முருகனின் ஆறுபடை வீடுகளில் சோலைமலை ஆறாவது படை வீடாகும்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டத்தில், சோலைமலை எனும் ஊரில் அமைந்துள்ளது.
மூலவர் | தம்பதியருடன் முருகன் |
தல விருட்சம் | நாவல் |
தீர்த்தம் | நூபுர கங்கை |
ஊர் | சோலைமலை (பழமுதிர்ச்சோலை) |
மாவட்டம் | மதுரை |
வரலாறு
முருகப்பெருமான் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்தார்.
இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.
தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற தமிழ்பாட்டி அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி, அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார்.
அவ்வையார் நடந்து வந்த களைப்பால் முருகன் அமர்ந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் . நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், “குழந்தாய் எனக்குப் பசிக்கிறது, சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், “சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ” என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக “சுடாத பழத்தையே கொடுப்பா” என்று கேட்டுக் கொண்டார். “சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ” என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், “என்ன பாட்டி.. பழம் சுடுகிறதா?” என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, “குழந்தாய்.. நீ யாரப்பா? ” என்று கேட்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார்.
முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, “உயிர்களின் மீது “உலகப்பற்று’ என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்’ என்பதே அது.
கோவில் அமைவிடம்
பழமுதிர்சோலை முருகன் கோவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. விஷ்ணு கோவிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது.
பழமுதிர்சோலை மலைக்குரிய கடவுளாகிய முருகவேளுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று.
இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. பழமுதிர்சோலை என்பதற்கு “பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை” என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
கோவிலின் சிறப்பு அம்சம்
ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோயில் அழகர் கோயில் மலையில் நூபுர கங்கை என்னும் சிலம்பாற்றுக்குச் செல்லும் வழியில் மலை மீது சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுப்பப் பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோவில் சோலைமலை (பழமுதிர்சோலை) மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.
இத்திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
சைவ-வைணவ ஒற்றுமை
அழகர்கோவில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள மூலவருக்குக் கள்ளழகர் என்பது திருநாமம். “மலையலங்காரன்” என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்குச் சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. முருகப்பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று நைவேத்தியமாக தேனும் தினை மாவும் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.
இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை.
இத்தலத்தில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.
இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கிச் சிவ, வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
நூபுர கங்கை தீர்த்தம்
பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் இந்த புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
நாவல் மரம்
பொதுவாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.
திருவிழாக்கள்
இக்கோவிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்
திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடனாக முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்தே இருக்கும்.
முகவரி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
சோலைமலை (பழமுதிர்சோலை),
மதுரை மாவட்டம் – 625301.
தொலைபேசி எண் : +91-452-2470228
முருகனோடு மும்மூர்த்திகளின் அருள்
“முருகா” என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள்.
‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும்.
‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும்.
‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும்.
மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
முருகன் பழமொழிகள்
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப்பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
முருகனின் அவதார நாள்
முருகப் பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்த காரணத்தால் விசாகன் எனவும் அழைக்கப்படுகிறார். வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமானின் அவதார நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும் எமதர்மனின் அவதார தினமாகவும் இது கருதப்படுகிறது.
வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ்வதற்கான அருள் கிடைப்பதாக என்று கூறப்படுகிறது.
வசந்தகாலத்தின் பிற்பகுதியில் வைகாசி மாதம் வருவதால் வைகாசி விசாக நாளில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.
வைகாசி விசாக நாளின்போது நிறைய கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாக நாளில் பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக நாளில் விரதம் இருந்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.
பொதுவாக வைகாசி விசாக நாளில் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் தேங்கியிருக்கும்படி செய்து கடவுளுக்கு சிறு பருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் ஆகியவற்றை படைத்து வெப்பம் தணிக்கும் விழாவான “உஷ்ணசாந்தி உற்சவம்” நடத்தப்படுகிறது.
முருகனின் சிறப்புகள்
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். முருகப் பெருமானை வணங்க சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய இவை அனைத்துமே உகந்த நாட்கள் ஆகும்.
முருகனுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும் முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும் அவைகளில் சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2 தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3 இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
மேலும் படிக்க
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்