திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருத்தணி

முருகனின் ஆறுபடை வீடுகளில் திருத்தணி ஐந்தாவது படை வீடாகும்.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி எனும் ஊரில் அமைந்துள்ளது.

மூலவர் சுப்பிரமணியசுவாமி
உற்சவர் சண்முகர்
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மகுடமரம்
தீர்த்தம் இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
ஆகமம்/பூஜை குமார தந்திரம்
புராண பெயர் சிறுதணி
ஊர் திருத்தணி
மாவட்டம் திருவள்ளூர்

வரலாறு

முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளிய்ம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது.

தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என்ற  பெயரமைந்தது.

முருகன் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார். மேலும், இக்கடவுளை ஐந்து குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் கடவுளின் ஆசியை பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள்.

திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது.

கோவில் அமைப்பு

இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

மலைகளில் சிறந்தது திருத்தணி என்று போற்றுகிறது கந்த புராணம். ‘திருத்தணிக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ, தணிகை மலை இருக்கும் திசை நோக்கி வணங்கினாலோ, தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ நோய்நொடிகள் நீங்கும், பாவங்கள் விலகும் என்கிறது தணிகை புராணம்.

அழகுத் திருத்தணிமலை

இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.

கோவிலின் சிறப்பு அம்சம்

வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதம் 365 படிகளுடன் திகழ்கிறது. இத் திருத்தணிமலை. இங்கு  1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் உற்சவர் சன்னதியாக உள்ளது. அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம்.

சுப்பிரமணியசுவாமி உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு ஆகும்.

முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால்தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கண்டால் திருமணம் தடைப்படுகிறவர்களுக்குக் கூட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்,

திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் அமைந்திருக்கிறது.

இக்கோவிலில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.

மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

மலையின் மீது கார் மற்றும் பேருந்து செல்வதற்கேற்ற சாலை வசதியும் உண்டு.

சரவணப் பொய்கை

முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்ப்டுவதக ஐதீகம். சரவணப் பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது மலைக்கோயிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக் குளத்தில் தெப்பத்தில் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

கஜவள்ளி

முருகனை மணக்க வேண்டி திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் அம்சத்துடன் ஒரே அம்பிகையாக “கஜவள்ளி’ என்னும் பெயரில் அருள்கிறாள்.

வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், கஜவள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.

படி பூஜை

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.

புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.இந்தத் திருவிழாவால்தான் முருகப்பெருமானுக்கு ‘தணிகை துரை’ என்ற பெயரும் உருவானது.

வாசல் பார்த்த யானை

இங்கு முருகன் யானை வாகனத்தில் காட்சி தருகிறார்.அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.

தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து தந்தபோது, இந்திரன் ஐராவதத்தை (தேவலோகத்து வெள்ளை யானை) சீதனமாக கொடுத்தார். இதனால், தேவலோகத்தின் வளம் குறைந்தது. இதனால் இந்திரன் ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது.

சந்தன பிரசாதம்

இத்தலத்தில் முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுகொள்வதற்கு பதிலாக, நீரில் கரைத்து குடித்தால்   பல நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த சந்தன பிரசாதம் விழாக்காலங்களில் மட்டுமே கிடைக்கும்.

சப்தரிஷி தீர்த்தம்

சப்தரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, வெயில் நுழையாமல் அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது.

திருத்தணி நகரின் வெளிப்புறத்தின் நந்தியாற்றங்கறையில் பழமை வாய்ந்த விஜயராகவ சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் வீரட்டீஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழய காலம் தொட்டு நீண்ட வருடங்களாக ஆறுமுக சுவாமி கோயிலில் அமைந்துள்ள மூலவரின் பாதத்தில், மார்பில், சிரசில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுந்து காணப்படுவது பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.

அகத்திய தீர்த்தம்

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன.

ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது.இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.

திருவிழாக்கள்

  • படித்திருவிழா
  • ஆடிக்கிருத்திகை
  • ஆடித் தெப்பத் திருவிழா
  • கந்தசஷ்டி
  • பங்குனி உத்திரம்
  • தைப்பூசம்

ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர். இத்திருவிழாவின் போது இரவு பகல் முழுவதும் பக்தர்கள் போடும் அரோஹரா கோஷம் மற்றும் பக்தர்கள் வரிசையாக ஆடிப் பாடி செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

இத்தலத்தில் பக்தர்கள் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள். எத்தனை கோபம்,  மனக்குழப்பம் ஆகியவைகளோடு இருந்தாலும் முருகனை வணங்கினால் அத்தனை கோபமும், குழப்பங்களும் விலகிவிடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர்.

இக்கோயிலின் முக்கிய நேர்த்திக்கடனாக மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிசேக ஆராதனைகள், அன்னதானம் வழங்குவது, ஆகியவை  நேர்த்திகடன்களாக உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்தே இருக்கும்.

முகவரி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் – 631209.

தொலைபேசி எண் : +91-44 2788 5303

கோவில் வழித்தடங்கள்

திருத்தணியிலுள்ள அழகான சுப்பிரமணியசுவாமி கோயில் சென்னையிலிருந்து மும்பாய் (பம்பாய்) செல்லும் இருப்புப்பாதை வழியில் அரக்கோணத்திற்க்கு வடக்கே 13 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து மேற்கே திருவள்ளூர் வழியாக 87 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 37 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து தெற்கே 66 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு எல்லா வழித்தடங்களிலும் பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *