திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னியைக் குறிக்கிறது.

இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் அருணாசலேஸ்வரர் என்றும் “ஜோதி லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்
அம்மன்/தாயார் உண்ணாமுலையாள், அபித குஜாம்பாள்
தல விருட்சம் மகிழமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை காரண, காமீகம்
புராண பெயர் திருவண்ணாமலை
ஊர் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை

வரலாறு

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார்.

பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். அவரால் காண முடியவில்லை என்றார்.

திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மஹாசிவராத்திரி நாளாகும்.

ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமான் திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி சிவபெருமானே சிவலிங்க திருஉருவம் கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அமைதுள்ள இடம் இத்திருக்கோயில் ஆகும்.

பிரம்மா பெற்ற சாபம்

பிரம்மன் சிவனின் முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தொலைவு உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

சிவபொருமனிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி

அர்த்தநாரீஸ்வரர் உமாதேவியார் சிவபெருமானின் கண்களை தன் கையால் மூட உலகம் எங்கும் இருளாயிற்று. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள் அடைந்தன. சிவபெருமான் மூன்றாவது கண்ணை திறந்து ஒளி வழங்கினார், உமாதேவியார் இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளச்செய்தார்.

சிவபெருமான் கட்டளைப்படி பார்வதி தேவியார் திருவண்ணாமலைக்கு வந்து பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். தவத்தை மகிடாசூரன் என்பவன் கெடுத்து வந்தான். உமாதேவியார் துர்க்கையை அனுப்பி மகிடாசூரனை வதம் செய்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி கூடிய கிருத்திகை பிரதோஷ காலத்தில் மலை மேல் ஜோதி ஸ்வரூப தரிசனம் கண்டு சிவபெருமான் இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார். அதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பெயர் காரணம்

அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது.

மலை

கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.

இங்குள்ள அண்ணாமலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

கோவில் அமைப்பு

அண்ணாமலையார் கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

கோயிலில் 9 கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே 6 பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை மேலும், முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

கோபுரங்கள்

நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.

கிளி கோபுரம் – 81 அடி உயரம், தெற்கே திருமஞ்சன கோபுரம் – 157 அடி உயரம், தெற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம், மேற்கே பேய் கோபுரம் – 160 அடி உயரம், மேற்கு கட்டை கோபுரம் – 70 அடி உயரம், வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் – 171 அடி உயரம், வடக்கு கட்டை கோபுரம் – 45 அடி உயரம்.

தல விருட்சம்

கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில ஆகும்.

கோவிலின் சிறப்பு அம்சம்

திருவாரூரில் ஒருவர் பிறந்தாலே முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என முன்னோர்கள் கூறுவதுண்டு. அந்த அள்விற்கு நினைத்தாலே முக்தி தரக் கூடிய அளவு திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டது. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1008 லிங்கம் அமைந்திருக்கிறது என்பர். இந்த மலையை ஒவ்வொரு இடத்தில்  நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம் என்பது சிறப்பு.

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

பாதாள லிங்கம்

மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், “பாதாள லிங்கம்’ இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

விநாயகரின் முதல்படைவீடு

விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

இந்த கிரிவழிப்பாதையிலேயே “இடுக்கு பிள்ளையார்” கோவில் இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இருக்கும் சிறிய இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து, முன்பக்கமாக வெளியில் வந்து விநாயகரை வேண்டிக்கொள்வதால் குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது திடமான நம்பிக்கை ஆகும். பில்லி சூனிய பாதிப்புகள், மனநல பிரச்சனைகள் இன்ன பிற பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

நந்திக்கு விசேஷ பூஜை

மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

கரும்புத் தொட்டில்

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.

கிரிவலம் தொடங்கும் முறை

அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.

திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவனவாகும். இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இது மட்டுமல்லாமல் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோயில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்விகப் பாதை கிரிவலப் பாதையாகும்.

முழு முதற்கடவுளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி வலம்வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுவதோடு, மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகள் நம் வாழ்வைச் சிறப்பானதாக மாற்றும்.

சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து, அவருடைய திருப்பெயரை உச்சரித்துக்கொண்டு பொறுமையாகவும், பக்தியுடனும் நடந்து செல்லவேண்டும். கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். கிரிவலம் செல்லும்போது எறும்புப் புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவிட்ட புண்ணியம் கிடைக்கும்.

அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள்தாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று ஞானிகளும், யோகிகளும் கூறியிருக்கிறார்கள்.

கிரிவலம்  நன்மைகள்

ஞாயிற்றுக்கிழமை சிவலோக பதவி கிட்டும்
திங்கள்கிழமை இந்திர பதவி கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை கடன், வறுமை நீங்கும்
புதன்கிழமை கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்
வியாழக்கிழமை ஞானம் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை வைகுண்டப் பதவி கிடைக்கும்
சனிக்கிழமை பிறவிப் பிணி அகலும்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக தேதி – 7/05/2019

திருவிழாக்கள்

பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகா தீபம், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், ஆகிய திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே.

இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.

பரணி தீபம்

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்

மாலை 6.00 மணிக்கு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக அண்ணாமலைக்கு அரோஹரா எனக்கூறி தரிசனம் கண்டபின் இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3000 கிலோ பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோயிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கவுரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள்.

ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் கோயிலில் அமைந்துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இக்கோயில் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்!

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

அண்ணாமலையார் வழிபட்டால் மனத்துயரங்கள் நீங்கும். திருமண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு  என எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம்.

மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர்.

இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர்.

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள்.

உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். அண்ணாமலையார்க்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

அண்ணாமலையார், அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.

பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 5.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும்.

மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் – 606601.

தொலைபேசி எண் : 04175252438

மேலும் படிக்க

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்
திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *