திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கிறது.

இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் காளத்தீசுவரர் என்றும் “வாயு லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் காளத்தியப்பர், காளத்தீசுவரர்
அம்மன்/தாயார் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு

புராண பெயர்:சீகாளத்தி, திருக்காளத்தி

அமைத்தவர் இராசேந்திர சோழன்
பாடியவர்கள் அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
ஊர் காளஹஸ்தி
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திர பிரதேசம்

வரலாறு

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: வாயுதேவனே… நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலாய மலை 8 பாகங்களாக உடைந்து உலகின் 8 இடங்களில் விழுந்தது.

அவை, திரிகோணமலை, ஸ்ரீகாளஹஸ்தி, திருசீரமலை, திருவெண்கோய்மலை, ராஜதகிரி, நீர்த்தகிரி, ரத்னகிரி மற்றும் ஸ்வேதகிரி. அதில் இரண்டாம் பாகம் விழுந்த இடம் ஸ்ரீகாளஹஸ்தி. அதனால் காளஹஸ்தியும் கயிலாய மலையின் ஒரு பகுதி ஆகும். காளஹஸ்தி கோயில், துர்கம்மா மலை மற்றும் கண்ணப்பர் மலை என்ற இரு வேறு மலைகளின் நடுவில் அழகுற அமைந்துள்ளது.

கண்ணப்ப நாயனார் கதை

காளஹஸ்தியை அடுத்த உட்டுகுரு கிராமத்தில் வேடர் (முத்தரையர், தற்போது வழக்கத்தில் உள்ளது) குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். (ஒருகாலத்தில் தமிழகத்துடன் இணைந்திருந்த பகுதி) அவர்களின் வழிபாட்டுத் தெய்வம் ஆறுமுகக் கடவுள். கண்ணப்பன் மிகவும் பலசாலியாக இருந்ததால் திண்ணப்பன், தீரன் என்றும் அழைக்கப்பட்டார். பாசுபதாஸ்திரத்தைப் பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அதைச் சோதித்த சிவபெருமான் அர்ஜுனனுக்கு அஸ்திரத்தை வழங்கியதோடு, அவர் மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அருளினார்.

அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் திண்ணனாக அவதரித்தார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் அங்கிருந்த சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறையை அறியாத திண்ணன் தன் பக்தியை அவர் அறிந்த முறையில் தூய்மையாக வெளிப்படுத்தினார்.

சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் உள்ள மலர்கள், இலைகளால் மாலை கட்டி, அதை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தார்.

அவரின் பக்தியை உலகிற்குப் பறைசாற்ற நினைத்த சிவபெருமான், ஒருநாள் திண்ணன் வழிபட வரும்போது கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார். சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து அர்ப்பணித்த அவரின் பக்தியைப் போற்றி, நேரில் காட்சி அளித்து ஆட்கொண்டார்.

சிவனுக்குக் கண் கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். நாயன்மார்களில் ஒருவராகவும் கண்ணப்பன் கருதப்படுகிறார்.

லிங்க வழிபாடு

உலக தோற்றத்தின் ஆரம்ப காலத்தில் வாயு பகவான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கற்பூர லிங்கத்தை ஏற்படுத்தி அதன் முன்பு தவம் இயற்றி வந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு காட்சியளித்து, வாயு பகவானே, ஓரிடத்தில் இருக்கும் தன்மையில்லாத நீ, ஆயிரம் ஆண்டுகள் சிறு நகர்வில்லாமல் ஓரிடத்திலிருந்து தவம் புரிந்ததன் பயனாக, 3 வரங்களை அளிப்பதாகக் கூறினார்.

அதன்படி வாயு பகவான், “தான் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்”, “ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்க வேண்டும்”, “நான் வழிபட்ட கற்பூர லிங்கம் என்னுடைய பெயராலே வழங்கப்பட வேண்டும்’, என்று 3 வரங்களைக் கேட்டார்.

அதன்படி 3 வரங்களை அளித்தார் சிவபெருமான். மேலும் இந்தக் கற்பூர லிங்கத்தைத் தேவர்கள், முனிவர்கள், சூரர்கள், அசுரர்கள், கன்னரர்கள், கந்தர்வர்கள், கருடன், கிம்புருவர்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிபுங்கவர்கள், மனிதர்கள் என அனைவரும் வணங்குவர் என்றும் கூறி மறைந்தார்.

அதனால் வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் லிங்க வழிபாடு தொடங்கியது.

வாயு பகவானுக்கு என ஏற்படுத்தப்பட்ட முதல் கோயில் இது என்ற தனித்தன்மையை இந்தக் கோயில் பெற்றுள்ளது. மேலும், ஈசன் சாபம் பெறப்பட்ட உமையவளும் இந்த க்ஷேத்திரத்தில் வந்து லிங்கத்தைப் பூஜை செய்து ஞானம் பெற்றதால், இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி ஞானபிரசுனாம்பா என்று அழைக்கப்படுகிறார்.

சிவனின் தலையில் இருக்கும் கங்கை இத்தலத்தில் சொர்ணமுகி என்ற பெயரில் கோயிலைச் சுற்றிப் பிரவகிக்கிறாள். மேலும் சாபம் பெற்ற இந்திரன், சந்திரன், மயூரன் உள்ளிட்ட பலரும் காளஹஸ்தியில் உள்ள சொர்ணமுகி நதியில் மூழ்கி சாப விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.

கட்டடக் கலை

இத்தலம் திராவிட கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் உட்பிரகாரம் 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பிறகு, 6 நூற்றாண்டுகள் கடந்து இக்கோயிலின் வெளிப்பிரகாரம், 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனாலும், நூற்றுக்கால் மண்டபம் விஜயநகர அரசர்களாலும் கட்டப்பட்டன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் காளத்தீசுவரன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யானையின் தந்தம் போன்ற வடிவமைப்பு கொண்ட இவரின் லிங்கத் திருமேனி வெள்ளைக் கல்லால் ஆனது. இக்கோயிலில் 1516-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜகோபுரத்தை ஏற்படுத்தினார்.

புதிய கோபுரம்

ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஏற்படுத்திய ராஜகோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இடிந்து விழுந்தது. அதை ஆந்திர அறநிலையத் துறை சீர்படுத்தி, மீண்டும் இப்பகுதியில் நன்கொடைகள் வசூல் செய்து ரூ. 45 கோடி பொருள் செலவில் புதிய பிரம்மாண்ட ராஜகோபுரத்தை 2017ம் ஆண்டு எழுப்பி ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தியது.

144 அடி உயரமும் 22 அடுக்குகளும் கொண்ட இந்த ராஜகோபுரத்தின் மீது கிரேன் மூலம் தலைமை குருக்கள் மட்டும் சென்று பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிட வேண்டிய பதிவு.

கோவிலின் சிறப்பு அம்சம்

கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள்.

மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே – அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர்.

இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.

கைபடாத லிங்கம்

காளஹஸ்தி கோயிலில் எழுந்தருளியுள்ள மூர்த்தியின் மீது இதுவரை யார் கைகளும் பட்டதில்லை. வாயுபகவான் கற்பூரத்தால் செய்த சிலை என்பதால், இந்த லிங்கத் திருமேனியைக் கோயிலில் பணிபுரியும் குருக்கள் உள்பட தீண்டியவர் யாரும் இல்லை. அதனால் கைபடாத லிங்கம் என்ற பெருமை பெற்றவர் காளத்தீசுவரர். உற்சவ மூர்த்திக்கு மட்டுமே இங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

கிரகண காலத்திலும் தரிசனம்

இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலம் என்பதால், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின்போது மூடப்படாமல் முழு நேரமும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். கிரகண தோஷம் நீங்கப் பக்தர்கள் இங்கு வந்து பூஜைகளிலும் கலந்துகொண்டு செல்கின்றனர்.

சீர்வரிசை

இக்கோயிலின் இறைவி ஞானபிரசுனாம்பிகை அம்மன் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில் வெள்ளத்தூரர் கோத்திரத்தில் பிறந்து, தவம் புரிந்து இறைவனை அடைந்தார்.

அதனால் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின் போது வெள்ளத்தூரர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அம்மனுக்குச் சீர்வரிசை அனுப்பும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

ராகு-கேது பரிகார பூஜை

சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் இந்த கோயில் சிவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றுள்ளனர். அதனால் கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டதைப் போன்ற தோற்றம் வெளிப்படும். எனவே, இக்கோயிலில் ராகு-கேது பரிகார பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். ராகு – கேது சர்ப்ப தோஷம், திருமண தோஷம், புத்திர பாக்கியம், தொழில் மேன்மை, கல்வி வளர்ச்சி, தங்களின் வளமான நல்வாழ்விற்காக என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இங்கே செய்யப்படும் பரிகார பூஜைகள் அமைந்துள்ளன.

மேலும் தங்களின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வாக இந்த பரிகார பூஜை அமைந்துள்ளது. இங்கு பரிகார பூஜை செய்தால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதற்காகக் கோயிலில் நிர்வாகம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் முன்பு, பூஜை செய்யும் பக்தர்கள் இங்கு வந்து இரவு கோயில் மண்டபத்தில் தங்கி அங்கேயே குளித்து இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.

இதில் தனியாகவும், தம்பதியராகவும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளிலும் வரும் ராகு காலத்தில் இந்த பூஜை செய்வதைப் பலர் விசேஷமாக கருதுகின்றனர். இதற்கான டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது.

இதற்கான பொருள்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூஜைகள் நடைபெறுகின்றன.

பூஜையின் பெயர்கள்

  • ராகு-கேது பரிகார பூஜை
  • சிறப்பு கால சர்ப்ப நிவாரண பூஜை
  • ராகு-கேது காலசர்ப நிவாரண பூஜை
  • சிறப்பு ராகு-கேது காலசர்ப நிவாரண பூஜை

பக்தர்கள் பூஜையைத் தேர்ந்தெடுத்துக் கோயில் வளாகத்தில் அளிக்கும் கவுண்டரில் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொண்டு மேற்படி பூஜையில் கலந்துகொள்ளலாம்.

பூஜைக்குத் தேவையான அனைத்தையும் கோயில் நிர்வாகம் வழங்கும். பூஜை முடித்த பின்னர் பக்தர்கள் தாங்கள் பூஜை செய்த நாக படங்களைக் கோயில் உண்டியலில் செலுத்தித் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்து தங்கள் ஊருக்கு புறப்படலாம்.

திருவிழாக்கள்

மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நேர்த்திக்கடனாக இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும்.

மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்,

காளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் – 517 644

ஆந்திர மாநிலம்.

தொலைபேசி எண் : +91 8578 222 240

மேலும் படிக்க

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *