பங்குனி உத்தரம்

பங்குனி உத்தரம் முருகப் பெருமானுக்கு மிகவும் முக்கியமான நாள். பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரம் வரும் நாளில் இதைக் கொண்டாடுகிறார்கள். தமிழ் மாதங்களில் பங்குனி கடைசி மாதம். உத்தரமும் 12-வது நட்சத்திரம். அதனால் பன்னிரண்டு கை கொண்ட முருகனுக்கு இந்த நாள் சிறப்பானது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இந்த நாளில் வருடாந்தர திருவிழாக்கள் நடக்கும். பல தெய்வங்களின் திருமணங்கள் நடந்த நாளாகவும் இதைக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால், திருமணம் போன்ற நல்ல காரியங்களில் உள்ள தடைகள் விலகும் என்று நம்பப்படுகிறது.

பங்குனி உத்திரம் என்றால் என்ன?

பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளுக்கு பங்குனி உத்திரம் என்று பெயர். இந்த நாளில் தான் பல தெய்வங்களின் திருமணங்கள் நடந்ததாகபுராணங்கள் சொல்கின்றன. அதனால் தான் இந்த நாளை திருமணங்களுடன் நெருங்கிய தொடர்புடைய நாளாக மக்கள் நம்புகிறார்கள்.

பங்குனி உத்திரத்தின் வரலாறு

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாளை பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். அன்று தான் முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க தன் தாய், தந்தையரை வணங்கி ஆசி பெற்று பயணத்தை ஆரம்பித்தார்.

murugan

முருகன் தேரில் புறப்பட்டார். வாயு பகவான் தேரை ஓட்டினார். கூடவே முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்த போது, அங்கு இருந்த நாரதர், அந்த மலை கிரவுஞ்சன் என்ற அசுரன் என்றும், அருகில் உள்ள மாயாபுரியில் தாரகாசுரன் என்ற அசுரன் இருப்பதாகவும் சொன்னார்.

இந்த மலை முன்பு கிரவுஞ்சன் என்ற அசுரனாக இருந்தது. அவன் எல்லோருக்கும் கெடுதல் செய்து வந்தான். அகத்திய முனிவர் சாபம் கொடுத்ததால், அசையாமல் மலையாக மாறினான். ஆனால் இப்போதும் கூட, அந்த மலை வழியாக செல்பவர்களை ஏமாற்றி துன்புறுத்தி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். அதோடு, அந்த மலைக்கு அருகில் மாயாபுரிப்பட்டினம் என்ற ஊர் இருக்கிறது. அங்கே தாரகாசுரன் என்பவன் ஆட்சி செய்கிறான். அவன் சூரபத்மனின் தம்பி. யானை முகம் கொண்டவன். அவன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வருகிறான்.

முருகன் தன் தளபதி வீரபாகுவை தாரகாசுரனை வீழ்த்த அனுப்பினார். வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. இரு தரப்பிலும் கடும் போர் நடந்தது. தாரகாசுரன் தன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தினான். வீரபாகு கீழே விழுந்தான். தாரகாசுரன் வீரபாகுவைப் பார்த்து சிரித்தான். இதைப் பார்த்த முருகனின் படைவீரர்கள் பயந்து ஓடினார்கள்.

வீரபாகு மயக்கம் தெளிந்து எழுந்தான். மீண்டும் தாரகாசுரனை தாக்கினான். தாரகாசுரனால் எதிர்த்து போர் செய்ய முடியவில்லை. அவன் தன் மாய சக்தியால் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் ஓடிப்போனான். வீரபாகுவும் அவனுடன் வந்த வீரர்களும் மலைக்குள் தொடர்ந்து சென்றனர். அப்போது மலை அவர்களுக்கு இடையூறு செய்ய தொடங்கியது. தாரகாசுரனின் கொடிய படைகள் முருகனின் படை வீரர்களை கடுமையாக தாக்கி அழித்தன.

நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு முருகன் போர்க்களத்துக்கு வந்தார். தாரகாசுரன் முருகனைப் பார்த்து, இவன் ஒரு சிறுவன் என்று கேலி செய்து சிரித்தான். இதனால் கோபம் அடைந்த முருகன் அவனைத் தாக்கினார். தாக்குதலைத் தாங்க முடியாத அசுரன், எலியாக மாறி மலைக்குள் ஓடி மறைந்தான். முருகன் தன் வேலை எடுத்து வீசினார். வேல் மலையை உடைத்துக்கொண்டு சென்று தாரகாசுரனைக் கொன்றது. பிறகு முருகன் தெய்வானையை திருமணம் செய்தார். அந்த நாள் தான் பங்குனி உத்திரம் ஆகும்.

இந்த நாளில் சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்தார். ராமர் சீதையை திருமணம் செய்தார். அதோடு முருகப்பெருமான் தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஆண்டாள் உள்ளிட்ட பல தெய்வங்களின் திருமணங்கள் எல்லாம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தன. அதனால் தான் பங்குனி உத்திர நோன்பை திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் சொல்கிறார்கள்.

மீனாட்சி கல்யாணம்

meenakshi wedding

சிவனும் பார்வதியும் திருமணம் செய்த நாள் பங்குனி உத்தரம். சிவனுக்கு சோமசுந்தரர் என்றும், பார்வதிக்கு மீனாட்சி என்றும் பெயர் வைத்து திருமணம் நடந்தது. மன்மதனை சிவன் எரித்ததால் வருத்தப்பட்ட தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் பார்வதியை இந்த நாளில்மணந்தார் என்று சொல்கிறார்கள்.

இந்த நாளில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகாக அலங்கரிப்பார்கள். பின்னர் திருமண மண்டபத்தில் அமர்த்தி, வாத்தியங்கள் இசைத்து, வேதம் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி திருமணம் நடத்துவார்கள். பிறகு இருவரையும் அழகான பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த நாளில் அம்மையப்பனை நினைத்து சைவர்கள் விரதம் இருப்பார்கள். பகலில் உணவு சாப்பிடாமல், இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடுவார்கள். இதற்கு கல்யாணசுந்தர விரதம் என்று பெயர்.

பழனி பங்குனி உத்திரம்

palani panguni uthiram

பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடு ஆகும். பழனியில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திர நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. மற்ற படைவீடுகளிலும் இந்த விழா நடைபெற்றாலும், பழனியில் நடக்கும் பங்குனி உத்தரம் திருவிழாவும் தேரோட்டமும் மிகவும் சிறப்பானது.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சைவ மக்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்குச் சென்று காவிரி ஆற்று நீரை எடுத்து வருவார்கள். இந்த நீரை பழனி முருகனுக்கு செலுத்துவார்கள். பழனியில் உள்ள முருகன் சிலை போகர் என்பவரால் நவபாசாணம் என்ற பொருளால் செய்யப்பட்டது. பங்குனி மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க, மூலிகைகள் கலந்த காவிரி நீரால் குளிர்விக்க இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : 108 வேல் போற்றி..!

பங்குனி உத்திரம் வழிபடும் முறை

பங்குனி உத்திரத்துக்கு முந்தய நாள் வீட்டை சுத்தம் செய்து செய்ய வேண்டும். அந்த நல்ல நாளன்று அதிகாலையில் எழுந்து குளித்து முருகப்பெருமானுக்கு பூக்கள் வைத்து விளக்கு ஏத்தி, பூஜை செய்ய வேண்டும்.

திருமண விரதம்

திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த நாளில் முருகனை வணங்கி விரதம் இருக்கலாம். அதோடு, ஒரு ஜாக்கெட் துணி, மஞ்சள், பூ, குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் ஆகியவற்றை சின்ன சின்ன பைகளில் போட்டு, பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போய் சுமங்கலிப் பெண்களிடம் கொடுக்கலாம். கல்யாணத்துக்காக காத்திருக்கும் பெண்ணோ, ஆணோ அவர்களின் கையாலேயே இதை கொடுப்பது நல்லது. நம்மால் எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ, அத்தனை பேருக்கு கொடுக்கலாம். திருமணத்துக்காக முயற்சி செய்யும் இளைஞர்களால் கொடுக்க முடியாவிட்டால், அவர்களின் அம்மா, அப்பா அல்லது உடன்பிறந்தவர்கள் கொடுக்கலாம்.

தீர்த்தவாரி

பங்குனி உத்திரம் அன்று சில கோயில்களில் தீர்த்தவாரி விழா நடக்கும். மக்கள் ஏரி, குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் குளித்து புண்ணியத்தைப் பெறுவார்கள். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் உள்ள மகா மகம் குளத்தில் மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

காவடி எடுத்தல்

இந்த காவடி ஆட்டம் முருகப்பெருமான் வழிபாட்டுடன் தொடர்புடையது. பால் காவடி, பன்னீர் காவடி, சர்ப்பக் காவடி, சந்தன காவடி, மச்சக் காவடி, தேன் காவடி, தயிர் காவடி, ரத காவடி இப்படி பல வகையான காவடிகளை பக்தர்கள் சுமந்து செல்கிறார்கள்.

பங்குனி உத்திரம் அன்று செய்ய வேண்டியவை

பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானின் அருளைப் பெற செய்யவேண்டியவை பற்றி பார்க்கலாம்.

கோயிலுக்கு சென்று வழிபடுதல்

பங்குனி உத்திரம் நாளில் மக்கள் கோயிலுக்குச் சென்று சிவன் – பார்வதி அல்லது முருகன் – தெய்வாணையை வணங்குகிறார்கள்.  கோயிலில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டால் செல்வமும், இன்பமான திருமண வாழ்க்கையும், கடவுளின் அருளும் கிடைக்கும். கோயில்களில் தூபம் காட்டி, பக்தி பாடல்கள் பாடி வழிபடுவதால், அங்கு வரும் மக்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. கோயிலில் இறை நாமத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பாகும்.

இதையும் படிக்கலாம் : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

அபிஷேகம்

பங்குனி உத்திரம் நாளில் கோவில்களில் நடக்கும் அபிஷேகத்திற்கு பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இப்படி செய்வதால் கடவுள் மகிழ்ந்து நாம் கேட்பதை தருவார் என்று மக்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு அபிஷேகம் செய்வதால் நம் தீய செயல்கள் போய், நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

காவடி எடுத்தல்

பங்குனி உத்திரம் அன்று காவடி எடுப்பது மிகவும் சிறப்பானது. முருகனுக்கு காவடி எடுத்தால் அவரின் பரிபூரண அருள் கிடைக்கும். முருகனை நினைத்துக்கொண்டு, பக்தி பாடல்கள் பாடி, காவடி எடுத்து வந்தால் நம் வாழ்க்கையில் உள்ள கவலைகள் எல்லாம் தீரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

விரதம் இருத்தல்

பங்குனி உத்திரத்தன்று சாப்பிடாமல் விரதம் இருந்து, முருகப்பெருமானை நினைத்து மந்திரம் சொல்வதும், தியானம் செய்வதும் நல்லது. இப்படி செய்வதால் நம் உடலும் மனமும் சுத்தமாகி, கடவுளோடு நெருக்கமான உறவை உண்டாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் முன்பு செய்த தவறுகள் மன்னிக்கப்படும்.

தானம் செய்தல்

பங்குனி உத்திரம் அன்று மக்கள் கோயிலுக்குப் போகும் போது, பூ, பழம், தேங்காய், விளக்கு போன்றவற்றை கடவுளுக்கு வாங்கிச் செல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் கடவுளிடம் தங்கள் நன்றியையும், பக்தியையும் செலுத்தலாம். அதோடு, ஏழை மக்களுக்கு சாப்பாடு, துணி, பணம் போன்ற உதவிகளை செய்யலாம். இதனால் நம் தீய செயல்களின் விளைவுகள் குறையும்.

மந்திரம் ஓதுதல்

இந்த நாளில் மந்திரங்களை சொல்வதும், புனித புத்தகங்களை படிப்பதும், தெய்வக் கதைகளை கேட்பதும் நல்ல பலன்களைத் தரும். திருப்பாவை, திருவெம்பாவை, கந்த புராணம் போன்ற புனித நூல்களை படிக்கலாம். நமக்கு பிடித்த கடவுளின் மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்லலாம்.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

murugan marriage

முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தார். வள்ளித் தெய்வம் பிறந்த நாளும் இதே நாளில் தான்.

மதுரை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் பங்குனி மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இன்றும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் மதுரையில் இந்தத் திருமண விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.

இந்த நாளில் பெருமாள் கோயில்களில் திருமணக் கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். காஞ்சி வரதர் கோயிலில் பெருந்தேவித் தாயார் சன்னதியில், ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் வரதராஜப் பெருமாள் காட்சி தருவார்.

பங்குனி உத்திர நாளில் தான் சிவபெருமானின் தவத்தை மன்மதன் கலைத்தான். அதனால் கோபம் கொண்ட சிவன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். பிறகு மன்மதனின் மனைவி ரதி வேண்டிக் கொண்டதால், மன்மதன் மீண்டும் உயிர் பெற்றான்.

காஞ்சி நகரில் காமாட்சி அம்மனுக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கும் போது, அதே மண்டபத்தில் பல பேர் திருமணம் செய்து கொள்வார்கள்.

பங்குனி உத்திரம் முருகனுக்கு மிகவும் சிறப்பான நாள். பக்தர்கள் காவடி எடுக்கவும், விரதம் இருக்கவும் ஏற்ற நாள். இந்த நாளில் முருகனுக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தலாம்.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதம் இருந்ததால் தான் திருமாலின் மார்பில் இருக்கும் வரம் கிடைத்தது.

பார்க்கவர் என்ற முனிவரின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாள் பங்குனி உத்திரம். எனவே, இந்த நாளில் லட்சுமியின் அருள் அதிகம் கிடைக்கும்.

சந்திரன் 27 நட்சத்திர கன்னிகளை மணந்த நாளும் இந்த பங்குனி உத்திரம் தான்.

ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நான்கு சகோதரர்களின் திருமணமும் பங்குனி உத்திர நாளில் தான் மிதிலையில் ஒரே மேடையில் நடந்தது. ராமர் சீதையையும், லட்சுமணர் ஊர்மிளையையும், பரதர் மாண்டவியையும், சத்ருக்னர் சுருதகீர்த்தியையும் மணந்தனர்.

காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த நாள் பங்குனி உத்திரம். அன்று தண்ணீர் பந்தல் வைத்து, நீர்மோர் கொடுப்பது நல்லது.

thirukalyanam

பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வணங்கினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை.

இந்த விரதத்தை மேற்கொண்டதால் தான் தேவர்களின் தலைவர் இந்திரன் தன் மனைவி இந்திராணியையும், படைப்புக் கடவுள் பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியையும் அடைந்தார்கள்.

பங்குனி உத்திர விழா பல கோயில்களில் கொண்டாடப்படும். சில கோயில்களில் தீர்த்தவாரி விழாவும் நடக்கும். அப்போது அந்த ஊரில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு ஆகியவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

பங்குனி மாதத்தில் ஏற்றப்படும் விளக்கில் சிவனும் பார்வதியும் ஒன்றாக காட்சி தருவார்கள். அதனால் தான் அன்று திருவிளக்கு வழிபாடு செய்து நம் தீய செயல்களை போக்கிக் கொள்கிறோம். இதன் மூலம் பகைமை நீங்கி புண்ணியம் பெறலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். முருகன்-வள்ளி-தெய்வானை திருமணம், மதுரையில் கள்ளழகர் திருமணம், திருப்பரங்குன்றத்தில் தங்கக் குதிரை ஊர்வலம், வில்லிபுத்தூர், மோகூர் ஆகிய இடங்களில் பெருமாள் திருமணம் நடைபெறும்.

இதையும் படிக்கலாம் : முருகன் அருளை பெற 7 நாட்கள் சொல்லவேண்டிய துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *