காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது.
இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்றும் “பிருத்வி லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர் | ஏகாம்பரநாதர் ( ஏகாம்பரேஸ்வரர் ) |
அம்மன்/தாயார் | காமாட்சி ( ஏலவார்குழலி ) |
தல விருட்சம் | மாமரம் |
தீர்த்தம் | சிவகங்கை, கம்பாநதி |
பாடியவர்கள் | அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் |
ஊர் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வரலாறு
தழுவக்குழைந்த நாதர்
கைலாயத்தில் சிவன் தியானத்தில் இருந்தபோது, அம்பாள் ஈசனின் இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது.
தவறை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.
இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள்.
அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்’ என்ற பெயரும் இருக்கிறது.
கோவில் அமைப்பு
ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்
இக்கோயில் பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது.
இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது. இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடு சேர்ந்துவிட்டன.
இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் வராகமும் கட்கமும் இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.
இராஜகோபுரம்
இத்திருக்கோவில் தென்புறத்தில் அமைந்துள்ள இராஜகோபுரம் 192 அடி உயரமும் அதன் கல்காரம் 82 அடி அகலமும், 115 அடி நீளமும் 11 கலசங்கள் உள்ள இராஜகோபுரம் ஆகும். இக்கோபுரம் தமிழ் நாட்டிலேயே திருக்கோவிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய கோபுரம் ஆகும்.
தல விருட்சம்
இம்மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
ஏகாம்பரநாதர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது “திருமணகோலம்’ என்கிறார்கள்.
இத்தலத்தில் அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி “ஏகாம்பரேஸ்வரர்’ (ஏகம் – ஒரு; ஆம்ரம் – மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
கோவிலின் சிறப்பு அம்சம்
பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
லிங்க தரிசனம்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
ஏகாம்பரநாதர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது.
உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.
கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது.
ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் “கந்த புராணத்தை’ இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
திவ்ய தேசம்
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
சுந்தரருக்கு அருள்
கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார்.
திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.
பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் விநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலானது மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்டதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது.
கும்பாபிஷேகம்
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக தேதி – 31/08/2006
தமிழ் தேதி – 15-ஆவணி-விய
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம் பெருவிழா – 13 நாட்கள் நடைபெறும் – வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் – இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கலந்து கொள்வர்.
பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோசம், தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.
ஏலவார் குழலி திருமண விழா
பங்குனி ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி திருமண விழா. திருவிழா என்றாலே சிறப்பு, அதிலும் இது 13 நாள் திருவிழா. இந்த நாட்களில் காஞ்சி நகரம் தூங்க நகரமாகும். கொடியேற்றம் துவங்கி தீர்த்தவாரி வரை 13 நாட்களும் கொண்டாட்டம்தான்.
ஏகாம்பரநாதர் ஏலவார் குழலியின் திருமணத்திற்கு முன்தினம் பூனை குறுக்கே சென்றதால், ஏலவார் குழலி அம்மன் தன் தாய் வீட்டுக்கு சென்றதாகவும் அதன் பின் ஏகாம்பரநாதர் சமாதானம் செய்து திருமணத் திற்கு அழைத்து வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதுசரி, 13 நாள் அப்படி என்ன நிகழும்?
- முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது பங்குனி உத்திரம். அன்று மாலை சிம்ம வாகனத் தில் ஏகாம்பரநாதர் உலா வருகிறார்.
- இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை உற்சவம், மாலை சந்திர பிரபை உற்சவம்.
- மூன்றாம் நாள் அன்று பூத வாகனத்தில் சாமியின் தரிசனம்.
- நான்காம் நாள் அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் நாதர் உலா.
- ஐந்தாம் நாள் ராவனேஸ்வரர் உற்சவம்.
- ஆறாம் நாள் காலை அறுபத்தி மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களின் உற்சவம். அன்று மாலையே ஏகாம்பரநாதர் வெள்ளி தேரில் திருவீதி உலா. நான்கு ராஜா வீதி வழியே ஏகாம்பரநாதர் வெள்ளி தேரில் உலா வருவதை காண, மக்களிடையே அப்படி ஒரு உற்சாகம்.
- ஏழாம் நாள் கட்டைத்தேரில் (மரத்தேர்) பவனி.
- எட்டாம் நாள் குதிரை வாகனம்.
- ஒன்பதாம் நாள் மாவடி சேவை, முன்பு சொன்ன அந்த மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியின் வரவேற்பு நிகழ்ச்சி.
- பத்தாம் நாள் காலை திருமணம்தான். பங்குனி உத்திரம் என்றழைக்கப்படும் திருக்கல்யாண பெருவிழா நிறைவேறும்.
- பதினொன்று மற்றும் பனிரெண்டாம் நாட்களில் ருத்ரகோட்டி உற்சவம், பஞ்ச மூர்த்தி உற்சவம் போன்றவை நிகழும்.
- 13ஆம் நாள் நிகழ்வான தீர்த்தவாரி, கோவிலுக்கு அருகே உள்ள சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ, யானை உற்சவம் முடிந்த பின் கொடி இறக்கத்துடன் பங்குனி உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்
இத்தலத்தில் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனையாக திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை ஆகும்.
ஏகாம்பரநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இக்கோவிலுக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும்.
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்,
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631502.
தொலைபேசி எண் : 27222084
மேலும் படிக்க
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்
திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்