அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி (Pillaiyarpatti Pillaiyar Temple) இந்தியாவிலுள்ள, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது.
மூலவர் | கற்பக விநாயகர் |
தல விருட்சம் | மருதமரம் |
திருவிழா | விநாயகர் சதுர்த்தி |
ஊர் | பிள்ளையார்பட்டி |
மாவட்டம் | சிவகங்கை |
வரலாறு
பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.
பிள்ளையார் ஞானத்தின் நாயகன். கூர்ந்து கவனிக்க அவரின் முகமே பிரணமாம் “ஓம்“.
இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய இத்திருக்கோயில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.
முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.
இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கீழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம்.
அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.
அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம். இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர்.
அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.
கல்வெட்டுகள் நமக்கு சொல்லும் செய்திகள்
முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு தெரிகின்றது.
மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை “கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி” என்றே குறிப்பிட வேண்டும்.
1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பதே இந்த கோவில் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. அதில் இந்த பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் “ஐந்தாம்” படை வீடாக கருதப்படுகிறது.
கோவிலுக்குள் செல்லும் முறை
விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும்
திருக்குளம்
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.
ராஜகோபும்
கோயிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
முக்கிய திருவிழாக்கள்
இத் தலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பெருவிழாவாக உள்ளது.
முதல் நாள் விழா கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து “காப்பு கட்டுதல்” மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.
இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார்.
ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தன காப்பு” சாற்றப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும். மேலும், கார்த்திகை மாதத்தில் “திருக்கார்த்திகை தீபத் திருவிழா”,மார்கழி மாத திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருதல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேஷ பூஜை போன்றவை நடைபெறுகின்றன.
பிள்ளையாரின் சிறப்பு
- இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
- சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
- அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
- வயிறு, ஆசனத்தில் படியாமல் “அர்த்தபத்ம” ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
- இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
- வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
- ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது. ஆகியவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும்.
நேர்த்திக்கடன்
இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும்.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்
கோவில் முகவரி
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்,
பிள்ளையார்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630 207.
தொலைபேசி எண்: +91-4577 – 264260, 264240, 264241.
பெருமை வாய்ந்த பிள்ளையார் திருத்தலங்கள்
திருவாரூர் ஆதி விநாயகர் கோயில்
சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
ராமேஸ்வரம் கோயிலின் நுழைவாயிலில் தரிசனம் தரும் இரட்டைப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.
பஞ்சவிருட்ச விநாயகர்
மருதமலை முருகன் கோயில் பஞ்சவிருட்சத்தின் கீழ், பஞ்சமுக விநாயகர் உள்ளார். இவரது ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் உள்ளன, வலம்புரி, இடம்புரி என இரண்டு வகை துதிக்கைகளுடன் இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.இவர் பாதத்தின் அருகில் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரும் கோலத்தில் உள்ளார். இச்சந்நிதியில் பூத கணங்கள் சூழ்ந்திருக்க தேவ தூதர்கள் வாத்தியங்கள் இசைக்க சூரிய சந்திரர்கள் மேலிருந்து வணங்க அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேரளபுரம் மகாதேவர் கோயில்
கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரம் மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
வில்லேந்திய விநாயகர்
வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப்பயிற்சி தந்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.
ஓலமிட்ட விநாயகர்
நள்ளிரவில் ஓலமிட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டிருப்பதை ஊர்மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம்! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியின் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.
வலஞ்சை விநாயகர்
சென்னை- மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப் பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
நர்த்தன விநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்… வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திரு ந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.
வெள்ளைப் பிள்ளையார்
கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியு ள்ள விநாயகருக்கு வெள்ளைப் பிள்ளையார் என்று பெயர். இவரின் விக்கிரகத் திருமேனி கடல் நுரையால் செய்யப்பட்டது என்பது ஐதீக ம். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.
விருச்சிக விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம்- மருத்துவக்குடியில் அமைந் துள்ளது அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம். இங்கே அருள்பாலி க்கும் விருச்சிக விநாயகரின் திருமேனி முழுவ தும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்புள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வது
காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் பிள்ளையார் பட்டி கோவில் அமைந்துள்ளது.