
புதுக்கோட்டை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். இது பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. 1974 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் நாள் இது தனி மாவட்டமாக உருவானது. அதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகளும், தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைந்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
பகுதி | பாண்டிய நாடு |
பரப்பளவு | 4,663 ச.கி.மீ |
மக்கள்தொகை | 16,18,345 |
அஞ்சல் குறியீடு | 622 001 – 622 006 |
தொலைபேசி குறியீடு | 04322 |
வாகனப் பதிவு | TN-55 |
வரலாறு
இந்த இடத்தில் முன்பு ஒரு கோட்டை இருந்திருக்கலாம். 1734-ல் நடந்த போரில் சந்தா சாகிப்பின் படையாலோ அல்லது தஞ்சை தளபதி ஆனந்தராவாலோ அந்தக் கோட்டை அழிவுற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் நகர் பகுதியில் பழைய கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை.
17-ஆம் நூற்றாண்டின் கடைசியில் இரகுநாதர் என்ற தொண்டைமான் மன்னர் புதிதாக கோட்டை கட்டினார். அதனால் தான் இந்த ஊருக்கு புதுக்கோட்டை என்று பெயர் வந்தது. 1825-ல் விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் பழைய ஊரை அழித்து விட்டு புதிய நகரம் உருவாக்கப்பட்டது.
1898-ல் மன்னர் மார்த்தாண்ட தொண்டைமான் ஐரோப்பா சென்று விக்டோரியா மகாராணியை பார்த்து வந்தார். அதன் நினைவாக வடக்கு இராஜவீதியில் ஒரு நகர மண்டபம் கட்டினார்.
புதுக்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் கிழக்கே பொற்பனைக்கோட்டை என்ற கிராமத்தில் சங்ககால கோட்டையின் இடிபாடுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது போல அகழி கொண்ட ஒரே பழைய கோட்டை இதுதான்.
பழைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கிழக்குப் பகுதிக்கு கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதிக்கு சிங்கமங்கலம் அழைத்து வந்தனர். இந்த இரண்டு பகுதிகளையும் சேர்த்து தொண்டைமான் மன்னர்கள் ஆண்டார்கள். 1948 மார்ச் 3-ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்று. இங்கே பல அரண்மனைகள், கோட்டைகள், பழைய சுவர் ஓவியங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பழைய மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோட்டைகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் உள்ளது.
தெற்கு மாவட்டங்களான திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டு, கிழக்கில் வங்காள விரிகுடாவின் கரையோரப் பகுதிகளால் சூழப்பட்டது. இங்கே நிலவளமும் கடல்வளமும் நிறைய உள்ளது.
மக்கட் தொகை
2011ல் எடுத்த மக்கள் கணக்கின்படி இந்த மாவட்டத்தில் 16,18,345 பேர் வாழ்கின்றனர். இதில் 8,03,188 பேர் ஆண்கள். 8.15,157 பேர் பெண்கள். கிராமங்களில் 13,01,991 பேரும், நகரங்களில் 3,16,354 பேரும் வாழ்கின்றனர்.
மொத்தம் படித்தவர்களின் எண்ணிக்கை 11,10,545. இதில் 6,08,776 ஆண்களும், 5,01,769 பெண்களும் உள்ளனர்.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டம், 12 வருவாய் வட்டங்கள், 763 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டம்
- புதுக்கோட்டை
- அறந்தாங்கி
- இலுப்பூர்
வருவாய் வட்டங்கள்
- குளத்தூர்
- இலுப்பூா்
- பொன்னமராவதி
- விராலிமலை
- ஆலங்குடி
- புதுக்கோட்டை
- கந்தா்வக்கோட்டை
- திருமயம்
- கறம்பக்குடி
- அறந்தாங்கி
- ஆவுடையார்கோவில்
- மணமேல்குடி
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 2 நகராட்சியும், 8 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியகளும், 497 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- புதுக்கோட்டை
- அறந்தாங்கி
பேரூராட்சிகள்
- ஆலங்குடி
- அன்னவாசல்
- அரிமளம்
- இலுப்பூர்
- கறம்பக்குடி
- கீரமங்களம்
- கீரனூர்
- பொன்னமராவதி
ஊராட்சி ஒன்றியங்கள்
- அன்னவாசல்
- அரிமளம்
- குன்னண்டார்கோயில்
- பொன்னமராவதி
- புதுக்கோட்டை
- திருமயம்
- விராலிமலை
- அறந்தாங்கி
- ஆவுடையார்கோவில்
- கந்தர்வகோட்டை
- கறம்பக்குடி
- மணமேல்குடி
- திருவரங்குளம்
அரசியல்
இந்த மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 4 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.
சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிகள்
- கரூர் மக்களவைத் தொகுதி
- திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
- சிவகங்கை மக்களவைத் தொகுதி
- இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
புதுக்கோட்டை சுற்றுலா தலங்கள்
அருங்காட்சியகம்
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி போகும் வழியில் 5 கி.மீ தொலைவில் திருக்கோகரணம் என்ற இடத்தில் அருங்காட்சியகம் உள்ளது. இது 1910-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அரசு அருங்காட்சியம் வரலாறு, புவியியல், விலங்கியல், தொல்பொருள்கள் மற்றும் சிற்பவியல் ஆகிய பல்வேறுபட்ட துறைகளின் கிடைப்பதற்கு அரிதான பொருள்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பித்தளை சிலைகள், கற்சிற்பங்கள், போர் கருவிகள், கத்தி, கோல், கேடயம், பீரங்கிகள், ஆபரணங்கள், ஓவியங்கள், செப்பு தகடுகள், மரசிற்பங்கள், நாணயங்கள், இசை கருவிகள் கல்வெட்டு பிரதிகள் ஆகியவை மிக நோ்த்தியான முறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை பண்டைய கால மன்னா்களின் போர் திறன், மக்களின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கட்டணம் : சின்னக் குழந்தைகள் – 2 ரூபாய் பெரியவர்கள் – 5 ரூபாய்.
திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
விடுமுறை நாட்கள் : வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
குன்றாண்டார் கோயில்

குன்றாண்டார் கோயிலை பழைய கல்வெட்டுகளில் திருக்குன்றக்குடி என்று சொல்லி இருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும், கீரனூரில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் இக் கோயில் இருக்கிறது.
கி.பி. 775 ஆண்டில் நந்திவர்ம பல்லவன் ஆட்சி காலத்தில் மலையைக் குடைந்து சிவன் கோயில் கட்டப்பட்டது. மலை மேலே ஒரு சிறிய முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கே இருக்கும் கல்யாண மண்டபம் தேர் போன்ற அமைப்பில் அதில் குதிரைகள் பூட்டிய மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுபாவா பள்ளிவாசல்

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் திருமயம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காட்டுபாவா பள்ளிவாசல் இருக்கிறது. இந்த பள்ளிவாசலை 17-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப் கட்டினார்.
காட்டுபாவா என்று அழைக்கப்படும் பக்ரூதீன் அவுலியாவின் கல்லறை இங்கே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கே கந்தூரி விழா நடக்கும். இந்த விழாவில் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா மத மக்களும் கலந்து கொள்வார்கள்.
குடுமியான்மலை

புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை உள்ளது. இங்கே பழைய காலத்து குகைக் கோயில்கள் உள்ளன. இவை பழங்கால வரலாற்றையும் கலையையும் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள உதவும். மலை மேலே சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவன் கோயில் இருக்கிறது. அதைச் சுற்றி நான்கு சிறிய கோயில்களும் அவற்றில் இருக்கும் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.
குகைக் கோயிலின் முகப்பில் கர்நாடக இசைக்கான விதிகளை சொல்லும் கல்வெட்டு ஒன்று உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் அடங்கிய இசைக் கல்வெட்டு உள்ளது. இந்த ஊரில் அரசு விவசாயக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது.
நார்த்தாமலை

புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த இடம் இருக்கிறது, முத்தரையர்கள் தங்கள் படைகளை நிறுத்தி வைக்க நார்த்தாமலையை முக்கிய இடமாக பயன்படுத்தினர்.
இங்கே முத்தரையர்கள் கட்டிய வட்ட வடிவ கற்கோவில், விஜயாலய சோழன் கட்டிய குகைக் கோவில், கடம்பர் மலைக் கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. இப்போது முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முளைபாரி ஊர்வலத்தை பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
ஆவூா்

புதுக்கோட்டை ஆவூரில் இருந்து 42 கி.மீ தூரத்திலும், திருச்சியில் இருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. 1747-ஆம் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. புனிதர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) தன் ஆன்மீக வேலையை இங்கு தான் முதன்முதலில் தொடங்கினார். இங்கே நடக்கும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வாய்ந்தது.
மலையடிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலையடிப்பட்டி என்ற அழகான கிராமம், புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ தொலைவிலும், கீரனூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் சிவனுக்கும் திருமானுக்கும் அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவர்ம பல்லவன் இந்த மலையைக் குடைந்து வாகீஸ்வரர் கோவிலை எழுப்பினர்.விஷ்ணு கோவில் சிவன் கோவிலுக்குப் பிறகு கட்டப்பட்டது.
மலையில் நரசிம்மர், திருமால், அனந்தசயனப் பெருமாள், ஆதிசேஷன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திருமால் கோவிலின் அர்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் திருமாலின் தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் பழங்கால மக்களின் கல்லறைகளும் புதைக்கப்பட்டிருந்தன.
கொடும்பாலூர்

கொடும்பாலூரின் பழைமையான சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் பேசப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் கொடும்பாலூர் உள்ளது. இங்குள்ள அழகான கோயில்கள் திராவிடக் கட்டிடக் கலைக்கு முன்னோடிகளாக விளங்குகின்றன. சோழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பையும் காட்டுகின்றன.
மூவர் கோயிலும், முச்சுகுண்டேஸ்வரர் கோயிலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இன்றளவும் கூட இந்தக் கோயில்க்கு சுற்றுலா வருபவர்களை வியக்க வைக்கும் அழகுடன் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் இக்கோயில் உள்ளது.
ஆவுடையார்கோவில்

புதுக்கோட்டையில் இருந்து 60 கி.மீ தூரத்தில் ஆவுடையார் கோயில் உள்ளது. இக்கோயிலின் முதன்மை கடவுள் ஆத்மநாத சுவாமி ஆவார். இங்கு உள்ள பெரிய சிலைகள் பார்ப்பவர்களை மிகவும் கவரும். கருங்கல்லால் வேலைப்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்கக் கூறை உள்ளது போல, இங்கு செம்பினால் ஆன கூறை உள்ளது. இக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மாணிக்கவாசகர் இங்கு வந்து இறைவனை வணங்கினார் என்று நம்புகிறார்கள்.
விராலிமலை

திருச்சியில் இருந்து 28 கி.மீ தூரத்திலும், புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தூரத்திலும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
1500 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலை முதலில் அழகிய மணவாளன் என்ற அரசர் கட்டினார். பிற்காலத்தில் ஆதித்தசோழன் என்ற மன்னர் கோயிலைப் புதுப்பித்தார். இவா்களுக்கு பிறகு நாயக்கர்களும், மருங்காபுரி மன்னர்களும் கோயிலின் மற்ற பிரகாரங்களைக் கட்டினர். கடைசியாக புதுக்கோட்டை மன்னர்கள் மணிமண்டபத்தையும் நவராத்திரி மண்டபத்தையும் கட்டினர்.
சோலைகள், மயில்கள், நீர்நிலைகள் நிறைந்த இம்மலையில் முனிவர்கள் மரங்களாக மாறி முருகனை வழிப்பட்டதால் இது விராலிமலை எனப் பெயர் பெற்றது. கோயிலின் உள்ளே முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
சித்திரை பௌர்ணமி, வைகாசி விசாகம், தெப்பத்திருவிழா, ஐப்பசி கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விழா நாட்களில் முத்துபழனி கவிராயர் எழுதிய விராலிமலை குறவஞ்சி நாடகம் இங்கு விழா நாட்களில் நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட சிறப்புகள்
- இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலெட்சுமி ரெட்டி புதுக்கோட்டையில் பிறந்தார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே திவ்ய தேசமாக திருமயம் மட்டுமே உள்ளது.
- திருமெய்யரில் உள்ள அனந்த சயன பெருமாள் ஆசியாவிலேயே மிகப் பெரியவர்.
- திருமயம் சத்திய புஷ்கரணியில் நீராடினால் எல்லா நீர்நிலைகளில் நீராடிய பலன் கிட்டும்.
- திருமயத்தில் மட்டுமே சிவனையும் பெருமாளையும் ஒரே நேரத்தில் கிரிவலம் வர முடியும்.
- புதுக்கோட்டை கீரமங்களத்தில் தென்னிந்தியாவில் மிகப்பெரிய சிவன் சிலை உள்ளது.
- திருமயம் மலைக்கோட்டை இமயமலையை விட அதிக சக்தி வாய்ந்தது.
- தமிழகத்தில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டையில் உள்ளது.
- இந்தியாவிலேயே மிக அதிக இடப்பரப்பில் (99 ஏக்கர் 99 செண்ட்) ஆட்சியர் அலுவலகம் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை.
- உலகிலேயே திருமயம் கோட்டையில் உள்ள பைரவர் மட்டுமே வடக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.
- புதுக்கோட்டை குலமங்கலத்தில் உள்ள பெருங்கரையாடி மீட்ட அய்யனார் கோவிலில் உள்ள குதிரை சிலை ஆசியாவிலேயே மிகப் பெரியது.
- இராஜராஜ சோழன் அரசனான உடனேயே புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே முதல் கோயில் கட்டினார்.