வெற்றிலையின் மருத்துவ குணங்கள்..!

betel leaf health benefits

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை. கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையின் நன்மைகள்

பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும். வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன. வெற்றிலையின் நுனியில் மூதேவியும், காம்பில் மகாலட்சுமியும், நரம்பில் பிரம்மாவும், முன் பகுதியில் சிவனும், பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.

40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்த்து உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு ஜீரண சக்திகள் குறைய தொடங்கும்.

நாம் உண்ணும் உணவு முறையாக ஜீரணிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [கால்சியம்] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் விட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்

குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை

முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்

மன்னிட்டு வாழும் பூ மாது.

வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது. அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்

இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்

கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்

சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு

மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை துப்பிவிட வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் துப்பிவிட வேண்டும். மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம். இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம், பித்தம், பாண்டு போன்ற நோய் உண்டாகும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

வெற்றிலையின் மருத்துவ பயன்கள்

வயிற்றுவலி

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

நுரையீரல் பலப்பட

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்.

கட்டிகள் குணமாக

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது.

விஷக்கடி குணமாக

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.

இருமல் குறைய

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல

வெற்றிலை 2 அல்லது 3 எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும்.

வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

மலச்சிக்கல் நோய் குணமாக

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

தோல் வியாதிக்கு

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தீப்புண் ஆற

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்

குரல் வளம்

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்றுவர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல்

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

வெற்றிலையின் பிற உபயோகங்கள்

வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில்விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.

சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்களால் செரியாமை ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரியாமை நீங்கும்.

பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு தேக்கரண்டி பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.

வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொறி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.

வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.

சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் அருந்திவர நரம்புகள் பலப்படும்.

இதையும் படிக்கலாம் : முருங்கை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *