காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram district)

 காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.காஞ்சிபுரம் மாவட்டத்தை சுருக்கமாகக் காஞ்சி என்றும் கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது.

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்களில் சாக்தர், சைவர், வைணவர் எனப் பலவேறு சமயப் பிரிவினரும் வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நகரமாகும். 24, 2021 அன்று, காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் காஞ்சிபுரம்
பகுதி வட மாவட்டம்
பரப்பளவு 1655.94 ச.கி.மீ
மக்கள் தொகை 11,66,401 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 892
அஞ்சல் குறியீடு 631xxx
தொலைபேசிக் குறியீடு 044
வாகனப் பதிவு TN-21, TN-87
Contents
  1. வரலாறு
  2. மாவட்ட வருவாய் நிர்வாகம்
    1. வருவாய் கோட்டங்கள்
    2. வருவாய் வட்டங்கள்
  3. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
  4. காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகள்
  5. புவியியல்
  6. அரசியல்
    1. மக்களவைத் தொகுதிகள்
    2. சட்டமன்றத் தொகுதிகள்
  7. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
    1. முட்டுக்காடு
    2. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
    3. அண்ணா நினைவிடம்
    4. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
    5. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
    6. காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
    7. திருப்போரூர் உத்திர வைத்திய லிங்கேசுவரர் கோயில்
    8. திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்
    9. அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்
    10. திருப்புட்குழி
    11. சமணக் காஞ்சி
  8. பொருளாதாரம்
  9. அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை

வரலாறு

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டு காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலையிலும், தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.

சோழப் பேரரசில் இருந்த தொண்டை மண்டலப் பகுதிகளை பின்னர் பல்லவர்கள் வென்று காஞ்சி நகரத்தை தங்கள் தலைநகராகக் கொண்டு கிபி 300 முதல் கிபி 850 முடிய ஆண்டனர். பல்லவர்கள், தொண்டை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எழுப்பினர். அவைகளில் சிறப்பு மிக்கது மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள் ஆகும். பல்லவர்கள் மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து சீனா, சயாம், பிஜி போன்ற வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பல்லவர்களை வீழ்த்தி மீண்டும் சோழர்கள் காஞ்சிபுரத்தை கைப்பற்றி 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஆண்டனர். ஆங்கிலேயர்கள் காஞ்சிபுரம் பகுதிகளை கைப்பற்றி ஆள்வதற்கு முன்னர் விஜயநகர மன்னர்கள் 14ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.

காஞ்சி நகரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் தலைமையகமாக விளங்கியது. தண்டி எனும் வட மொழிப் புலவர், நறுமணமிக்கப் பூக்களில் மல்லிகையும்; அழகிய பெண்களில் அரம்பையரும், மனித வாழ்வின் நால்வகை ஆசிரமங்களில் கிரகஸ்தம் போன்று நகரங்களில் காஞ்சி சிறப்பு மிக்கது எனப்புகழ்கிறார்.

காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களில் பெரும் புலமை படைத்த முதலாம் மகேந்திரவர்மன் இசை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கிபி ஏழாம் நூற்றாண்டில் காஞ்சி நகரத்திற்கு வருகைபுரிந்த, பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், காஞ்சி நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டிருந்தது என்றும், வட இந்தியாவின் காசி நகரத்திற்கு இணையான கல்வி நிலையங்களை காஞ்சி நகரம் கொண்டிருந்தது என்றும் காஞ்சி மக்கள் கல்வி அறிவு படைத்தவர்கள் என்றும் தமது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

1977 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 29 நவம்பர் 2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்டது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டு வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டங்கள்

  1. காஞ்சிபுரம்
  2. ஸ்ரீபெரும்புதூர்

வருவாய் வட்டங்கள்

  1. உத்திரமேரூர்
  2. காஞ்சிபுரம்
  3. வாலாஜாபாத்
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. குன்றத்தூர்

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் 1 காஞ்சிபுரம் மாநகராட்சி, 5 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பில் 5 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகள்

மேற்கே இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டமும், வடக்கே திருவள்ளூர் மாவட்டமும் மற்றும் சென்னை மாவட்டமும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

புவியியல்

காஞ்சிபுரம் மாவட்டம் சென்னைக்கு தென்மேற்கே 72 கிமீ (45 மைல்) தொலைவில் அமைந்துள்ளது, இது பாலாறு ஆற்றின் துணை நதியான வேகாவதி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த நகரம் 11.6 km2 பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 83.2 மீட்டர் (273 அடி) உயரத்தில் இருக்கின்றது. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நிலம் தட்டையானது மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மண் பெரும்பாலும் களிமண் மற்றும் மணல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை கட்டுமானத்திற்கு பயன்படுத்த ஏற்றவை ஆகும்.

அரசியல்

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மக்களவைத் தொகுதிகள்

  1. காஞ்சிபுரம்
  2. ஸ்ரீபெரும்புதூர்

சட்டமன்றத் தொகுதிகள்

  1. ஆலந்தூர்
  2. காஞ்சிபுரம்
  3. திருப்பெரும்புதூர்
  4. உத்திரமேரூர்

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் நகரமென்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் விளக்கும் நகரமாக விளங்குகின்றது.மேலும், முட்டுக்காடு ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், அண்ணா நினைவிடம் போன்றவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

முட்டுக்காடு

முட்டுக்காடு படகுக் குழாம் சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும்.படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன.இது வங்காள விரிகுடாவின் உப்பங்கல் பகுதியும் ஆகும். நகர மையத்தில் இருந்து 36 கி.மீ தூரத்திலும், அடையாரிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் செல்லும் வழியில் இம்மையம் உள்ளது.

1984 ஆம் ஆண்டில் இந்தப் படகு வீடு திறந்து வைக்கப்பட்டது, 15 அதிவேக படகுகளும், 27 வேக படகுகளும், 9 கால்மிதி படகுகளும், இரண்டு உயர் வேக நீருக்கடி படகுகளும் இங்குள்ளன. இங்குள்ள நீரின் ஆழம் 3 அடி முதல் 6 அடி வரைக்கும் வேறுபடுகிறது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திர்கு சொந்தமான இம்மையத்திற்கு ஒவ்வொரு வாரமும் 4,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

நம் நாட்டின் சிறிய பறவை புகலிடங்களில் (மொத்தப் பரப்பு 40 ஹெக்டேர் மட்டுமே)ஒன்றாகவும் மிகவும் பழமை வாய்ந்ததுமான வேடந்தாங்கல், சிறப்பான வரலாற்றைப் பெற்றுள்ளது. வெகு நாட்கள் முன்னிலிருந்தே இக்கிராமத்து மக்கள் பறவை எச்சங்கள் வயல்வெளிகளுக்கு இயற்கை உரங்களாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.

இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம் என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்.

அண்ணா நினைவிடம்

தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம் மண்டபத்தின் தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.

கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் , காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடற்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

அந்தணச் சிறுவனாக அவதரித்த திருமால், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும், மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால், அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கத் திருமால் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் மற்றும் திருக்கார்வானம் என வழங்கப்படுகிறது.

திருப்போரூர் உத்திர வைத்திய லிங்கேசுவரர் கோயில்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மறையூர் அருகில் திருப்போரூர் என்னுமிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் முனிவர்கள் இங்கு தங்கி வேதங்ளை ஓதியதால் இவ்வூர் மறையூர் என்று பெயர் பெற்றது. வனமாக இருந்ததாலும், அகத்தியருக்கு இறைவன் காட்சி தந்ததாலும் இவ்வூர் காட்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.மூலவராக உத்திர வைத்திய லிங்கேசுவரர் உள்ளார். இறைவி தையல்நாயகி ஆவார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயிலைப் போல இக்கோயிலையும் கருதுகின்றனர்.

பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலர் வணங்கிய கோயிலாகும். தொண்டை மண்டலத்தில் வனப் பகுதியில் தவம் புரிய வந்த அகத்தியர் அப்பகுதியில் தண்ணீர் இல்லாததைக் கண்டு வருந்தி நித்திய பூசைகளுக்காகவும், மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகவும் இறைவனிடம் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ஒரு குளத்தை உண்டாக்கி, பின் மணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்தார்.

திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்

திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம்.

பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளிப் பெருமாளாகத் திருதன்காவில் தோன்றினர். யாகத்தைத் தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டுக் கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சரபத்தை அழித்தார்.

பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாகத் தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய்ப் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயைக் காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என ஆழ்வர்களால் அருளப்படுகிறார்.

அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே திருமால் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறாம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார். இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது.

தொண்டை மண்டலத்து வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது. திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்றது இத்தலம். மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

திருப்புட்குழி

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.

இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி ‘வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

சமணக் காஞ்சி

திருப்பருத்திக்குன்றம் அல்லது சமணக் காஞ்சி , காஞ்சிபுரத்திற்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது. பருத்திக் காடுகள் நிறைந்து இருந்ததால் இதனை திருப்பருத்திக்குன்றம் என்றும் அழைப்பர். இவ்விடம் பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது.

சமணக் காஞ்சியில் இரண்டு கோயில்கள் உள்ளது. அதில் ஒன்று பல்லவர் காலத்துக் கோயில் ஆகும். மற்றொன்று பல்லவர் காலத்திற்குப் பின்னர் கட்டப்பட்டது. சமணக் காஞ்சியில் சமண மடம் ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்றுக் குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. காஞ்சிபுரத்திற்கு, கி.பி.640-ல் சீன பௌத்த யாத்ரீகர் யுவான் சுவாங் இங்கு விஜயம் செய்ததாகவும், அச்சமயம் காஞ்சி மாநகரில் எண்பத்து மூன்று சமணக் கோயில்களைக் கண்டு சென்றதாகவும் தன் பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.

  1. சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
  2. 24வது தீர்த்தங்கரான மகாவீரர் எனும் வர்த்தமானர் மூலவராக உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பொருளாதாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 47% மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள், நவதானியங்கள் முக்கியப் பயிர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் பாயும் பாலாறு மற்றும் ஏரிகள் நீர் ஆதாரம் ஆகும்.

காஞ்சிபுரத்தை கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைப்பர். இம்மாவட்டத்தில் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரைப் பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காணப்படும் 163 பெருங்கற்கால இடங்களில், 70% காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது அவைகளில் குறிப்பிடத்தக்கது எருமையூர், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யன்சேரி, கீழம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகும்.

இந்தியாவின் பெருந்தொழில் நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் உண்டாய், நிஷான், மிட்சுபிசு, போர்டு, பிஎம்டபிள்யு, யமகா போன்ற கார் நிறுவனங்கள் உள்ளது. ஸ்ரீபெரும்புதூரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெருந்தொழில் முனையமாக உள்ளது. மேலும் சாம்சங், டெயிம்ளர், டெல் போன்ற மின்னனு பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. செயிண்ட் கோபன் கட்டிட கண்ணாடிகள் உற்பத்தி நிறுவனமும் உள்ளது. பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் தங்கள் கிளைகளைக் கொண்டுள்ள்து.

அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை

அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் 1969-இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981-ஆம் ஆண்டு புற்றுநோயாளிகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *