சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்

சுவாமிமலை

முருகனின் ஆறுபடை வீடுகளில் சுவாமிமலை நான்காம் படை வீடாகும்.

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டத்தில், சுவாமிமலை எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் சுவாமிநாதர், சுப்பையா
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் நெல்லிமரம்
தீர்த்தம் வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் திருவேரகம்
ஊர் சுவாமிமலை
மாவட்டம் தஞ்சாவூர்

கோவில் வரலாறு

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு ஒரு சமயம் தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான். கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார்.

முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது.

சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். பிறகு ஈசன், பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல் சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட தன் மகனை ‘நீயே சுவாமி’ என்று கூறினாராம். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் ‘சுவாமிமலை’ என்று அழைக்கப்பட்டது.

கோவில் அமைப்பு

மலையே இல்லாத சோழ தேசத்தில், சிறியதொரு மலையின் மீது அருளாட்சி செய்கிற கந்தப் பெருமான் திருகோலம் அளவிட முடியாதது. இந்தத் தலத்து நாயகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தத் தலமும் சுவாமிமலை என்று கொண்டாடப்படுகிறது.

கருவறையில், சுமார் நான்கரை அடி உயரத்தில் கம்பீரமும் கருணையும் ததும்ப கனிவு முகம் காட்சி நம்மைச் சிலிர்க்க வைக்கிறார் சுவாமிநாத சுவாமி.

வலது திருக்கரத்தில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். இடுப்பில் ஒய்யாரமாக இடது திருக்கரத்தை வைத்திருக்கிறார். திருமார்பில் ருத்திராட்சத்துடன் அற்புதமாக காட்சி தரும் சுவாமி நாத சுவாமி, ஞானமும் சாந்தமும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வணங்கினால் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.

மாடக்கோவில் கட்டமைப்பு

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோவில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.

இத்திருக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் (பிரகாரம்) உள்ளன. முதல் திருச்சுற்று மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்திருச்சுற்றில்தான் தங்கரத உலா புறப்பாடு நடைபெறுகிறது. முதல் திருச்சுற்றிலிருந்து 32 படிகள் கடந்து சென்றால் நடுச்சுற்றை அடையலாம்.

இரண்டாம் திருச்சுற்று மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. நடுச்சுற்றிலிருந்து 28 படிகள் ஏறினால் மலைக்கோயிலை அடையலாம்.

மூன்றாவது சுற்று சுவாமிநாதப்பெருமானின் சன்னதியை சுற்றி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 300 அடி நீளமும் 295 அடி அகலமும் உடையது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோவிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் ‘கண்கொடுத்த கணபதி’ என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் இப்பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.

தல விருட்சம்

ஈசனின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!’ என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியைச் சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, சுவாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.

கோவிலின் சிறப்பு அம்சம்

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன.

சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர்.

சிற்ப வல்லுநர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன.

சுவாமிமலை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.

அழகு அலங்காரம்

இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார்.

கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும்.

திருப்படி பூஜை

இந்த மலையின் மேலுள்ள கோயிலை அடைய 60 படிகளை ஏறி கடக்க வேண்டும். இந்த படிகள் சபரிமலையில் இருக்கும் 18 படிகளை போன்று புனிதமானதாக கருதப்படுகின்றன. அந்த படிகள் புனிதமானதாக கருதப்பட காரணம், 60 படிகளும் அறுபது தமிழ் வருடங்களை குறிப்பதாகவும், அவ்வருடங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளாக இங்கு வந்து முருகனை வழிபட்டு இங்கே படிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்புகளின் போது இந்த படிகளுக்கு கடவுள் சிலைகளுக்கு செய்வதை போன்றே வஸ்திரம் அணிவித்து தேங்காய், பழம் போன்றவை படைக்கப்பட்டு பூசைகள் செய்யப்படுகிறது.

நேத்ர புஷ்கரணி திருக்குளம்

இத்திருக்கோயிலின் திருக்குளம் கிழக்கே அமைந்துள்ளது. இத்திருக்குளத்தில் ஆடிகிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

பரப்பளவு 21204 sq.ft
ஆழம் 13 அடி
பயன்பாடு தெப்பம்

இங்குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப்புகள் உண்டு. வஜ்ர தீர்த்தம் கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர்.

இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும், பிரம்மஹத்தி தோஷமும் அகலும். இங்கு பாயும் காவிரியின் கிளை நதியை குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல, அந்தப் பாவங்களைத் தான் எங்கு போய்க் கழுவுவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து, குமாரக் கடவுளை வழிபட்டுப் புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.

பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, ‘பிரம்ம தீர்த்தம்’ என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

முருகப்பெருமான் புகழ் பாடியோர்

இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர், நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை , குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன.

திருவிழாக்கள்

  • திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள்
  • சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள்
  • வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா
  • ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள்
  • புரட்டாசி – நவராத்திரி பெருவிழா – 10 நாட்கள்
  • ஐப்பசி – கந்தசஷ்டி பெருவிழா – 10 நாட்கள்
  • மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள்
  • தை – பூசப்பெருவிழா
  • பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா

இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடி ஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு, அம்மாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கார்த்திகை, விசாகம் அன்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் திரள்வது வழக்கம்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.

சுவாமிநாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.

இத்தலத்தில் முக்கிய நேர்த்திக்கடனாக மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள்.

கும்பாபிஷேகம்

மஹாகும்பாபிஷேகம் – 9/9/2015

தமிழ் தேதி – 23-ஆவணி-மன்மத

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும்.

மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,

சுவாமிமலை,

தஞ்சாவூர் மாவட்டம் – 612302.

தொலைபேசி எண் : 04352454421

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *