திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நீரைக் குறிக்கிறது.

இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஜம்புகேசுவரர் என்றும் “அப்பு லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் ஜம்புகேசுவரர்
உற்சவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வெண்நாவல்
தீர்த்தம் நவ தீர்த்தங்கள், காவேரி
ஆகமம்/பூஜை சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜை
புராண பெயர் திருஆனைக்காவல், திருஆனைக்கா
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர்
ஊர் திருவானைக்கா
மாவட்டம் திருச்சி

வரலாறு

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.

யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார்.

கோச்செங்கட்சோழ மன்னர்

சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே பூர்வஜென்ம வாசனையால் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவையாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.

கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேசுவரர் ஆலயமாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

கோவில் அமைப்பு

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள்.

மூலவர் ஜம்புகேசுவரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இறைவன் சந்நிதியிலுள்ள 9 துளை சாளரம் வழியே இறைவனை தரிசித்தால், ஒன்பது தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இந்த துவாரங்கள் வழியே இறைவனை தரிசிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.

மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கல்வெட்டுகள்

பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.

சிற்பங்கள்

பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் காணக் கிடைக்கின்றது.

ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளாள்.

தல விருட்சம்

இத் தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.

சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.

நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.

இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம் தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.

கோவிலின் சிறப்பு அம்சம்

ஜம்புகேசுவரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள 9 வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது.

ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம்.

வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள்.

அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேசுவரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார்.

ஜம்புகேசுவரர்க்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்பிகை வழிப்பட்ட லிங்கம்

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அதனை வழிபட்டாள், சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார்.

விபூதி பிரகாரம்

மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.

சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும், பிரகாரம் “விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்

திருவானைக்கா, அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க, ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்கிரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போலப் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்லச் சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சிவமும், சக்தியும் ஒன்று

பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள்.

சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகளான நிலையில், இரண்டு கட்டமாகக் குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுப் பாலாலயம் அமைக்கப்பட்டது.

முதற்கட்ட குடமுழுக்கு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகர், மல்லப்பா கோபுரம் அருகிலுள்ள விநாயகர் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சன்னிதி, 108 சிவலிங்க சன்னிதி ஆகிய 45 சன்னிதிகளின் விமானங்கள், உற்சவமூர்த்திகளுக்கு 9 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட குடமுழுக்கு இராச கோபுரங்களுக்கு 12 டிசம்பர் 2018-இல் நடைபெற்றது.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

திருவிழாக்கள்

  • பங்குனியில் பிரம்மோற்ஸவம்
  • ஆடிப்பூரம்
  • ஆடிவெள்ளி

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும்.

மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில்,

திருவானைக்காவல்,

திருச்சி மாவட்டம் – 620005.

தொலைபேசி எண் : 91-431-2230 257

மேலும் படிக்க

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *