ஏகாதசி விரதம் விரதத்தின் மிக உயர்ந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு தோறும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் உள்ளன. இந்த ஏகாதசி விரதங்களில் சில சிறப்பான பலனைத் தரும்.
குறிப்பாக ஆடி மாதத்தில் மகா விஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.
ஆனி அமாவாசைக்குப் பின் வரும் சயன ஏகாதசியன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் முழு உபவாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.
சயன ஏகாதசி அன்று இரவு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் சிலைகளை பூஜை அறையில் அலங்கரித்து நைவேத்தியம் மற்றும் குத்துவிளக்கு ஏற்றி வழிபட வேண்டும். விஷ்ணு பகவானை அலங்கரிக்கும் போது தாமரை அல்லது மல்லிகைப் பூக்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
நைவேத்தியமாக பால் பாயாசம் செய்து வழிபாடு செய்யலாம். பூஜை முடிந்ததும் மகா விஷ்ணு போற்றியை துதிக்க வேண்டும். இந்த பூஜையை செய்தால், வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும்.
இதனால் பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் இவ்வாறான வழிபாடுகள் அழகான குடும்பம் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சயன ஏகாதசியன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் கோபத்ம விரதம் என்று அழைக்கப்படுகிறது. காலையில் மற்ற பணிகளை முடித்துவிட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் வைத்து தாமரை மலர்களால் அலங்கரித்து நடுவில் மகாலட்சுமியுடன் கூடிய விஷ்ணு படத்தை வைத்து வழிபட வேண்டும்.
33 முறை வலம் வருதல், 33 முறை வணங்குதல். இந்த வழிபாட்டை படம் இல்லாமல் கலசம் வைத்தும் செய்யலாம். பிறகு 33 பேருக்கு பிரசாதம் வழங்க வேண்டும். இந்தத் பூஜையை மேற்கொள்பவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். பேரக்குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பிறக்கும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம் : 24 ஏகாதசிகளும் அதன் பயன்களும்..!