சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை நடராசர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத்தை குறிக்கிறது.

இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் திருமூலநாதர் என்றும் “ஆகாச லிங்கம்” என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் திருமூலநாதர் ( மூலட்டனேஸ்வரா், சபாநாயகா், கூத்தப்பெருமாள், விடங்கா், மேருவிடங்கா், தட்சிணமேருவிடங்கா், பொன்னம்பலகூத்தா், தில்லைவனநாதா் )
உற்சவர் நடராஜா் (கனகசபைநாதா்)
அம்மன்/தாயார் உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)
தல விருட்சம் தில்லைமரம்
தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
புராண பெயர் தில்லை
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்

வரலாறு

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.

இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.

பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார்.

உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார்.

மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

பெயர்க்காரணம்

தில்லை நடராசர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகருக்கு புராண காலத்தில் நிறைய பெயர்கள் இருந்துள்ளன. அவற்றில் தில்லை, பெரும்பற்ற புலியூர், தில்லை வனம் என்பவை பலரால் அழைக்கப்பட்டு வந்த பெயராகும்.

தில்லை மரங்கள் நிறைந்து வளர்ந்த இடங்கள் ஆதலால் இதற்கு தில்லை எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது திருச்சிற்றம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிற்றம்பலம் என்பது மருவியே சிதம்பரம் ஆகியிருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் – இதயம்”, “அம்பரம் – ஆகாசம்”. சித்தம் + அம்பரம் – சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.

கோவில் அமைப்பு

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 ஆயகலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

சிதம்பரம் கோவில் தென் இந்தியாவில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஐந்து முக்கிய சபாக்கள் உள்ளன, அவை கனகா சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசா. இந்த ஸ்தலதில் உள்ள நடராஜர் உருவம், சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றாகும்.

கோபுரங்கள்

இத்தலத்தில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.

இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதையும் படிக்கலாம் : பஞ்ச சபை ஸ்தலங்கள்

ஆனந்த தாண்டவம்

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.

 • வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர்.
 • இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.
 • வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.
 • இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் சிறப்பு அம்சம்

இந்தியாவில் சிவபெருமானுக்கு உள்ள புகழ்பெற்ற கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் பஞ்சப்பூத ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாகும். இந்த கோவில் மிக நீண்ட புராண தொடர்பு உடையது. கோயிலின் கட்டிடக்கலை, ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையில் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது.

மூலவர் திருமூலனாதர் சுயம்பு மூர்ட்தியாக அருல்பாலிக்கிரார்.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது.

காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது.

மானிட உடலில் சிவபெருமான்

உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவபெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு.

சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான்.

திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும்.

எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர்.

அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

அர்த்தஜாம பூஜை

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்

இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.

சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பிராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது.

தீர்த்தங்கள்

இக்கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம் – நடராசர் கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது. குய்யதீர்த்தம் – நடராசர் கோயிலின் வடகிழக்கே கிள்ளைக்கு அருகே அமைந்துள்ளது. புலிமடு – சிதம்பரம் கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத தீர்த்தம் – நடராசர் கோயிலுக்கு மேற்கில் இளமையாக்கினார் கோயிலிக்கு எதிரே அமைந்துள்ளது. அனந்த தீர்த்தம் – நடராசர் கோயிலுக்கு மேற்கிலுள்ள திருவனந்தேச்சுரத்துக்கு கோயிலில் அமைந்துள்ளது. நாகச்சேரி – அனந்தேச்சுரத்துக்கு மேற்கில் அமைந்துள்ளது. பிரமதீர்த்தம் – நடராசர் கோயிலுக்கு வடமேற்கே இருக்கும். திருக்களாஞ்சேரியில் கோயிலில் அமைந்துள்ளது. சிவப்பிரியை – நடராசர் கோயிலுக்கு வடக்கே உள்ள பிரமசாமுண்டி கோயிலின் முன் அமைந்துள்ளது. திருப்பாற்கடல் – சிவப்பிரியைக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது.

மூலவர் யார் தெரியுமா?

பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தை மாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.

தேரில் நடராஜர்

மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

மாயம் செய்யும் மரகதக் கல்

புதுக்கோட்டை பேரரசர் சேதுபதி அவர்களால் இந்த கோயிலுக்கு ஒரு மரகதக் கல் தானமாக அளிக்கப்பட்டது. இந்த மரகதக் கல் செய்யும் மாயம் இங்கு வரும் பக்தர்களை புத்துணர்வு அடையச் செய்கிறது.

கோயிலின் வெளிப்புறத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள்ளாகவே கலைப்படைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் சிதம்பரம் நடராசரை பார்த்ததும் புத்துணர்வு பெறுகின்றனர். இதற்கு காரணம் அந்த மரகத கல்தான் என்று நம்பப்படுகிறது.

வழிபாடு

திருவாரூர் தியாகராஜா் சுவாமியயை தவிர, உலகில் உள்ள அனைத்து சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது.

இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.

ஆறு கால பூஜை

சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.

 • காலை சந்தி
 • இரண்டாங் காலம்
 • உச்சி காலம்
 • சாயங் காலம்
 • ரகசிய பூசை காலம்
 • அர்த்த சாமம்

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.

நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.

இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.

சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள்

இந்து தொன்மவியல் கணக்கின் படி மனிதர்களது ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் ஆறு கால பூசைகள் நடைபெறுவது போல தேவர்கள் செய்யும் பூசையாக ஆண்டுக்கு ஆறு பூசைகள் சிதம்பரம் கோவிலில் நடைபெறுகின்றன. அவையாவன..

 • சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிசேகம்
 • ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்
 • ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்
 • புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்
 • மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்
 • மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிசேகம்

சிதம்பர ரகசியம்

சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது.

தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பது தான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம்.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

கும்பாபிஷேகம்

இத்தலத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1/5/2015 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு காலை 8.00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராசர் வீற்றுள்ள சித்சபை, ராஜ்ய சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் நான்கு ராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

8.25 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் தெருவடைச்சான் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.

இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை.

பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து,  தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர்.

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.

அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும்.

மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,

சிதம்பரம்,

கடலூர் – 608 001.

மேலும் படிக்க

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில்
திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *