திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள் தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் – தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த அவரே குரு.

அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம். இந்த பதிவில் திருக்குறள் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து அதன் விளக்கங்களை பற்றி படித்தறிலாம்.

குறள் 1 :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

மு.வரதராசனார் உரை 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை 

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்

உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

மணக்குடவர் உரை 

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

குறள் 2 :

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வரதராசனார் உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

மணக்குடவர் உரை

மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

குறள் 3 :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வரதராசனார் உரை

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

மணக்குடவர் உரை

மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். ‘நிலம்’ என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

குறள் 4 :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

மு.வரதராசனார் உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

மணக்குடவர் உரை

இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்று பெயரிட்டார்.

குறள் 5 :

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி  உரை

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

மணக்குடவர் உரை

மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

குறள் 6 :

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மு.வரதராசனார் உரை

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

கலைஞர் மு.கருணாநிதி  உரை

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.

மணக்குடவர் உரை

மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.

குறள் 7 :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

மு.வரதராசனார் உரை

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

மணக்குடவர் உரை

தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

குறள் 8 :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

மு.வரதராசனார் உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி  உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா உரை

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

மணக்குடவர் உரை

அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

குறள் 9 :

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

மு.வரதராசனார் உரை

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

கலைஞர் மு.கருணாநிதி  உரை

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

மணக்குடவர் உரை

அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

குறள் 10 :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

மு.வரதராசனார் உரை

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி  உரை

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

மணக்குடவர் உரை

பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *