பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

Arulmigu Dhandayuthapani Swamy Temple

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி மூன்றாம் படை வீடாகும்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் தண்டாயுதபாணி சுவாமி
தல விருட்சம் நெல்லி மரம்
தீர்த்தம் சண்முக நதி
ஆகமம்/பூஜை சிவாகமம்
புராண பெயர் திருஆவினன்குடி
ஊர் பழநி
மாவட்டம் திண்டுக்கல்

வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் `பழம் நீ ` (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.

கோவில் அமைப்பு

rajakopuram

ராஜகோபுரம்

தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இராஜகோபுரம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோபுரம் 5 நிலைகள் மற்றும் 5 கலசங்களைக் கொண்டுள்ளது. இக்கோபுரம் 9ம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் என்ற மன்னரால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது.

கல்வெட்டு

மலைக்கோயிலில் கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் பாண்டியமன்னர்களைப் பற்றிய கல்வெட்டு குறிப்பு அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் திருக்கோயில்களின் பூஜைகள் நடப்பதற்காக நிலங்களையும், கிராமங்களையும் தானமாக வழங்கியது பற்றிய குறிப்புகள் உள்ளன.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார்.

முருகன் சிலையின் ரகசியங்கள்

murugan

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது.

இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர்.

நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

அபிஷேகம்

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.

கோயிலின் சிறப்பம்சங்கள்

palani temple

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.

இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

பழனி  முருகன் அலங்காரம்

நேரம் பூஜை அலங்காரம்
6.40 am to 7.15 am விளா பூஜை சாது
8.00 am to 8.30 am சிறுகால சந்தி பூஜை வேடன்
9.00 am to 9.30 am காலசந்தி பூஜை பாலசுப்பிரமணி
12.00 pm to 12.45 pm உச்சிக்கால பூஜை வைதீகாள்
5.30 pm to 6.15 pm சாயரட்சை பூஜை ராஜ
8:30 pm to 9.00 pm இராக்கால பூஜை புஷ்ப

தைப்பூசத்திருவிழா

thaipoosam

பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர்.

அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள். இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது. தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது.

தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.

தங்க தேர்

தங்க தேர்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுதான். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும் அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது.

1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன.புராண காலத்தலும்,சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

அன்னாபிஷேகம்

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இடும்பனுக்கு முதல் பூஜை

இக்கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே,  தண்டாயுதபாணிக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும்.

காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர். இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்றிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

காவடி

kavadi

கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு காவடியை சுமந்து வந்தார்.மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர்.

மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் இந்த முதல் காவடியை தற்போது வரை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

கிரிவலம்

palani kirivalam

இக்கோவிலில் அக்னிநட்சத்திர காலங்களில் கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.

மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம்.

சரவண பொய்கை

சரவண பொய்கை எனும் சிறிய குளத்தில் ஏராளமான அதிசய சக்திகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஒரு முறை இந்த குளத்தில் மூழ்கிக் குளித்தால், நம்மிடம் இருக்கும் நோய்கள் குணமாகும் என்றும், நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமாக திருவினான்குடி ஆலயத்தில் இருக்கும் இந்த குளம் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

பழநி பஞ்சாமிர்தம்

panchamirtham

திருப்பதி லட்டு போல,  பழநிமுருகன்கோயிலின் பிரசாதமான ‘பஞ்சாமிர்தம்’ உலக பிரசித்திபெற்றது. முந்தைய காலத்தில் ஐந்து வகையான பொருட்களை கொண்டு, அமிர்தத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டதால் பஞ்சாமிர்தம் என அழைக்கப்படுகிறது.

வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநி முருகனின் ஆறுகால பூஜையின் போது பஞ்சாமிர்தம் அபிேஷகம் செய்கின்றனர். சாயரட்சை பூஜையின் போது 1000 பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பழத்திற்காக கோவித்துக்கொண்டு முருகன் வந்த தலம் என்பதால் பழநியை தவிர முருகனின் ஆறுபடை வீடுகளில் வேறு எங்கும் பஞ்சாமிர்தம் பிரசாதம் சிறப்பு பெறவில்லை. அந்த அளவிற்கு பழநி பஞ்சாமிர்தம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தைப்பூசம், பங்குனிஉத்திரம் போன்ற விழாக்காலங்களில் பாதயாத்திரை பக்தர்கள் இணைந்தும் பழநிமலைக்கோயில், தனியார் மண்டபங்களில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு அபிேஷகம் செய்து, பிரித்துக்கொள்கின்றனர்.

பழநி கோயில் தேவஸ்தானம் மூலம் அபிஷேக பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பலகோடி ரூபாய் வருமானமும் பழநிகோயிலுக்கு கிடைக்கிறது.

பஞ்சமிர்தம் தயாரிக்கும் முறை

கற்பூரவல்லி வாழைப்பழம் 152 கிலோ
கரும்பு சர்க்கரை 288 கிலோ
கொட்டைநீக்கிய பேரீச்சம்பழம் 25 கிலோ
கற்கண்டு 15 கிலோ
நெய் 6 கிலோ
தேன் 2 கிலோ

இவற்றை மொத்தமாக, சேர்த்து, நவீன தொழிற்நுட்ப இயந்திரம் மூலம் 488 கிலோ எடையுள்ள பஞ்சசாமிர்தம் தயார் செய்யப்படுகிறது.

திருவிழாக்கள்

  • வைகாசி விசாகம்
  • கந்த சஷ்டி
  • திருக்கார்த்திகை
  • தைப்பூசம்
  • பங்குனி உத்திரம்

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக பக்தர்கள் இங்கு அதிகளவில் முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தண்டாயுதபாணிக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து மற்றும் முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றன.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக தேதி – 03/04/2006

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் -624601.

தொலைபேசி எண் : 04545242236

பழனியில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • இடும்பன் ஆலயம்
  • திருவாவினன்குடி ஆலயம்
  • சரவண பொய்கை
  • வரதமனதி அணை
  • குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி
  • போகர் சமாதி
  • தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி
  • பெரிய நாயகி அம்மன் ஆலயம்

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *