/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்..! - Thagavalkalam

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்..!

vilva elai

சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இலைகளையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.

வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

வில்வ வழிபாடும் பயன்களும்

சிவபெருமானுக்கு பிரியமான அர்ச்சனைப் பொருள் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்.

வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம், சிரேஷ்ட வில்வம், கந்தபலம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் (உயிர்களின்) பாவங்களைப் போக்குவனவான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

எனவே சிவபெருமானின் தலவிருட்சமும் வில்வம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள்.

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன.

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும், இறைவனின் முக்குணங்களையும், முக்கண்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என ஈசனிடம் கேட்க,

ஈசனும் திருவைகாவூர் (திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் (வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.

அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூஜைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும், சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் பறிக்கக் கூடாது.

இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வில்வத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம், ஏற்கனவே பூஜித்த வில்வம் ஆகியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது.

சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது.

நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதனால் பல்வேறு நன்மைகளை அடைய முடியும் என்பது இந்து சாஸ்திரங்கள் கூறும் நம்பிக்கை.

மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் (திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம்மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தின் மீது பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சனை மூலம் சிவனின் திருவருட் கடாட்சத்தைப் (சிவபெருமானின் திருவருளை) பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூசிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஷ்பங்களால் அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்.

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவையாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கருதப்படுகிறது.

வில்வம் பறிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்.

மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் (மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

சம்ச ர விஷவைத்யஸ்ய ச ம்பஸ்ய கருணாநிதே

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

நாமும் தினமும் சிவமூலிகைகளின்_சிகரம் என்று போற்றப்படும் வில்வத்தால் அர்ச்சனை செய்து அவனருளை பெறுவோமாக!

இதையும் படிக்கலாம் : சிவ 14 தாண்டவம் ஸ்தலங்களும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *