வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் 2024 தேதி, நேரம்
2024 ஆம் ஆண்டில், வைகாசி மாதம் (தமிழ் நாட்காட்டியின்படி), மே 22 புதன்கிழமை வருகிறது. விசாகம் நட்சத்திரம் மே 22 ஆம் தேதி காலை 8.18 மணிக்கு துவங்கி மே 23 ஆம் தேதி காலை 9.43 மணி வரை உள்ளது. எனவே, வைகாசி விசாக விரதத்தை கடைபிடிப்பவர்கள் மே 22 அன்று விசாக நட்சத்திரம் நாள் முழுவதும் இருப்பதால் இந்த நாளில் விரதம், வழிபாடு மற்றும் பூஜை செய்யலாம்.
வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் பகை நீங்கும். வலி நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக அளித்தால் திருமண யோகம் உண்டாகும். குழந்தைபேறு உண்டாகும். குலம் செழிக்கும். ஆபத்து நீங்கும்.
பொதுவாக குழந்தைபேறு வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து வழிபட்டால் அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்தின் போது குழந்தைப்பேறு நிச்சயம் என்பது மக்களின் நம்பிக்கை.
வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி?
வைகாசி விசாகம் அன்று விரதம் இருப்பவர்கள் இன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். இதைச் செய்ய முடியாதவர்கள் ஒருவேளை உணவை மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். “ஓம் சரவணபவ” மற்றும் “ஓம் முருகா” போன்ற ஆறெழுத்து முருகா மந்திரங்களில் ஒன்றை ஜபிக்கலாம். திருப்புகழ், கந்தஷஷ்டி கவசம் படிக்கலாம்.
இதையும் படிக்கலாம் : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்