை பயன்படுத்த கூடாது. அதே போன்று ஸ்டீல் நாரை கொண்டு அழுத்தி தேய்த்து சுத்தப்படுத்த கூடாது. பதமாக கையாள்வது பாத்திரத்தின் ஆயுளை அதிகரிக்கும்.
அதே நேரம் நான்ஸ்டிக் பாத்திரத்தை அவ்வபோது கவனியுங்கள். அதன் ஓரத்தில் விளிம்பில் சற்று கீறல்கள் தென்பட்டாலே அந்த பாத்திரத்தை பயன் படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தண்ணீர் வைக்க தானே சூடு செய்ய தானே என்று நீங்களே சமாதானம் செய்துகொள்ளாதீர்கள். இது ஆரோக்கியம் குறித்த விஷயம்.
குறிப்பு
தற்போது பாரம்பரிய உணவுகளின் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளதால் அதற்கேற்ற மண்பானை பக்கமும் திசை திரும்பி இருக்கிறார்கள். கீரைக்கு மண்சட்டி, மீன் குழம்புக்கு மண்சட்டி, மண்சட்டி வாணலி என்று விதவிதமாய் மண் பாத்திரங்களையும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். எனினும் இதை பராமரிப்பதும் அதற்குரிய நேரமும் சற்று அதிகம் என்பதால் நவீன பாத்திரங்களையும் விடாமல் பின்பற்றுவதை குறை சொல்ல முடியாது.
அதே நேரம் உணவு சத்துக்கு என்று பார்ப்பது போல் பாத்திரங்களும் ஆரோக்கியத்துக்கு என்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை தவிர்க்க சொல்லவில்லை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் என்று தான் சொல்கிறார்கள். பாத்திரம் வாங்கும் போதும் அதில் PFOA free என்று குறிப்பிட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாம் : கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை!!