திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

thiruchendur murugan temple

முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் இரண்டாம் படை வீடாகும்.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

ஆறுபடைவீடுகளில் ஐந்து கோவில்கள் மலை மீது இருக்கும். இக்கோவில் மட்டும் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

மூலவர் சுப்பிரமணியசுவாமி
உற்சவர் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தீர்த்தம் சரவணபொய்கை
கட்டடக்கலை வடிவமைப்பு திராவிடக் கட்டிடக்கலை
கோபுரத்தின் உயரம் 157
ஊர் திருச்செந்தூர்
மாவட்டம் தூத்துக்குடி

வரலாறு

சூரபத்மன் தேவர்களையும் மற்ற மனிதர்களையும் சிறைபிடித்து துன்புறுத்தினான். துன்பம் தாங்காது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இந்நிலையில் சிவபெருமான் தேவர்களின் துயரை போக்க தன் நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்பினை வெளியிட அந்த நெறுப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக அவதரித்து கார்த்திகை பெண்களால் சிறப்பாக வளர்க்கப்பட்டது.

இந்நிலையில் பார்வதி தேவி சிவபெருமானுடன் சரவணப்பொய்கையில் எழுந்தருளி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அரவணைத்து ஆறு முகம், பண்ணிரண்டு திருக்கரங்கள் கொண்ட ஒரே குழந்தையாக முருகப்பெருமானை உருவாக்கினர். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்த போது  தேவர்களின் குருவான வியாழபகவான், முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார்.

அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கியதோடு, வியாழபகவான் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, சூரபத்மனை வதம் செய்தார். வியாழபகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார்.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவரை, “செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்” என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்” (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.

முருகனுக்கு குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு” எனப்படும். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக தன் படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்தே, “ஆறுபடை வீடு” என்கிறோம். ஆனால், வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், “ஆற்றுப்படை’ எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார்.

முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல், “திருமுருகாற்றுப்படை” (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை” ஆக மாறிப்போனது.

கோவில் அமைப்பு

ராஜகோபுரம்

ராஜ கோபுரம் 300 ஆண்டுகளுக்கு முன்பு தேசிக மூர்த்தி ஸ்வாமிகளால் கட்டப்பட்டது. இது 9 நிலை ராஜ கோபுரம் ஆகும். இதன் உயரம் 157 அடி ஆகும் . இதன் உச்சியில் 9 தாமிர கலசங்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

இக்கோவிலில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

பஞ்சலிங்க தரிசனம்

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

நான்கு உற்சவர்கள்

பொதுவாக கோயில்களில் ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், “மாப்பிள்ளை சுவாமி” என்றழைக்கின்றனர்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் சிறப்புகள்

திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்து தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

திருச்செந்தூர் முருகனுக்கு தினமும் 9 கால பூஜைகள் நடக்கிறது. இப்பூஜையின் போது சிறுபருப்பு பொங்கல், அப்பம், கஞ்சி, தோசை, நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், வெல்லம் கலந்த உருண்டை மற்றும் வேக வைத்த பாசிப்பருப்பு ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

திருச்செந்தூர் கோவிலின் வடிவம், பிரணவ மந்திரமான “ஓம்” எனும் வடிவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.

கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

கோவில் பிராகாரத்தின் மேற்குப்பகுதியில், முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து சூரபத்மனுடன் போர் புரிவதையும், அதன் எதிரே சூரபத்மன் மார்பில் முருகனின் வேல் பாய்ந்திருப்பதையும் சித்தரிக்கும் அழகிய சிற்பங்களைக் காணலாம்.

‘திருச்செந்தூர் முருகனே போற்றி’ என்ற தலைப்பில் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கங்கை பூஜை

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, “கங்கை பூஜை’ என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

கந்த சஷ்டி விழா

இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. எனவே, “கந்தசஷ்டி விழா” திருச்செந்தூர் தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான்

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார்.

இதனை உணர்த்தும்விதமாக ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.

8ம் நாளன்று அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

புத்திரபாக்கியம் தரும் திருச்செந்தூர்

திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவேதான் குரு பரிகார தலமாக திருச்செந்தூரை பரிந்துரை செய்கின்றனர்.

தீர்த்தங்கள்

திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.

நாழிக்கிணறு தீர்த்தம்

சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார்.

நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் இருக்கும் வற்றாத நீரூற்றாகும். இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது.மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது.

நாழிக்கிணறு அருகே, திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த மவுனசாமி, காசிநாதசாமி, ஆறுமுகசாமி இவர்களின் சமாதி உள்ளது.

வதனாரம்ப தீர்த்தம்

கலிங்கதேசத்து மன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்.

இத்தீர்த்தம் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் இருப்பதால் அங்கு நீராடுவது பாதுகாப்பற்றது.

பன்னீர் இலை விபூதி

பன்னீர் இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருகப்பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள்.

இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. இன்றும் திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம் : 02.07.2019

கும்பாபிஷேக செலவு : ரூபாய் 4421644.95/-

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்.

இத்தலத்தில் நேர்த்திக்கடனாக சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நிறைவேற்றலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்

அதிகாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்தே இருக்கும்.

முகவரி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் – 628 215.

தொலைபேசி எண் : 04639242221

திருச்செந்தூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
  • வள்ளி குகை
  • கட்டபொம்மன் நினைவுக் கோட்டை
  • குதிரைமொழித்தேறி
  • மேலப்புதுக்குடி
  • வனதிருப்பதி, புன்னை நகர்

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *