முருகனின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
மூலவர் | சுப்பிரமணியசுவாமி |
உற்சவர் | சண்முகர் |
அம்மன்/தாயார் | தெய்வானை |
தல விருட்சம் | கல்லத்தி |
தீர்த்தம் | லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் |
ஆகமம்/பூஜை | காமிகம், காரணம் |
புராண பெயர் | தென்பரங்குன்றம் |
ஊர் | திருப்பரங்குன்றம் |
மாவட்டம் | மதுரை |
கட்டடக்கலை வடிவமைப்பு | பாண்டியர் மற்றும் நாயக்கர் கால குடைவரைக் கோயில் |
கோபுரத்தின் உயரம் | 46 மீட்டர் |
வரலாறு
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்ததால் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.
புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமான், பிரணவ மந்திரத்தினையும், அதன் உட்பொருளையும், பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
இந்நிலையில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று, சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான்.
அவ்வண்ணமே முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.
சூரபத்மனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானையை திருமணம் செய்து தந்தது இந்த திருப்பரங்குன்றத்தில் தான்.
இதே திருமண கோலத்தில் முருகப்பெருமான் இங்கு எழுந்தருளினார். இந்த நிகழ்விற்கு பிறகு சுவாமிக்கு சுப்பிரமணியசுவாமி என்ற பெயர் சூட்டப்பட்டது.
கோவில் அமைப்பு
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்பு கலையம்சங்களும், இதர சிற்ப அம்சங்களும் பிரமிக்கத்தக்கவையாக உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர, திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.
அர்த்த மண்டபத்தில், சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும். ‘முருகன் தெய்வானை திருமணக்கோலம்’ போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
முருகப்பெருமான் கருவறை
முருகப் பெருமான் கருவறைக்குள் அமர்த்த நிலையில் அருள் பாலிக்கிறார். முருகப் பெருமான் கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் இடம் பெற்று உள்ளனர். முருகப்பெருமான் திருவுருவத்தின் மேற்பகுதியில் சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரியும், சித்தவித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் காட்சி நல்குகின்றனர். கீழே யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டராபரானார், உக்கிரமூர்த்தி ஆகியோர்களும் காட்சியளிக்கின்றனர்.
துர்க்கையம்மன் ( கொற்றவை ) கருவறை
முருகப் பெருமான் கருவறைக்கு மேற்கில் அருகில் அர்த்த மண்டபத்தின் மையப்பகுதியில் துர்க்கை ( கொற்றவை ) மகிஷத்தின் தலைமீது நின்ற கோலத்தில் பெரிய உருவில் அமைக்கபட்டிருப்பதை பார்க்கும் பொது இக்கோயிலைத் துர்க்கையம்மன் கோயிலாக என்னத் தோன்றும்.
கற்பக விநாயகர்
பூதகணங்கள் சூழ்ந்திருக்கவும், தேவதூதர்கள் வாத்தியங்கள் இசைக்கவும், தாமரை மலரில் அமர்த்த நிலையில் கற்பக விநாயகர் காட்சி தருகின்றார். இப்பிள்ளையாருக்கு பாச அங்குசம் கையில் இல்லை. மோதகமும், கரும்புமே கையில் உள்ளன.
பவளக் கனிவாய்ப் பெருமாள்
கிழக்குப் பகுதியில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். அவருக்கு இருபுறமும் மஹாலக்ஷ்மி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால் இவருக்கு மால்விடை என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு தலத்தில் இல்லை என்பதும் அறியத்தக்கதாகும்.
சத்தியகிரீஸ்வரர்
மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். சோமாஸ்கந்தர் உருவம் உள்ளது.
ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில் தான் முருகப் பெருமான் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முருகப் பெருமானின் கையிலுள்ள வேலுக்கே எல்லாவிதமான அபிசேஷகம் நடைபெறுகிறது. மேலும் கோயிலின் மேற்குப் பக்கங்களில் பல மண்டபங்கள் உள்ளன. கோயிலின் பரப்பளவு சுமார் 6 ஏக்கர் உள்ளது. உயர்ந்து விளங்கும் மண்டபங்களின் தோற்றமும், ஒரே முறையில் பல படிகளமையாமல் பல முறைகளில் படிகள் அமைத்திருக்கும் பாங்கும், ஆண்டவனைத் துன்பப்படாமல் அடையும் நெறியை பல மார்கங்களில் காட்டுகிறது என்பர்.
கோயிலின் அமைப்பும், வனப்பும், ஏழிலும் போற்றத்தக்கது. `வேண்டுவோர் வேண்டுவன `ஈபவ` -ராகிய முருகபெருமானின் மூர்த்தம் தனிச்சிறப்பும், உயர்வும் வாய்ந்தது. நக்கீரர், அருணகிரிநாதர் முதலிய பல அடியார்களுக்கு அருள் ஞானம் தந்தருளிய பெருமை பெற்றது. இன்னும் எண்ணற்ற அன்பர்களின் மனக்கருத்தைக் காலம் காலமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இம்மூர்த்தியின் கீர்த்தியை யாவரே புகழ வல்லார் ?
வேல் அபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோவிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோவில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
திருக்குளம்
சரவணபொய்கை
கோயிலின் கிழக்கே 2 கிமீ தூரத்தில் சரவணப்பொய்கை இருக்கிறது. இது சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு உள்ளது. தென்புறம் மலையும், வடபுறம் நீண்ட படிக்கட்டுகளும் அமைத்தது மலைக்கு அழகு செய்கின்றன. பெரும்பாலும் இக்குளத்தில் நிராடிவிட்டு மக்கள் வழிபாட்டிற்குச் செல்கின்றனர்.
லட்சுமி தீர்த்தம்
கோயிலுக்குள் செல்லும் முன் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் கை, கால்களை அலம்பிவிட்டுச் செல்வர். இத்தீர்த்தத்தில் உப்பு, மிளகு, வெல்லம் முதலியவற்றைப் பக்தர்கள் வாங்கிப் போடுவதால் பருவு, பத்து, தேமல் முதலிய அனைத்துத் தோஷங்களும் நீக்குவதற்காக செய்யப்படுகின்றன. மேலும் பக்தர்கள் மீனுக்குப் பொரியும் வாங்கிப் போடுவார்கள். இத்தீர்த்தம் தெய்வானைக்காக முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.
தெப்பக்குளம்
இத்தீர்த்தம் குன்றின் அடிவாரத்தில் வடபகுதியில் நெடுசாலைக்கருகில் உள்ளது.
இதனைச் சத்தியகூபம் என்றும் அழைப்பர். இத்தீர்த்தத்தில் தான் முருகப் பெருமானுக்குத் தை மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
நீளம் | 252 அடி |
அகலம் | 250 அடி |
ஆழம் | 10 அடி |
தெப்பக்குளத்தின் பரப்பளவு | 63000 ச.அடி |
கோவிலின் சிறப்பு அம்சம்
முருகன் அருகில் கருடாழ்வார்
சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.
வெள்ளை மயில்
மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்போம். ஆனால், திருப்பரங்குன்றம் கோவிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.
தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்
இக்கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக “ருத்ராபிஷேகம்” செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்” சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.
லிங்க வடிவ மலை
மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
பரம்பொருளாகிய சிவன் குன்று வடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்” என்றும், தலம் “பரங்குன்றம்” என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சிவன் கோவிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை “சத்தியகிரீஸ்வரர்” என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோவிலாக மாறிவிட்டது. இத்தலத்தில் சிவன், மலை வடிவில் அருளுகிறார். பரம்பொருளாகிய சிவன், குன்று வடிவில் அருள் செய்வதால் சிவனுக்கு “பரங்குன்றநாதர்” என்றும், தலம் “திருப்பரங்குன்றம் என்றும் பெயர் பெற்றது. இவரை வேத வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஆனி பவுர்ணமியில் சிவனுக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது விசேஷம்.
நக்கீரர் சன்னதி
சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது.
நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார்.
அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார்.
வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.
கோவில் முக்கிய திருவிழாக்கள்
திருப்பரங்குன்றம் கோவிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்” என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.
- வைகாசி விசாகம்
- ஆடி கிருத்திகை,
- புரட்டாசி வேல் திருவிழா
- கந்த சஷ்டி
- திருக்கார்த்திகை
- தைப்பூசம்
- பங்குனி உத்திரம்
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்
திருமண தடை, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை மனதார வேண்டினால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடனாக இக்கோவிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக தேதி – 06/06/2011
தமிழ் தேதி – 23-வைகாசி
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும்.
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் – 625 005.
தொலைபேசி எண் : 04522482248
மேலும் படிக்க
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்