திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district)

Dindigul district

திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றும், கொங்கு மண்டல மாவட்டங்களுள் ஒன்றுமாகும். திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் தருமபுரி
பகுதி கொங்கு நாடு
பரப்பளவு 6266.64 ச.கி.மீ
மக்கள் தொகை 21,59,775 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 358
அஞ்சல் குறியீடு 624xxx
தொலைபேசிக் குறியீடு 0451
வாகனப் பதிவு TN-57, TN-94

வரலாறு

திண்டுக்கல் மாநகர வரலாறு என்பது தென்னிந்தியாவின் முக்கிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலேயே துவங்கியுள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ அரசனாகிய கரிகால் சோழன், பாண்டியர்களிடமிருந்து திண்டுக்கல் நகரைக் கைப்பற்றி தனது ஆளுமைக்கீழ் கொண்டுவந்தான். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தென்னிந்தியாவின் அதிக பகுதிகளை கைப்பற்றும்போது திண்டுக்கல் அவர்கள் வசமானது. மீண்டும் சோழர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்வசமாக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் வசமானது.

14-ஆம் நூற்றாண்டில் (1335-1378) சுல்தானியர்கள் வசமானது. 1378-ல் விஜய நகர பேரரசால் சுல்தானியர்கள் வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆழுமைக்குக் கீழ் கொண்டுவந்தனர்.

1559-ல் மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டது. 1563 விஸ்வநாத நாயக்கர் மறைவிற்குப் பின் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலம் 1602-ல் துவங்கியது. அவர் காலத்தில் 1605-ல் மலைமீது கோட்டை கட்டப்பட்டது. மலைக் கோட்டைக்குக் கீழேயும் கோட்டை கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் மிகவும் பிரபலமானது.  திருமலை நாயக்கருக்குப் பிறகு திறமையற்ற சிலர் ஆட்சி செய்தனர். அதன்பின்னர் இராணி மங்கம்மாள் மிகவும் திறமை வாய்ந்த அரசியாகத் திகழ்ந்தார்.

1742-ல் மைசூர் படை வெங்கட ராயர் தலைமையில் திண்டுக்கல்லை வெற்றி கொண்டது. அவரே திண்டுக்கல் பிரதிநிதியாகவும் ஆட்சி செய்தார். அச்சமயம் திண்டுக்கல் 18 பாளையங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து பாளையங்களும் சேர்ந்து திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு, திண்டுக்கல் சீமை என அழைக்கப்பட்டது. அந்த பாளையக்காரர்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க விரும்பினர், கிஸ்தி செலுத்தவும் மறுத்தனர். 1755-ல் வெங்கடப்பா என்பவர் வெங்கட ராயருக்கு பதிலாக பொறுப்பேற்றார். அவரால் வெற்றிகரமாக செயலாற்ற முடியவில்லை.

1755-ல் மைசூர் மகாராஜாவால் ஹைதர் அலி என்பவர் சூழலை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் ஹைதர் அலி மகாராஜாவின் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1777-ல் புருஷ்ன மிர் சாகிப் என்பவரை திண்டுக்கலின் ஆளுநராக நியமித்தார். ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டையை பலப்படுத்தினார். அவரது மனைவி திருமதி. அமீருன்னிஷா பேகம் என்பவர் பிரவசத்தின் இறந்துவிட்டார். அவரது நினைவாக மலைக் கோட்டைக்குக் கீழேயுள்ள கோட்டையின் முன்பாக மண்டபம் கட்டப்பட்டது. தற்போது அந்தக் கோட்டை பள்ளிவாசலாகவும், மண்டபம் அதற்கு முன்பாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதி அமீருன்னிஷா பேகம் நினைவாக பேகம்பூர் எனவும் அழைக்கப்படுகிறது.

1783-ல் ஆங்கிலேயர்கள் படையெடுப்பு துவங்கியது. 1784-ல் ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் மன்னருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக திண்டுக்கல் மைசூர் மன்னராட்சிக்குட்பட்டதாக இருந்தது. 1788-ல் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் திண்டுக்கலின் மன்னரானார்.

1790-ல் ஜேம்ஸ் ஸ்டீவாட் என்பவர் இரண்டாவது மைசூர் போரில் திண்டுக்கலை வென்றார். 1792-ல் மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் தான் ஆங்கில பேரரசுக்கு முதன்முதலில் உட்படுத்தப்பட்டது. 1798-ல் மலைக்கோட்டையை பலப்படுத்தி பாதுகாப்பு அரணாக மாற்றியது. நாலாபுரமும் பீரங்கிகளும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்குமிடமும் அமைக்கப்பட்டன. ஆங்கிலப்படை 1798 முதல் 1859 வரை மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர். அதன்பின் மதுரையைத் தலைநகராகக்கொண்டு, திண்டுக்கல்லை தாலுகாவாக வைத்து ஆட்சி செலுத்திவந்தனர்.  இந்திய சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 வரை ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

திண்டுக்கல் மலைக்கோட்டை பாளையக்காரர்களுக்கு முக்கிய தலமாக விளங்கியது. திப்பு சுல்தான் ஆங்கில பேரரசுக்கு எதிராக பிரஞ்சு படையுடன் சேர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் விருப்பாச்சி பாளையக்காரரும், திண்டுக்கல் பாளையத்திற்கு கோபால் நாயக்கரும், இதற்கு உதவியாக சிவகங்கை சீமையிலிருந்து அரசி வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்கள் ஹைதர் அலியின் அனுமதி பெற்று மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர்.

பெயர்க் காரணம்

காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர் ஆகும். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

‘திண்டு’ அதாவது ‘தலையணை’ போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும் மற்றும் மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் ‘திண்டு’, ‘கல்’ ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை, இது குறிக்கும் விதத்தில் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும்,10 வருவாய் வட்டங்களாகவும் மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டங்கள்

 1. திண்டுக்கல்
 2. பழனி
 3. கொடைக்கானல்

வருவாய் வட்டங்கள்

 1. திண்டுக்கல் மேற்கு
 2. திண்டுக்கல் கிழக்கு
 3. பழனி
 4. கொடைக்கானல்
 5. ஒட்டன்சத்திரம்
 6. வேடசந்தூர்
 7. நத்தம்
 8. நிலக்கோட்டை
 9. ஆத்தூர்
 10. குஜிலியம்பாறை

உள்ளாட்சி அமைப்புகள்

இம்மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம் & கொடைக்கானல் என 3 நகராட்சிகளும் மற்றும் 23 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.

ஊராட்சி அமைப்புகள்

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.

திண்டுக்கல் மாவட்ட எல்லைகள்

வடக்கில் திருப்பூர், கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை, தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

அரசியல்

இம்மாவட்டம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

 1. திண்டுக்கல்
 2. பழநி
 3. ஒட்டன்சத்திரம்
 4. ஆத்தூர்
 5. நிலக்கோட்டை
 6. நத்தம்
 7. வேடசந்தூர்

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கொடைக்கானல்

கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு.கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 6 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.

1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

குறிஞ்சி ஆண்டவர் கோயில்

குறிஞ்சி ஆண்டவர் கோவில் தமிழ்நாட்டின் கோடைமலையில் உள்ள ஒரு முருகன் கோவில்.குறிஞ்சி ஆண்டவர் கோவில் தமிழ்நாட்டின் கோடைமலையில் உள்ள ஒரு முருகன் கோவில்.

திண்டுக்கல் மலைக்கோட்டை

திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டை திண்டுக்கல் மலைக்கோட்டை ஆகும். திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது.

சௌந்தரராஜ பெருமாள் கோயில்

சௌந்தரராஜ பெருமாள் கோயில் என்பது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்திருக்கும் ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவில் விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோயிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது . நான்கு பக்கங்களிலும் உயர்ந்த உறுதியான மதில்கள் நடுவில் கோயில் பிரகாரமும் ஐந்து சந்நிதிகளும் உள்ளன.

சௌந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதகராக காட்சியளிக்கிறார். சந்நிதியின் தென் புறத்தில் சௌந்தரவல்லி தாயார் சந்நிதி உள்ளது. ஆழ்வார்களின் செப்பு திருவுருவங்களும் திருமாலின் தசாவதாரத்தினை விளக்கும் சிற்பங்களும் அமைந்துள்ளன.

பழனி முருகன் கோவில்

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூன்றாம் படை வீடாகும்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி எனும் ஊரில் அமைந்துள்ளது.இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.

இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம், இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

புனித ஜோஸப் தேவாலயம்

1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

பொருளாதாரம்

பூட்டு

திண்டுக்கல்லில் பூட்டு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டு, யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.

திண்டுக்கல் பூ வணிக மையம்

திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.

தோல் தொழிற்சாலைகள்

திண்டுக்கல் நகரில் பேகம்பூர், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு, அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும். இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *