
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று ஆகும். இதன் தலைமை இடம் சிவகங்கை. சிவகங்கை தலைநகராக இருந்தாலும், காரைக்குடி தான் இங்குள்ள மிகப்பெரிய நகரம். அது மாநகராட்சியாகவும் செயல்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் இருக்கிறது. இம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4,189 ச.கி.மீ.
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
பகுதி | தென் மாவட்டம் |
பரப்பளவு | 4189 ச.கி.மீ. |
மக்கள்தொகை (2011) | 13,39,101 |
அஞ்சல் குறியீடு | 630 551 |
தொலைபேசி குறியீடு | 04565 |
வாகனப் பதிவு | TN 63 |
- சிவகங்கை பெயர்க்காரணம்
- மாவட்ட எல்லைகள்
- வரலாறு
- மக்கட் தொகை
- கல்வி நிலையங்கள்
- ஆய்வகம்
- மாவட்ட வருவாய் நிர்வாகம்
- உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
- அரசியல்
- புகழ்பெற்ற பிரபலங்கள்
- கீழடி அகழ்வாராய்ச்சி
- போக்குவரத்து
- விமானப் பயணம்
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
- குன்றக்குடி முருகன் கோயில்
- காளீஸ்வரர் (காளையார்) கோவில்
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோவில்
- திருவேங்கடமுடையான் கோவில், தென் திருப்பதி, அரியக்குடி
- அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில், பட்டமங்கலம்
- அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில், மடப்புரம்
- அருள்மிகு ஸ்வா்ண மூா்த்தீஸ்வரர் கோவில், கண்டதேவி
- வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி
- கண்ணுடையநாயகி அம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை
- அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம்
- கொப்புடை நாயகி அம்மன் கோயில், காரைக்குடி
- இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்
- பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்
- திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்
- அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி
- இடைக்காட்டூர் தேவாலயம்
- பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்கா
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
- சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புகள்
சிவகங்கை பெயர்க்காரணம்
சிவகங்கை பெயர் எப்படி வந்தது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சசிவர்ண தேவர் என்பவர், தன் குருவான சாத்தப்பையா தியானம் செய்த இடத்துக்கு அருகில் இருந்த சிறிய நீர் ஊற்றை பெரிய குளமாக மாற்றினார். அந்த குளத்துக்கு சிவனின் கங்கை என்று பெயர் வைத்தார்கள். பிறகு, அந்த குளமும் அதன் சுற்று வட்டாரமும் சிவகங்கை என்று அழைக்கப்பட்டது. இன்னொரு கதை என்னவென்றால், சசிவர்ணர் செவ் வேங்கையை கொன்றதால் செவ்வேங்கை என்ற பெயர் சிவகங்கை ஆனது என்கிறார்கள். இப்போது மக்கள் இந்த ஊரை சிவங்கை அல்லது சிவகங்க என்றே அழைக்கிறார்கள். வட இந்தியர்கள் ஷிவ்கங்கா என்று அழைக்கிறார்கள்.
மாவட்ட எல்லைகள்
சிவகங்கை மாவட்டம் 9˚.43 மற்றும் 10˚.22 வடக்கு அட்சரேகை மற்றும் 77˚, 47 மற்றும் 78˚.49 கிழக்கு தீா்க்க ரேகையில் வரையிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 102 மீட்டர் (334 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4189 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மற்றும் திருச்சி, தென்கிழக்கில் ராமநாதபுரம், மேற்கே விருதுநகர், மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் எல்லையாக உள்ளன.
வரலாறு
இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முன்பு இராமநாதபுரம் நாட்டின் கீழ் இருந்தன. 1674 முதல் 1710-ஆம் ஆண்டு வரை கிழவன் சேதுபதி என்று அழைக்கப்பட்ட ரெகுநாத சேதுபதி 7-வது மன்னராக ஆட்சி செய்தார். சிவகங்கைக்கு அருகில் உள்ள சோழபுரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் இருந்த நாலுகோட்டையின் தலைவர் பெரியஉடையத்தேவரின் வீரத்தையும் துணிவையும் கிழவன் சேதுபதி அறிந்திருந்தார். அதனால் அவருக்கு ஆயிரம் ஆயுதம் தாங்கிய போர் வீரர்களையும் இவற்றை பராமரிக்க போதுமான அளவு நிலத்தை கொடுத்தார்.
கிழவன் சேதுபதி இறந்த பிறகு, 1710-ல் விஜயரகுநாத சேதுபதி 8-வது மன்னரானார். அவரது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை நாலுகோட்டை பெரியஉடையத்தேவரின் மகன் சசிவர்ண தேவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
மன்னர் விஜயரகுநாத சேதுபதி, சசிவர்ண தேவருக்கு வரதட்சணையாக நிலங்களையும், வரி கட்ட வேண்டாம் என்ற சலுகையையும் கொடுத்தார். அதோடு 1,000 வீரர்களை பராமரிக்க தேவையான பணத்தையும் கொடுத்தார். அவர் மேலும் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம், திருப்புவனம், தொண்டி ஆகிய துறைமுகங்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை கொடுத்தார். இதே நேரத்தில், கிழவன் சேதுபதியின் மகன் பவானி சங்கரன், ராமநாதபுரத்தை கைப்பற்றினார். அப்போது அங்கு 9-வது மன்னனாக இருந்த சுந்தரேஸ்வர ரெகுநாதசேதுபதியை பிடித்து சிறையில் வைத்தார். பிறகு, தானே ராமநாதபுரத்தின் புதிய மன்னன் என்று பிரகடனம் செய்தார். இவர் ராமநாதபுரத்தின் 10-வது மன்னனாக 1726 முதல் 1729-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
நாலுகோட்டையில் இருந்த சசிவர்ண தேவரோடு சண்டை போட்டு, அவரை அங்கிருந்து துரத்தினார். சுந்தரேஸ்வர ரெகுநாத சேதுபதியின் தம்பி கட்டய தேவர் ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று அங்குள்ள மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். காளையார்கோவில் காடு வழியாக சசிவர்ண தேவர் போகும் போது, சிவகங்கை என்ற நீரூற்று அருகே நாவல் மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்த சாத்தப்பையா என்ற முனிவரைப் பார்த்தார். தன் கஷ்டங்களை அவரிடம் சொன்னார். முனிவர் சசிவர்ண தேவரின் காதில் ஒரு மந்திரத்தை மந்திர உபதேசம் செய்து பின்பு ஊக்கப்படுத்தி, தஞ்சாவூருக்குப் போகச் சொன்னார். தஞ்சாவூரில் சசிவர்ண தேவர் ஒரு கொடிய புலியைக் கொன்று தன் வீரத்தை நிரூபித்தார். பின்பு அங்கு சசிவர்ண தேவர் தன்னைப் போன்ற அகதியாக இருந்த கட்டய தேவரைச் சந்தித்தார். இவர்கள் இருவரின் நடத்தையில் மகிழ்ந்த தஞ்சை மன்னர், இராஜ்ஜியங்களை மீண்டும் பெற அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். பவானி சங்கரை எதிர்க்க பெரிய படையை அனுப்பினார். சசிவர்ண தேவர் மற்றும் கட்டய தேவர் ஆகிய இருவரின் வழிகாட்டுதலில் தஞ்சை படை ராமநாதபுரம் நோக்கிச் சென்றது. அவர்கள் ஒரியூரில் நடந்த போரில் பவானி சங்கரை தோற்கடித்து 1730-ல் ராமநாதபுரத்தைக் கைப்பற்றினர். இப்படி கட்டய தேவர் ராமநாதபுரத்தின் 11-வது மன்னர் ஆனார்.
முதலாவது அரசர் சசிவர்ண தேவர் (1730 – 1750)
சசிவர்ண தேவர் போரில் வெற்றி பெற்ற கட்டய தேவர் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். அதில் மூன்று பகுதிகளை தன்னிடம் வைத்துக்கொண்டார். மீதி இரண்டு பகுதிகளை நாலு கோட்டை சசிவர்ண தேவருக்குக் கொடுத்தார். சசிவர்ண தேவர் ராஜா முத்து விஜயரகுநாத பெரியஉடையனத்தேவர் என்ற பெயரில் சிவகங்கையை ஆட்சி செய்தார்.
இரண்டாவது அரசர் முத்து வடுக நாத பெரியஉடையத்தேவர் (1750 – 1772)
சசிவர்ண தேவர் 1750-ஆம் ஆண்டில் இறந்தார். அவரது மகன் முத்து வடுகநாத பெரியஉடையத்தேவர் அடுத்த அரசர் ஆனார். அவர் சிவகங்கையின் 2-வது மன்னர். அவரது மனைவி வேலுநாச்சியார் அவருக்கு நண்பன், தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டியாக இருந்தார். தாண்டவராய பிள்ளை நாட்டின் முதல் அமைச்சராக திறம்பட பணியாற்றினார். முத்து வடுகநாதர் ஆங்கிலேயர்களை எதிர்க்க, அவர்களுக்கு வணிக உரிமை தராமல், டச்சுக்காரர்களுக்கு கொடுத்தார். ஆங்கிலேயர்கள் சிவகங்கையை கட்டுப்படுத்த விரும்பினர். அதோடு, டச்சுக்காரர்களுடன் உறவு வைத்துக்கொள்வதை தடுக்கவும் முயன்றனர். ஆங்கிலேயர்கள் சிவகங்கையின் இரு பக்கங்களைத்தாக்க கிழக்கிலிருந்து ஜோசப்ஸ்மித் மற்றும் மேற்கில் இருந்து பெஞ்சூர் 1772-ஆம் ஆண்டு சிவகங்கை பளையம் மீது படையெடுத்தனர். சிவகங்கை முழுவதும் முட்புதர்கள் நிறைந்திருந்தன. ராஜா பாதுகாப்புக்காக சாலைகளில் தடைகளையும், காளையார்கோவில் காடுகளில் அகழிகளையும் அமைத்தார். 1772 ஆம் ஆண்டு ஜூன் 21-ல் ஆங்கிலேயர்கள் சிவகங்கையை பிடித்தனர். மறுநாள் காளையார்கோவில், கீரனூர், சோழபுரம் ஆகியவற்றையும் கைப்பற்றினர். ஜூன் 25-ல் நடந்த போரில் ராஜா முத்து வடுகநாதரும் பல வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். வேலுநாச்சியார் முத்து வடுக நாதரை அடக்கம் செய்துவிட்டு, மகள் வெள்ளச்சிநாச்சியாருடனும், தாண்டவராயன் பிள்ளையுடனும் விருப்பாச்சி சென்றார். பின்னர் வெள்ளைமருது, சின்னமருது ஆகியோர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்களாக இணைந்தனர்.
மூன்றாவது ராணி வேலு நாச்சியார் (1772 – 1780)
ராணி வேலு நாச்சியாரும் அவர் மகள் வெள்ளச்சி நாச்சியாரும் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள விருப்பாச்சிபாளையத்தில் கோயில நாயக்கரின் பாதுகாப்பில் இருந்தார்கள். நவாப்புக்கு வேலு நாச்சியாரோடு போராடுவது கடினமாக இருந்ததால், அவர் வேலு நாச்சியார், வெள்ளச்சி நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரை சிவகங்கைக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். ஆனால் அதற்கு நவாப்புக்கு வரி கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, சின்னமருது முதல் அமைச்சராகவும், வெள்ளைமருது படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இப்படியாக, கணவரை இழந்த ராணி வேலு நாச்சியார் 1780-ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார்.
ராணி வேலு நாச்சியார் தன் நாட்டை நிர்வகிக்க மருது சகோதரர்களிடம் அதிகாரத்தை கொடுத்தார். சில ஆண்டுகளில் ராணி வேலு நாச்சியார் இறந்து போனார். அவர் எப்போது இறந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை (ஆனால் 1796-ல் இறந்திருக்கலாம்).
மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள் உடையார் சேர்வை மூக்கையா பழனியப்பன் சேர்வை மற்றும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிகளின் மகன்கள். இவர்கள் ராமநாதபுரம் கொங்காலு தெருவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாளையக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. முத்து வடுகநாத தேவரிடம் பணிபுரிந்த இவர்கள், பின்னர் தளபதிகளாக உயர்ந்தனர். வளரிகுச்சி எறியும் கலையில் வல்லுநர்கள். ஆங்கிலேயர்களுடன் நடந்த போர்களில் வளரி ஆயுதத்தை பயன்படுத்தினார்கள். 12,000 வீரர்களுடன் சிவகங்கையை சுற்றி வளைத்து, நவாப் பகுதிகளை கைப்பற்றினார்கள். நவாப் சென்னை கவுன்சிலிடம் உதவி கேட்டார். 1789 ஏப்ரல் 29-ல் கொல்லங்குடியில் நடந்த பெரும் போரில், ஆங்கிலேயப் படைகளை மருது சகோதரர்களின் படை வென்றது.
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி சந்தித்து பேசி முடிவுகள் எடுப்பார்கள். 1799-ம் ஆண்டு அக்டோபர் 17-ல் கயத்தாறில் கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள். பிறகு, கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு சின்னமருது சிவகங்கையில் தஞ்சம் அளித்தார். சின்னமருது தென்னிந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று ஜம்புதீவில் அறிவிப்பு விடுத்தார். நாட்டை காப்பாற்ற போராடியதால் மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் திருப்பத்தூர் கோட்டையில் பெரியமருதும் சின்னமருதும் தூக்கிலிடப்பட்டனர். கடைசி வரை வீரமாகப் போராடிய அவர்களின் சிறுவயல் கிராமத்தை ஆங்கிலேயர்கள் எரித்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் பிரிக்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது. 1985-ம் ஆண்டு மார்ச் 15 முதல் இந்த மாவட்டம் செயல்படத் தொடங்கியது. மூன்று முதலமைச்சர்களும் இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றினர். எம்ஜிஆர் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்றும், கருணாநிதி தேவர் திருமகனார் மாவட்டம் என்றும், ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் என்றும் பெயர் வைத்தனர். ஆனால் கடைசியாக 1997-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் நிலைத்தது.
மக்கட் தொகை
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13,39,101 பேர் வாழ்கின்றனர். இதில் 6,68,672 பேர் ஆண்கள். 6,70,429 பேர் பெண்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 15.90% ஆக உயர்ந்துள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 316 பேர் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை 79.85% ஆக உள்ளது. ஆறு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 1,37,235 பேர் இருக்கிறார்கள்.
இந்த மாவட்டத்தில் 88.57% பேர் இந்துக்கள். 5.64% பேர் கிறித்தவர்கள். 5.55 % பேர் முஸ்லிம்கள். மீதி 0.24% பேர் மற்றவர்கள். சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 26-ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது.
கல்வி நிலையங்கள்
பல்கலைக்கழகம்
- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
பள்ளிகள்
- 206 – அரசு பள்ளிகள்
கல்லூரிகள்
- ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை, சிவகங்கை
- இதயா மகளிர் கல்லூரி, சருகணி, சிவகங்கை
- மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை
- அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை
- டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி.
- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, காரைக்குடி
- அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி
- டாக்டர். உமையாள் இராமநாதன் கலை கல்லூரி, காரைக்குடி
- ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரி, திருப்புத்தூர்
- சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவகோட்டை
ஆய்வகம்
- மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி
- கீழடி அகழாய்வு மையம்
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டம், 9 வருவாய் வட்டங்கள், 521 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டம்
- சிவகங்கை
- தேவக்கோட்டை
வருவாய் வட்டங்கள்
- சிவகங்கை
- மானாமதுரை
- இளையாங்குடி
- திருப்புவனம்
- காளையார்கோவில்
- காரைக்குடி
- தேவக்கோட்டை
- திருப்பத்தூர்
- சிங்கம்புணரி
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 3 நகராட்சியும், 12 பேரூராட்சிகளும், 12 ஊராட்சி ஒன்றியகளும், 445 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- சிவகங்கை
- காரைக்குடி
- தேவக்கோட்டை
பேரூராட்சிகள்
- நாட்டரசன்கோட்டை
- மானாமதுரை
- இளையாங்குடி
- திருப்புவனம்
- கானாடுக்காத்தான்
- கோட்டையூர்
- கண்டனூர்
- பள்ளத்த்தூர்
- புதுவயல்
- திருப்பத்தூர்
- நெற்குப்பை
- சிங்கம்புணரி
ஊராட்சி ஒன்றியங்கள்
- சிவகங்கை
- காளையார்கோவில்
- மானாமதுரை
- திருப்புவனம
- இளையாங்குடி
- தேவகோட்டை
- கண்ணங்குடி
- சாக்கோட்டை
- கல்லல்
- திருப்பத்தூர்
- சிங்கம்புனரி
- எஸ் புதூர்
அரசியல்
இந்த மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 1 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.
சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிகள்
புகழ்பெற்ற பிரபலங்கள்
ராணி வேலு நாச்சியார்

வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர். 1730-ல் இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தார். சிறு வயதில் ஆண் குழந்தை போலவே வளர்க்கப்பட்டார். இவர் பல மொழிகளும், போர்க் கலைகளும் கற்றார்.
1746-ல் இராணி வேலு நாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார். 1772 ஜூன் 25ல் நடந்த போரில் அவரது கணவர் வீர மரணம் அடைந்தார். உடனே வேலு நாச்சியார் தன் மகள் வெள்ளச்சியுடன் விருப்பாச்சிக்கு ஓடினார்.
அங்கே வெள்ளை மருது, சின்ன மருது என்ற வீரர்கள் அவருக்கு உதவினர். நவாப்புக்கு வேலு நாச்சியாரோடு போராடுவது கடினமாக இருந்ததால், அவர் வேலு நாச்சியார், வெள்ளச்சி நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரை சிவகங்கைக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். ஆனால் அதற்கு நவாப்புக்கு வரி கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். மருது சகோதரர்களின் உதவியுடன் 1780 வரை சிவகங்கையை ஆண்டார்.
வேலு நாச்சியார் 1796-ல் இறந்ததாகக் கருதப்படுகிறது. அவர் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளி என்ற பெருமைக்குரியவர்.
மருது சகோதரர்கள்

மருது சகோதரர்களின் பெற்றோர்கள் உடையார் சேர்வை மூக்கையா பழனியப்பன் சேர்வையும், பொன்னாத்தாள் என்ற ஆனந்தாயியும் ஆவர். இவர்கள் ராமநாதபுரம் கொங்காலு தெருவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாளையக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சேர்வைக்காரன் என்பது ஒரு சாதிப் பெயர். மருது என்பது அவர்களின் குடும்பப் பெயர். இவர்கள் முதலில் முத்து வடுகநாத தேவரிடம் வேலை செய்தனர். பிறகு படைத் தலைவர்களாக உயர்ந்தனர்.
பூமாராங்க்(வளரி) என்பது இந்தியாவில் காணப்படும் சிறப்பான ஆயுதம். இந்த ஆயுதங்கள் இரண்டு விதமாக இந்தியாவில் பயன்படுகிறது. இந்த ஆயுதங்கள் பொதுவாக மரத்தால் செய்யப்பட்டவை. இதன் மேற்பகுதி கனமாகவும், வெளிப்புற விளிம்பில் கூர்மையாகவும் இருக்கும். தமிழில் இதை வளரிகுச்சி என்று அழைப்பர்.மருது சகோதரர்கள் வளரி எறிவதில் மிகவும் திறமையானவர்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்த போர்களில் அவர்கள் வளரியை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.
12,000 வீரர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்கையைச் சுற்றி வளைத்து, நவாப்பின் பகுதிகளை கைப்பற்றினார்கள். நவாப் உதவி கேட்டு 1789 மார்ச் 10-ல் சென்னை கவுன்சிலுக்கு செய்தி அனுப்பினார். ஆங்கிலப் படைகள் 1789 ஏப்ரல் 29-ல் கொல்லங்குடியில் மருது படைகளைத் தாக்கின. ஆனால் அப்போரில் மருது படைகள் வெற்றி பெற்றன.
மருது சகோதரர்கள் பாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மனுடன் நட்புடன் இருந்தனர். அடிக்கடி அவருடன் ஆலோசனை செய்தனர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, அவரது தம்பி ஊமைத்துரைக்கு சின்னமருது அடைக்கலம் கொடுத்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இறுதியில், நாட்டை காக்கப் போராடிய மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். 1801 அக்டோபர் 24-ல் திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியனும் அவரது சகோதரர் வெள்ளைமருதுவும் தூக்கிலிடப்பட்டனர்.
கீழடி அகழ்வாராய்ச்சி

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்துக்குப் பிறகு தமிழகத்தில் நகர நாகரீகம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் அது தவறு என்பதை கீழடி அகழாய்வு காட்டுகிறது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பே வைகை ஆற்றங்கரையில் சிறந்த நாகரீகம் இருந்தது.
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் கீழடி உள்ளது. இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் இதுதான் மிகப் பெரியது.
இங்கே 40க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி ஆராய்ந்த போது, பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் நிறைய கிடைத்தன. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பொருட்கள் எல்லாமே இங்கே கிடைத்திருப்பதை கண்டு வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பழங்கால நூல்களான சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள கல்மணிகள் 600 வரை கீழடியில் கிடைத்துள்ளன. அதோடு முத்துக்கள், பெண்கள் கொண்டையில் செருகும் ஊசிகள், சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்ற சங்ககால பொருட்களும் நிறைய கிடைத்துள்ளன.
இங்கு நூல் நூற்க உதவும் தக்ளியும் கிடைத்துள்ளது. இது அந்தக் காலத்தில் மக்கள் துணி நெய்து உடுத்தி வாழ்ந்ததை காட்டுகிறது. பட்டிணப்பாலையில் சொல்லப்பட்ட சுடுமண் உறைகிணறுகளும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கல் வீடுகளுக்கு அருகில் இந்த கிணறுகள் இருந்தன. பல செங்கல் வீடுகளும், அவற்றின் மேற்கூரையில் ஓடுகள் பதித்திருந்த தடயங்களும் கிடைத்துள்ளன.
குடிநீருக்கும் வீட்டு உபயோகத்திற்கும் உறைகிணறுகளை அமைக்கும் பழக்கம் சங்ககாலம் முதல் இன்று வரை தொடர்கிறது. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில், பட்டிணப்பாலை என்ற பாடல் உள்ளது. அதில் பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதியில் உறைகிணறுகள் இருந்ததைப் பற்றி படிக்க முடிகிறது. அப்படிப்பட்ட பழைய உறைகிணறு ஒன்று கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குளியலறைகள் இருந்திருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு டன் அளவு கருப்பு – சிவப்பு மட்கல ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலிலும் இதே போன்ற தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன.
குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன. இது பழங்கால மக்கள் வெளிநாடுகளுடன் வணிகம் செய்தார்கள் என்பதை காட்டுகிறது. தென்தமிழகத்தில் கிடைத்த வெள்ளை நிற மண்பாண்டங்களும், கொங்கு பகுதியில் மட்டும் காணப்படும் ரசட் கலவை பூசிய மண்பாண்டங்களும் இங்கே கிடைத்துள்ளன. இதன் மூலம் கொங்கு பகுதியுடன் வணிகத் தொடர்பு இருந்தது தெரிகிறது.
பழைய காலத்து செங்கல் கட்டடங்கள் பொதுவாக கிடைப்பது அரிது. ஆனால் கீழடியில் நிறைய செங்கல் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் வைகை ஆற்றின் ஓரமாக ஒரு பெரிய வணிகப் பாதை இருந்தது. மதுரையில் இருந்து இராமேஸ்வரம், அழகன்குளம் துறைமுகத்திற்கு கீழடி-திருப்புவனம் வழியாக பாதை சென்றது. மதுரைக்கு அருகில் இருந்த கீழடி ஒரு முக்கிய வணிக நகரமாக இருந்தது.
அழகன் குளத்தில் நடந்த ஆய்வில் பழைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மட்பாண்டங்கள் கிடைத்தன. இதே போல கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளன. அழகன் குளம், கடற்கரை நகரத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக இருந்திருக்கலாம். வெளிநாட்டு வணிகர்கள் கடல் வழியாக வந்து இந்த ஊர் வழியே சென்றிருக்கலாம். இங்கு கிடைத்த தடயங்கள், சான்றுகள் இதை உறுதி செய்கின்றன. அதனால் இந்த இடம் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முதல் ஆய்வை விட இரண்டாவது ஆய்வில் பத்துக்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பழங்கால மக்கள் பயன்படுத்திய முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேல் பழைய பொருட்கள் கிடைத்துள்ளன. மற்ற இடங்களில் நடந்த ஆய்வுகளை விட இங்கு அதிக கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்ககாலத்தில் கட்டிடங்கள் இல்லை என்ற கருத்து தவறு என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. கீழடியில் கிடைத்த கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததை நிரூபிக்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுதான் முதல் முறை.
போக்குவரத்து
- தேசிய நெடுஞ்சாலை 85 கொச்சி-மூணார்-போடிநாயக்கனூர்-தேனி-மதுரை சிட்டி-சிவகங்கை-தொண்டி.
- தேசிய நெடுஞ்சாலை 36 விழுப்புரம் – பன்ருடடி-கும்பகோணம் – தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை-மானமதுரை.
- தேசிய நெடுஞ்சாலை 87 திருபபுவனம் – மானமதுரை.- பரமக்குடி – ராமநாதபுரம்- ராமேஸ்வரம் – தனுஷ்கோடி.
- மாநில நெடுஞ்சாலை SH 34 ராமநாதபுரம்-இளையங்குடி-சிவகங்கை-மேலூர் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
விமானப் பயணம்
மதுரை விமான நிலையம் சிவகங்கைக்கு மிக அருகில் உள்ளது. மதுரை விமான நிலையம் (IXM) சிவகங்கையில் இருந்து 43 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து விமானம் மூலம் பயணம் செய்யலாம். சிவகங்கையில் இருந்து 125 கி.மீ. தொலைவில் சிவில் விமான நிலையம் (TRZ), திருச்சிராப்பள்ளி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களில் ஒன்று கற்பக விநாயகர் கோவில். இக்கோவில் காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவில் பிள்ளையார்பட்டி என்ற ஊரில் இருக்கிறது. மதுரையில் இருந்து 71 கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தூரத்திலும் இந்த கோவில் இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் சிறப்பு என்னவென்றால், நான்கு கைகளுக்கு பதிலாக இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. மூலவர் 6 அடி உயரத்தில் வலம்புரியாக அமர்ந்திருக்கிறார். இக்கோவிலில் 15-க்கும் மேற்பட்ட பழைய கல்வெட்டுக் குறிப்புகள் இந்தக் கோவில் மிகப் பழமையானது என்பதை காட்டுகின்றன.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு 3 லிங்கங்களும் (திருவீசர், மருதீசர், செஞ்சதீஸ்வரர்), 3 அம்மன்களும் (சிவகாமி, வடமலர் மங்கை, சௌந்திரநாயகி) ஒரே இடத்தில் இருக்கிறார்கள். இது இந்த கோவிலின் தனிச்சிறப்பு.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
குன்றக்குடி முருகன் கோயில்

குன்றம் என்றால் “மலை”; குடி என்றால் “கிராமம்” மலை மேல் இருக்கும் கிராமம் என்பதால் தான் இதற்கு குன்றக்குடி என்று பெயர் வந்தது. இங்கே இருக்கும் முருகப்பெருமானை சண்முகநாதர் என்று அழைக்கிறார்கள். சண்முகநாதருக்கு ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உண்டு.
காரைக்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ தூரத்திலும் குன்றக்குடி இருக்கிறது. மலையின் மேற்கு பக்கம், அடிவாரத்தில் மூன்று பழைய குகைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிற்க்காலத்தில் இந்தக் கோயில்களில் பல சிலைகள் வைக்கப்பட்டன. இந்த குகைக் கோயில்கள் எல்லாம் சிவபெருமானுக்காக கட்டப்பட்டவை. தொல்பொருள் ஆராய்ச்சியாளா்களுக்கு பிடித்தமான பல கற்கால கல்வெட்டுகள் இங்கே உள்ளன.
காளீஸ்வரர் (காளையார்) கோவில்

பழங்காலத்தில் காளையார் கோவிலை கானப்பேர் என்று அழைத்தார்கள். இதற்கு சொர்ண காளீஸ்வரர் கோவில் என்றும அழைக்கப்படுகிறது. இங்கே மூன்று செயலுக்குக்கும் மூன்று கோவில்கள் உள்ளன – ஒன்று படைப்பதற்கு, ஒன்று காப்பதற்கு, மற்றொன்று அழிப்பதற்கு. பாண்டிய நாட்டின் 10வது தேவார தலமாக இது இருக்கிறது.
சிவகங்கை மன்னர்களின் கோட்டையாக இருந்தது இந்த இடம். சிவகங்கையில் இருந்து 15 கி.மீ தூரத்தில், தேவகோட்டை – மானாமதுரை சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. காளீஸ்வரர் கோவில் இருப்பதால் தான் இந்த ஊருக்கு காளையார் கோவில் என்ற பெயர் வந்தது.
150 அடி உயரமான பெரிய கோபுரமும், ஆனைமடு என்ற தெப்பக்குளமும் இந்த கோவிலின் சிறப்பு. மருது சகோதரர்கள் மூவரின் திருஉருவச்சிலைகளும் இங்கே உள்ளன. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் இங்கு வந்து பாடல்கள் பாடியுள்ளனர்.
இத்தலத்தில் மூன்று இறைவனும் மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.
- சொர்ணகாளீஸ்வரர் – சொர்ணவல்லி
- சோமேசர் – சவுந்தரநாயகி
- சுந்தரேசுவரர் – மீனாட்சி
வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்கள் இங்கே இங்கு கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்கள். மருது சகோதரர்களின் சமாதி பழைய வாசலுக்கு கிழக்கே உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோவில்

திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவில், சிவகங்கை சாலையில் மிகப்பழமையான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோவில் உள்ளது. இதை தென்னிந்தியாவின் பத்ரிநாத் என்று அழைப்பார்கள். ஆழ்வார்கள் பாடிய விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பெரியாழ்வார் பாடிய பெரியாழ்வார் திருமொழியில் இங்கு தான் கிருஷ்ணர் பிறந்தார் என்று பாடியுள்ளார்.
இக்கோவிலில் உள்ள அஷ்டங்க விமானம் 96 அடி உயரம் உள்ளது. இங்கே மூலவரை மூன்று நிலைகளில் காணலாம் – நின்ற கோலம், உட்கார்ந்த கோலம், படுத்த கோலம். இதுவே இந்த கோவிலின் சிறப்பம்சம் ஆகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கூடி கோஷ்டியாக விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்ததை பற்றி முடிவு செய்த இடம் என்பதால் இதற்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்தது. இங்கே உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரை காணலாம். இக்கோவில் கோபுரம் 85 அடி உயரம் உள்ளது. அதன் மேல் உள்ள தங்கக்கலசம் 5 அடி உயரம்.
இத்தலத்தின் முக்கிய விழாக்கள் மாசி மாதம் தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி, நவராத்திரி போன்றவை ஆகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
திருவேங்கடமுடையான் கோவில், தென் திருப்பதி, அரியக்குடி

காரைக்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் அரியக்குடியில் தென் திருப்பதி கோவில் இருக்கிறது. இது தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று. இங்கே வெங்கடாச்சலபதி முதன்மைக் கடவுளாக இருப்பதால், மக்கள் இக்கோவிலை மிகவும் புனிதமாக மதிக்கிறார்கள். இந்த கடவுளை திருவேங்கடமுடையான் என்றும் அழைக்கிறார்கள்.
இக்கோவில் பாலாஜியின் பூலோக உறைவிடங்களுள் இதுவும் ஒன்று என மக்கள் நம்புகிறார்கள். திருமலையில் வழிபடுவது போலவே இங்கும் வழிபடலாம் என்பதால், இதை தென் திருப்பதி என்று சொல்கிறார்கள்.
கோவில் பழுதடைந்ததால் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. பழைய அமைப்பு கொஞ்சம் மாறினாலும், வரும் காலத்துக்கு கோவிலைக் காப்பாற்ற இது உதவியது. கோவிலின் வடக்குப் பக்கத்தில் உள்ள கல்கருடன் என்றழைக்கப்படும் கல்லால் செய்த கருடன் சிலை இன்னும் பழைய நிலையிலேயே உள்ளது.
தினமும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கென்றே, பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள்.
அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில், பட்டமங்கலம்

சிவபெருமான் பிருங்கி, நந்தி தேவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு சிவனின் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகை பெண்கள் ஆறு பேர் வந்தனர். அவர்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்த்தயேந்தி, அம்பா, துலா ஆவர். அவர்கள் சிவனிடம் விழுந்து வணங்கி, எங்களுக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுத் தாருங்கள் என்று கேட்டனர். சிவனுக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. பார்வதி தேவி அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று சிவனிடம் கேட்டுக்கொண்டார். பார்வதியின் வேண்டுகோளை ஏற்று சிவன் கற்றுத்தர ஆரம்பித்தார். ஆனால் அந்த பெண்கள் கவனமாக கேட்கவில்லை. சிவனையும் பார்வதியையும் மறந்து கவனக்குறைவாக இருந்தனர்.
இதைப் பார்த்த சிவன் கோபத்தில், “நீங்கள் பட்டமங்கை என்ற இடத்தில் கற்களாக மாறுங்கள்” என்று சாபம் கொடுத்தார். தங்கள் தவறை உணர்ந்த பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி வேண்டினா். சிவனும் அவர்களை மன்னித்து விட்டார்.
அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில், மடப்புரம்

மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில் மடப்புரம் என்ற ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. இங்கே பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 500-1000 ஆண்டுகள் மிகப்பழமையானது. கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. இங்குள்ள பத்திரகாளியம்மன் நீதி தரும் தெய்வமாக மக்கள் நம்புகிறார்கள். அம்மனின் தலையில் சுடர் விடும் அக்கினியை கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.
காளி சிலை வெளியில் ஒரு மேடையில் உள்ளது. காளியைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தில், அம்மனின் தலைக்கு மேலே ஒரு பெரிய குதிரை இரண்டு கால்களை உயர்த்தி நிற்கிறது. 13 அடி உயரமுள்ள அம்மனின் இருபுறமும் இரண்டு பூதங்கள் காவல் புரிகின்றன. அம்மன் கையில் திரிசூலம் ஏந்தி நிற்கிறார்.
இங்கு பக்தர்கள் அம்மனுக்கு 100 எலுமிச்சம் பழம், குதிரைக்கு 1000 எலுமிச்சம்பழ மாலையும் படைக்கிறார்கள். கோவிலின் காவல் தெய்வம் அய்யனார். அவர் காளிக்கு அடைக்கலம் கொடுத்து தன் குதிரைகளில் ஒன்றையும் அவளுக்குப் பாதுகாப்பாக அளித்தமையால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். கோவிலின் தல விருட்சம் வேப்பமரம்.
பண கொடுக்கல் வாங்கள் பிரச்சனை, சொத்து பிரச்சனை, குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத போது, குளித்து ஈர உடையுடன் காளி கோவிலுக்கு வந்து காளி அம்மனை நீதி தேவதையாக நம்பி, அவள் முன் காசு வெட்டிப்போட்டு தங்கள் பிரச்சனைகளை சொல்லி அழுவார்கள். பின்னர் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்வார்கள்.
ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேஷ நாள் தான். மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையில் 1008 விளக்கு பூஜை, பால் அபிஷேகம், எலுமிச்சை விளக்கு ஆகியவை நடைபெறும். இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அருள்மிகு ஸ்வா்ண மூா்த்தீஸ்வரர் கோவில், கண்டதேவி
கண்டதேவி கிராமம் தேவகோட்டையில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு இருக்கும் கோவிலில் உள்ள சிவபெருமானை ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர் அல்லது சிறகிலிநாதன் என்று அழைக்கிறார்கள். அம்மனின் பெயர் பெரியநாயகி அம்மன். 350 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவிலை சிவகங்கை தேவஸ்தானம் பார்த்துக்கொள்கிறது. இக்கோவில் சிவகங்கை மன்னரின் வாரிசுகளுக்கு சொந்தமானது.
இராமாயணக் கதையில் இராவணன் சீதையைக் கடத்திய நிகழ்வுடன் இந்தக் கோவில் தொடர்புடையது. சீதையைக் காப்பாற்ற ஜடாயு போராடும் போது, இராவணன் அவரது சிறகை வெட்டினான். ஜடாயு இராமரின் மடியில் இறந்தார். அந்த இடத்தில் இராமர் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, அதற்கு சிறகிலிநாதர் என்று பெயர் வைத்தார். இலங்கையில் சீதையைப் பார்த்த அனுமன், இந்த இடத்தில் தான் இராமரிடம் கண்டேன் தேவியை என்று சொன்னார். அந்த சொற்றொடர் நாளடைவில் கண்டதேவி ஆக மாறியது.
கோவிலுக்குப் பின்னால் ஜடாயு தீர்த்தம் என்ற பெரிய குளம் உள்ளது. இந்தக் குளம் கோடை காலத்திலும், வறட்சி காலத்திலும் கூட வற்றுவதில்லை என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஆனி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி
கொல்லங்குடி என்ற ஊர் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ தொலையில் மதுரை – தொண்டி சாலையில் இருக்கிறது. இந்த ஊரின் பெயர் வந்த காரணம் என்னவென்றால், இங்கு கொல்லர்கள் (உலோக வேலை செய்பவர்கள்) வாழ்ந்தார்கள். மருது சகோதரர்களின் போர்க்கருவிகளை இவர்கள் செய்து கொடுத்தார்கள். இங்குள்ள முக்கியமான கோவில் வெட்டுடையார் காளி அம்மன் கோவில். இது அரியாக்குறிச்சி என்ற ஊரில் உள்ளது. கொல்லங்குடியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கோவிலில் காளி அம்மன் இடது காலைத் தூக்கி வைத்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே அய்யனார் வலது காலைத் தூக்கி வைத்து அமர்ந்திருக்கிறார். இக்கோவிலின் சுவர்களில் காளி அம்மனின் கதைகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. காளி அம்மன் சன்னதிக்கு முன்னால் ஆஞ்சநேயர், சோலைமலைச்சாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுக்காளி, பைரவர் ஆகியோரின் சிலைகள் உள்ளன.
யாராவது தப்பு செய்தால், அவர்களைத் தண்டிக்க ‘நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டு’ என்ற வழக்கம் இருக்கிறது. தவறு செய்பவர்களை அம்மன் தண்டிப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். நம்பிக்கையை காப்பாற்றாதவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க அம்மன் கோவிலில் காசு வெட்டி வணங்குகிறார்கள். இந்த வழக்கத்திற்கு அரசு அனுமதி உண்டு.
கோவிலில் பங்குனி மாதத்தில் பத்து நாள் திருவிழா நடக்கும். மேலும் பங்குனி சுவாதி, விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, மார்கழி பூஜை, பௌர்ணமி பூஜை போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
கண்ணுடையநாயகி அம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை
கண்ணுடைநாயகி அம்மன் கோவில் சிவகங்கையில் இருந்து 9 கி.மீ தொலைவில் நாட்டரசன்கோட்டையில் இருக்கிறது. இந்தக் கோவில் 18-ஆம் நூற்றாண்டில் நாகரதர்கள் கட்டினார்கள். இன்றும் அவர்கள் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள்.
இங்கு இருக்கும் கண்ணத்தாள் (கண்ணுடைநாயகி அம்மன்) பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையைக் கொடுப்பாள். கண் தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பாள். கோவிலின் முன்னால் பெரிய குளம் உள்ளது. இந்தக் கோவிலின் தெய்வமான கண்ணாத்தாள் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மன் நின்ற கோலத்தில், எட்டுக் கைகளுடன், உடுக்கை, சூலம் ஏந்தி, மகிஷாசுரனை வதைப்பது போல காட்சி தருகிறாள். கோவிலின் கட்டிடக்கலையும், கோபுரத்தின் மேல் உள்ள தங்கக் கலசங்களும் பெயர் பெற்றவை.
பரம்பரை பரம்பரையாக பாரசைவ குடும்பத்தினர் அம்மனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். கண் பார்வை இல்லாதவர்கள் 48 நாட்கள் விரதமிருந்து, கோயிலில் தங்கி, தினமும் அம்மனை வணங்கி, அம்மனுக்கு செய்யும் அபிஷேக நீரை கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். குழந்தை பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். கண்ணாத்தாள் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் போன்ற பெயர்களை வைக்கிறார்கள்.
கம்பராமாயணம் எழுதிய கம்பர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தை நாட்டரசன்கோட்டையில் கழித்தார். அவரது சமாதி இங்கு இருக்கிறது. வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடக்கும். களியாட்டத் திருவிழா மிகவும் சிறப்பானது. ஆடி மாதத்தில் முழுக்களியாட்டம், புரட்டாசியில் நவராத்திரி, தை மாதத்தில் தைலக்காப்பு விழா நடக்கிறது.
அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம்

தாயமங்கலத்தில் இருக்கும் முத்து மாரியம்மன் மிகவும் சக்தி தெய்வம். தாயமங்கலம் முத்து மாரியம்மனிடம் வந்து வேண்டிக்கொள்பவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். 1914-ல் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் கருங்கல்லால் செய்யப்பட்ட அம்மன் சிலை உள்ளது. கோவிலுக்கு அருகில் பெரிய குளம் ஒன்று இருக்கிறது.
300 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் முத்துச்செட்டியார் என்ற வணிகர் வாழ்ந்தார். ஒரு நாள் சின்னமனூரில் அழுது கொண்டிருந்த குழந்தை ஒன்றைக் கண்டார். குழந்தை இல்லாத அவர், குழந்தையை எடுத்துச் செல்லும் போது, குளிக்க ஆற்றில் இறங்கினார். திரும்பி வந்த போது குழந்தை மறைந்துவிட்டது. அன்றிரவு கனவில் அந்தக் குழந்தை தோன்றி, தனக்கு ஒரு கோவில் கட்டச் சொன்னது. முதலில் மணலில் சிலை செய்து வணங்கினார். பின்னர் கோவில் கட்டப்பட்டது. இன்றும் முத்துச்செட்டியாரின் வாரிசுகள் கோவிலைப் பராமரித்து வருகிறார்கள்.
பங்குனி மாதம் 15-ல் திருவிழா தொடங்கி, 25-ல் முடிவடைகிறது. நவராத்திரி விழாவும் சிறப்பாக நடக்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் 108 பால்குடங்களும், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜையும் நடைபெறும். கோவில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
கொப்புடை நாயகி அம்மன் கோயில், காரைக்குடி

காரைக்குடியில் இருக்கும் கொப்புடை நாயகி அம்மன் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்கே கொப்புடை நாயகி அம்மன் மூலவராகவும், உற்சவராகவும் இருக்கிறார். இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. தென்னிந்தியாவில் உள்ள பக்தர்கள் இந்த கோவிலை மிகவும் போற்றுகிறார்கள்.
காரைக்குடிக்கு அருகே செஞ்சை என்ற ஊர் முன்பு காடாக இருந்தது. இந்த காட்டில் காட்டம்மன் கோவில் இருக்கிறது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் அக்கா தங்கை. கொப்புடையம்மன் தான் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் கொப்புடையம்மனுக்கு குழந்தைகள் இல்லை. கொப்புடையம்மன் தன் அக்காவின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது, கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன், தன் குழந்தைகளை தங்கையிடம் காட்ட விரும்பவில்லை. அதனால் பிள்ளைகளை மறைத்து வைப்பாள். இதை அறிந்த கொப்புடையம்மன் கோபத்தில் அந்த குழந்தைகளை கல்லாக மாற்றிவிட்டாள். பிறகு காரைக்குடிக்கு வந்து தெய்வமாக மாறினாள் என்று கோயிலின் தல வரலாறு சொல்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே சிவன் மூலவராகவும் உற்சவராகவும் ஒரே உருவில் இருக்கிறார். அதேபோல, காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் மட்டுமே அம்மன் மூலவராகவும் உற்சவராகவும் ஒரே உருவில் இருக்கிறார். இக்கோயிலின் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி குதிரை மீது அமர்ந்த நிலையில் இருப்பது வேறு எந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பு ஆகும்.
தோல் நோய், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். உடல் நலம் சரியில்லாதவர்கள் இங்கே வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். முழு நம்பிக்கையோடு வருபவர்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.
கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்
இளையான்குடியில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிவன் கோயில். இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம்.
இங்கு தான் இளையான்குடி மாறநாயனார் பிறந்து முக்தி அடைந்தார். இந்த கோயிலில் மாறநாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. மக்கள் அவரை பசிப்பிணி மருத்துவர் என்று அழைக்கிறார்கள். கோயிலுக்கு அருகில் அவர் வாழ்ந்த வீடும், விவசாயம் செய்த நிலமும் இருக்கிறது. அவர் பயிர் செய்த நிலத்துக்கு முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால் என்றழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அவரது குருபூஜை நாளில் இங்குள்ள சிவனுக்கு தண்டுக்கீரை படைக்கிறார்கள்.
பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்

கொடுங்குன்றத்தில் உள்ள பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் பாண்டிய நாட்டின் முக்கிய தேவாரத் தலங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடிய இந்தக் கோயில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. திருப்புத்தூரில் இருந்து 20 கி.மீ தொலைவில், சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் மூலவர் திருக்கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர். அம்மன் குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள் ஆவார். இக்கோயிலின் தல விருட்சம் உறங்காப்புளி. தீர்த்தம் மதுபுசுகரிணி. இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலி 40 கி.மீ சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கிறது. இது இக்கோயிலின் சிறப்பாகும்.
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்

திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் கோயில் பாண்டிய நாட்டின் முக்கிய கோவில்களில் ஒன்று. சம்பந்தரும் அப்பரும் இக்கோவிலைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளனர். இக்கோவில் சிவகங்கை மாவட்டத்தில், மதுரை – காரைக்குடி அல்லது மதுரை – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 62 கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடியபோது, திருமகள் லட்சுமி அதைக் கண்டு வணங்கினார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
இக்கோவிலில் இருக்கும் இறைவனை புத்தூரீசர் என்றும் திருத்தளிநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்மன் சிவகாமி அம்பாளாக, சௌந்தரநாயகி அருள் பாலிக்கிறார்.
அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி
பாகனேரியில் இருக்கும் புல்வநாயகி அம்மன் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் புல்வநாயகி ஆவார். 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அம்மன் கோவிலாகும். பக்தர்கள் தங்கள் பிரச்சனைகள் தீர கோயிலில் உள்ள கொடிமரத்தைப் கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வேண்டுதல் செய்கிறார்கள். அம்மனிடம் முறையிடுபவர்களுக்கு அவள் உதவி செய்வாள் என்று மக்கள் நம்புகிறார்கள். அம்மனின் அருளால் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோயில் விழாவின் போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
கோயிலுக்கு முன்னால் உள்ள தீர்த்தம் மிகவும் சிறப்பானது. வஜ்ரகிரீடம் என்ற புழு நாளடைவில் கல் போல மாறும் தன்மை உடையது. இதற்கு சாளக்ராமம் என்று பெயர். இந்த புழுக்கள் இந்த குளத்தில் காணப்படுகின்றன. அதனால், இந்த தீர்த்தத்தில் குளித்து அம்மனை வணங்குவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயிலின் பிரகாரத்தில் தல விருட்சமான நெய் கொட்டா மரம் உள்ளது. அதன் கீழே அக்னியம்மன் பீட வடிவில் இருக்கிறாள். பக்தர்கள் அவளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
இடைக்காட்டூர் தேவாலயம்

இடைகாட்டூர் என்பது சிவகங்கையில் உள்ள ஒரு கிராமம். இது மதுரை – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு கிழக்கே அமைந்துள்ளது. இங்குள்ள புனித இருதய ஆலயத்தை 1894-ம் ஆண்டு பிரெஞ்சு மதப் போதகர் பெர்டினாண்ட் செலி என்பவரால் கோதிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இது பிரான்ஸ் நாட்டின் ரீம்ஸ் தேவாலயம் போலவே கட்டப்பட்டுள்ளது.
தேவதூதர்கள் கட்டியதாக சொல்லப்படும் இந்த ஆலயத்தில், 153 தேவதூதர்களின் உருவங்களை போதகர் பெர்டினாண்ட் செலி வடித்துள்ளார். ஆலயத்தின் பீடத்தில் 40 புனிதர்களின் போதனைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 200 வகையான சுண்ணாம்புக் கற்களால் ஆன செங்கற்களும், ஓடுகளும் கொண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது. உள்ளே உள்ள பெரிய வளைவுகளை பெரிய தூண்கள் தாங்குகின்றன. ஜன்னல்களில் இயேசுவின் சிலுவை பயணம் அழகாக காட்டப்பட்டுள்ளது. வெப்பம் தாக்காமல் இருக்க, இரட்டை கூரை அமைப்பு கொண்டுள்ளதால் ஆலயத்தின் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இயேசு, யோசேப்பு, மேரி, புனிதர்கள் மற்றும் தேவதூதர்களின் சிலைகள் பிரெஞ்சு நாட்டு கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.
பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்கா
பிரான்மலைசேக் தர்கா ஒரு ஒளிமிக்க புனித இடம். இது முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். காரைக்குடியில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. எல்லா மதத்தினரும் ஆண்டுதோறும் இங்கு வருகிறார்கள்.
இத்தர்காவிற்கு வந்து வேண்டுதல் வைப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். யார் வேண்டுமானாலும் இந்த தர்காவுக்கு வரலாம். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் தினமும் இங்கு வருகிறார்கள்.
குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, திருமணம் ஆக வேண்டுபவர்கள், தீய சக்திகளால் துன்புறுபவர்கள் என பலரும் இங்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். நோயாளிகள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த தர்காவுக்குச் சென்று வேண்டுதல் வைத்து நல்ல வாழ்க்கையும், ஆரோக்கியமும் பெற்ற பலரின் உண்மைக் கதைகள் பலவற்றைக் இங்கு கேட்கலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

மதுரையில் இருந்து 51 கி.மீ தொலைவில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இது மதுரை – மேலூர் – திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடிப்பட்டி, பெரிய கொள்ளுக்குடிப்பட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊா்கிளன் நீா்நிலைகளை உள்ளடங்கியது. 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
குளிர் காலத்தில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்குகின்றன. உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகை பறவைகள் இங்கு வருகின்றன. சுமார் 8000 பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வந்து குஞ்சு பொரிக்கின்றன.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்வது நல்லது. அப்போது நல்ல வானிலை இருப்பதால் நிறைய பறவைகள் வருகின்றன. தங்குவதற்கு காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை ஆகிய ஊர்களில் விடுதிகள் உள்ளன. காரைக்குடி, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
கானாடுகாத்தான்

செட்டிநாட்டில் 7,000 பழைய பங்களாக்கள் இருக்கின்றன. இவை உலக தரத்திலான கட்டிடக் கலையோடு போட்டி போடும் அளவுக்கு அழகாக உள்ளன. 80-120 ஆண்டுகள் பழைமையானாலும் இன்றும் புதிதாக இருக்கின்றன.
நகரத்தார்கள் வெளிநாடுகளில் வியாபாரம் செய்த போது, அங்குள்ள கட்டிட கலையை நன்கு கற்றுக்கொண்டனர். அதன்படி தங்கள் ஊரில் அழகான பங்களாக்களை கட்டினர். சுவர்களை சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டினர். அதனால் தான் பங்களா சுவர்கள் பளபளப்பாகவும் உறுதியாகவும் உள்ளன.
சிறிய பங்களாக்கள் 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், பெரிய பங்களாக்கள் 60 அடி அகலம், 200 அடி நீள அளவிலும் கட்டப்பட்டுள்ளன. பங்களாக்களில் மின்விசிறி இல்லாமலேயே குளிர்ச்சியாக இருக்கும். முன் வாசலில் இருந்து பின் வாசல் வரை நடக்க அரை கிலோமீட்டர் தூரம் ஆகும்.
கதவுகள் பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளன. தரையில் டச்சு நாட்டு பளிங்கு கற்களும், ஆத்தங்குடி ஓடுகளும் பதிக்கப்பட்டுள்ளன. மேற்கூரை பிறை வடிவில் தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளன. மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் பச்சிலை ஓவியம் வரையப்பட்டுள்ளன.
தரையோடு இணைந்த சுவரில் பொருத்தப்பட்ட ஜப்பானிய பூ கற்கள் அழகை மேலும் கூட்டுகின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரக் கூரையை பொருசு மரத்தூண்கள் அழகாகத் தாங்கி நிற்கின்றன. லண்டன் ஓடுகளால் ஆன கூரையில் விழும் மழைநீரை கிடாரத்தில் (ஆள்உயர அண்டா) சேமிக்கும் முறையை நகரத்தார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தினர்.
செட்டிநாடு அரண்மனை

காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோதமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள செட்டிநாட்டு வீடுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடியவை. வெளிநாடுகளில் இருந்து வந்த உயர்தர மரங்களும், கண்ணாடி வேலைகளும் இவற்றை அழகுபடுத்துகின்றன.
காரைக்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள செட்டிநாடு அரண்மனை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியன் வங்கி, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கிய டாக்டர் அண்ணாமலை செட்டியார் 1912-ல் இந்த அரண்மனையைக் கட்டினார். இந்த அரண்மணையை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த அரண்மனை சிவகங்கை பகுதியின் பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.
இந்த அரண்மனைக்கான பொருட்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசியா, ஐரோப்பா நாடுகளில் இருந்து வந்தவை. அரண்மனையில் பெரிய தாழ்வாரம் உள்ளது. அதில் விலை உயர்ந்த தேக்கு, பளிங்கு, கிரானைட் தூண்கள் உள்ளன. திருமணம், சமய நிகழ்வுகளுக்கான பெரிய முற்றமும் உள்ளது. முற்றத்தின் ஓரத்தில் செட்டியார் மனைவியின் பூஜை அறை அமைந்துள்ளது.
இந்த அரண்மனையில் பழைய அரச குடும்பத்தினர் பயன்படுத்திய விலையுயர்ந்த பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. 1990 சதுர அடி பரப்பளவில் 9 கார்கள் நிறுத்தும் இடமும், மின்தூக்கியும் உள்ளன.
அரண்மனை பார்வை நேரம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஆத்தங்குடி

ஆத்தங்குடி என்ற கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாட்டில் உள்ள இந்த ஊர் கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு பெயர் பெற்றது. இந்த ஓடுகள் இங்கு மட்டும் தான் செய்யப்படுகின்றன.
இந்த ஓடுகளை சிமெண்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள், பெல்லி ஜெல்லி ஆகியவற்றால் செய்கிறார்கள். முதலில் ஓடுகளை உருவாக்கி, வெயிலில் காய வைக்கிறார்கள். பிறகு அழகான வேலைப்பாடுகளை செய்கிறார்கள். இந்த வேலைப்பாடுகள் தான் ஓடுகளை தனிச்சிறப்பு மிக்கதாக மாற்றுகிறது. பல நிறங்களையும் சேர்த்து அழகுபடுத்துகிறார்கள்.
மக்கள் தங்கள் வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் ஏற்ற ஓடுகளை செய்யச் சொல்லியும் வாங்கிச் செல்கிறார்கள். விலங்குகள், செடிகள் வரைந்த தோட்ட ஓடுகள் மிகவும் பிரபலமானவை. சுவர்களின் நிறத்துக்கு ஏற்ற வண்ணத்தில் ஓடுகளை தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்த இந்த ஓடுகளை பயன்படுத்துகிறார்கள். பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவரும் வீடுகள் பலவற்றில் இந்த ஓடுகளை இன்றும் காணலாம்.
ஆயிரம் ஜன்னல் வீடு

காரைக்குடியில் ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒரு பெரிய வீடு இருக்கிறது. இந்த வீட்டுக்கு இப்படி பெயர் வந்ததற்கு காரணம், இதில் நிறைய ஜன்னல்கள் இருப்பதால் தான். சுற்றுலா வருபவர்கள் எல்லாம் இந்த வீட்டைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ளது இந்த வீடு. 1941-ல் இதைக் கட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. அந்தக் காலத்தில் இது பெரிய தொகை. ஆனால் தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது.
இந்த வீட்டில் 25 பெரிய அறைகள் உள்ளன. 5 பெரிய கூடங்களும் உள்ளன. 20 கதவுகளும், 100 ஜன்னல்களும் உள்ளன. இந்த வீட்டுக்குள் முதல் முறையாக நுழையும் எவருக்கும் ஒரே ஆச்சரியம் தான். வீடு பழையதாக இருந்தாலும், அதன் அழகான கட்டிடக் கலையும், பெருமையும் எல்லோரையும் வியக்க வைக்கிறது.
கண்ணதாசன் நினைவகம்
இந்தச் சின்ன மண்டபம் காரைக்குடி பக்கத்தில் இருக்கும் சிறுகூடல்பட்டி கிராமத்தில் பிறந்த கவிஞர் கண்ணதாசனுக்காக கட்டப்பட்டது. கண்ணதாசன் தன் புதிய சிந்தனைகளால் தமிழ் இலக்கியத்தை மாற்றியவர். இவருக்கு மக்களை கவரும் நல்ல பேச்சாற்றலும் இருந்தது. தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் இல்லாமல், சினிமாவுக்கும் நிறைய நல்ல பாடல்களை எழுதி கொடுத்தார். பல பத்திரிக்கைகளில் இவர் எழுதிய அரசியல் கட்டுரைகளும் வெளி வந்தன. அவர் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தனி இடம் பிடித்தன. ஏனெனில், அதுவரை தமிழர்கள் எதுக்கும் குரல் கொடுக்காத நிலையை மாற்றி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். அவர் தன் படைப்புகளில் சாதாரண மக்களோட கஷ்டங்கள், பயங்கள், மகிழ்ச்சிகள் பற்றியே அதிகம் எழுதினார்.
கவிஞர் கண்ணதாசனின் நினைவாக, காரைக்குடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 84 லட்சம் ரூபாய் செலவானது. 1981-ல் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990-ல் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். 1992-ல் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை உள்ளது. மேல் தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 புத்தகங்கள் கொண்ட நூலகமும் இயங்குகிறது. கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கையை விளக்கும் படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புகள்
சிவகங்கை மாவட்டம் பல சிறப்புகளைக் கொண்டது. அழகான செட்டிநாட்டு வீடுகள், சுவையான உணவு வகைகள், பழைய கோயில்கள் இங்கு உள்ளன.
திருக்கோஷ்டியூர் கோயிலில் ராமானுஜர் திருமந்திரத்தை மக்களுக்குச் சொன்னார். பாரி வள்ளல் ஆண்ட பிரான்மலையும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரும் இந்த மாவட்டத்தின் சிறப்பு ஆகும்.
கம்பன் தன் இறுதி காலத்தில் இங்கு வாழ்ந்தார். இந்த மாவட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் பிறந்துள்ளனர். வேலு நாச்சியாருக்கு உதவிய மருது சகோதரர்களின் நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகப் புகழ்பெற்ற வரிகளை எழுதிய கணியன் பூங்குன்றனார் மகிபாலன் பட்டியில் பிறந்தவர். காரைக்குடி செட்டிநாட்டு வீடுகள், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலா இடங்களும் உள்ளன.
கண்ணாத்தாள் கோயில், மருதுபாண்டியர் கட்டிய காளையார் கோயிலில் மூன்று சிவன் கோயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ளது இந்த ஊரின் தனிச்சிறப்பு.
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் ஒன்று. இங்குள்ள விநாயகர் சிறப்பானவர். அவர் தலையில் சடையுடன் யோக நிலையில் இருக்கிறார். விநாயகர் இறையுருவில் வயிறு குறைவாக மெலிந்துள்ளது. வலது கையில் சிவலிங்கத்தை வைத்துள்ள வலம்புரி விநாயகராக காட்சி தருகிறார்.
குன்றக்குடி முருகன் கோவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று. இது காரைக்குடியில் இருந்து 9 கி.மீ தூரத்தில் இருக்கிறது. மலையின் தோற்றம் மயில் போல இருக்கும். மலை மேலே முருகன் கோவிலும், மலையின் கீழே சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. மயிலின் தோகை போன்ற இடத்தில் தோகையடி விநாயகர் கோவிலும் உள்ளது.
மதுரை நகரிலிருந்து 61 கி.மீ தொலைவில் காளையார் கோயில் உள்ளது. இக்கோயிலைப் பற்றி அப்பர், சேக்கிழார், அருணகிரியார், குமரகுருபரர் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். மேலும் மாணிக்கவாசகர் இக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளார்.
காரை செடிகள் நிறைய வளர்ந்திருந்ததால் இந்த ஊருக்கு காரைக்குடி என்று பெயர் வந்தது. நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டியார்கள் வாழும் செட்டிநாட்டின் முக்கிய ஊராக காரைக்குடி விளங்குகிறது. இங்கு வாழும் நகரத்தார்களின் வீடுகள் அனைத்தும் அரண்மனை போல் கட்டப்பட்டு உள்ளன. நகரத்தாரின் ஒவ்வொருவரின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாளிகை மதில் போன்ற சுற்றுச்சுவர்களும் பளிங்கு தரையும், கதை ஓவியங்களும் வண்ண சித்திரக் கண்ணாடி சாளரங்கள், அலங்கார தொங்கு விளக்குகள் ,அழகான தேக்கு மர வேலைப்பாடுகள் இப்படியாக இன்றும் கலைநயத்தோடும் மிளிரகின்றன. விருந்தினரை உபசரிப்பதில் சிறந்த இவர்கள், கடல் கொண்ட பழைய பூம்புகார் நகரத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டரசன் கோட்டை என்ற ஊரில் புகழ்பெற்ற கவிஞர் கம்பர் சமாதி உள்ளது. கம்பர் தன் இறுதி காலத்தை இங்கு தான் கழித்தார். ஒவ்வொரு ஆண்டும் இங்கு கம்பர் விழா நடக்கிறது. இந்த ஊரில் கம்பர் பெயரில் குளம், ஊரணி, செய் மற்றும் நினைவுக்கல் ஆகியவை இருக்கின்றன. இந்த ஊருக்கு களவழி நாடு என்ற பழைய பெயரும் இருந்தது. இங்கு கண்ணகிக்கு கோயிலும் உள்ளது. இந்த ஊர் திருவிழாவின் போது கள்ளர் சமூகத்தினருக்கு “நாட்டரசன்” என்ற பட்டம் கொடுத்து விபூதி வழங்கப்படுகிறது.