பொதுவாக நகரங்களில் அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு இருக்கிறது. அனைவருக்கும் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருக்கும்.
சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும் போது, சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும் நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்மந்தமான அடுப்புகளை வைத்து பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிலிண்டரில் கசிவு இருப்பதாக உணர்ந்தால் உடனே சோப்பு நீர் கலந்து சிலிண்டர் மீது ஊற்றினால் நீர்க் குமிழ் உருவாகும். இதைக் கொண்டு எரிவாயு கசிவை பரிசோதிக்க வேண்டும். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.
நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேஸ் கசிவு இருப்பதை அறிந்தால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும்.
சிலிண்டர்களை நல்ல முறையில் உபயோகப்படுத்த சில குறிப்புகள்
சமைக்கும் போது, அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விட்டால் சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இதனால் கேஸ் கசிவு உண்டாகும்.
பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கேஸ் கசிவு இருக்கும் போது விபத்தை உண்டாக்கக் கூடும்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.
கேஸ்கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.
காற்றோட்டத்துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும். எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு வினியோகஸ்தர் அல்லது அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேஸ்கசிவு ஏற்படுவதை சரிசெய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!