அளவில்லா ஆரோக்கியம் தரும் செம்பு பாத்திரம்

செம்பில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் பாத்திரங்களாக உள்ளதால் இன்றைய இல்லங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

செம்பு என்பது தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்தபடியாக ஓர் உயர்மிகு உலோகம். செம்பின் பயன்பாடு பலதரப்பட்டவாறு உலகெங்கும் அரியப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கி.மு. 9000-ம் ஆண்டுக்கு முன்பே கண்டறியப்பட்ட செம்பு உலோகம் இன்றளவும் அதிக பயன்பாட்டில் உள்ள உலோகமாக உள்ளது.

செம்பு அல்லது தாமிரம் என்றவாறு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள இவ்வுலோகத்தின் மூலம் அதிகளவு பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் வீடு முழுவதும் செம்பு பாத்திரங்கள் இருப்பது பெரிய கவுரமாகவே கருதப்பட்டன. நாளடைவில் செம்பு பாத்திரங்களின் பயன்பாடு பெரும் அளவு குறைந்து விட்டன. பெரும்பாலும் தமது முன்னோர் பயன்படுத்திய செம்பு பாத்திரங்களை அப்படியே பாதுகாத்து அடுத்த தலைமுறையினர் வைத்துள்ளனர்.

ஆயினும் தற்போது செம்பு பாத்திரங்களின் சிறப்பும், பெருமையும் அறிந்து மீண்டும் செம்பு பாத்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செம்பில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அழகு மிளிர இருப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் பாத்திரங்களாக உள்ளதால் இன்றைய இல்லங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

செம்பு பாத்திரங்களின் சிறப்பு பண்புகள்

செம்பு பாத்திரங்கள் எனும்போது முன்பு பெரிய உருளிகள், கனமான பானைகள், தண்ணீர் குடம், சமையல் உபகரணங்கள் போன்றவை பயன்பாட்டில் இருந்தன. தண்ணீர் சேமிக்க பெரும்பாலும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. காரணம் எந்தவிதமான தண்ணீரும் செம்பு பாத்திரத்தில் வைக்கும்போது அதில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தண்ணீர் சுத்தமானதாக கிடைக்கின்றது என்பதுதான்.

தாமிர பானையில் சேமித்து வைத்த தண்ணீரை ஓர் இரவு முழுவதும் வைத்து காலை எழுந்தவுடன் பருகும் போதும் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாத, பித்த, கபத்தினை சமநிலையோடு இருக்க செய்கிறது. மேலும் செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரில் உள்ள பாக்டீரியங்கள் அழிக்கப்பட்டு சுத்தமான தண்ணீராக மாறி விடுகிறது.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் செம்பின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மேலும் பல மருந்துகளில் செம்பு சேர்க்கப்பட்டு நோய் தீர்க்கும் மருந்தாகவும் வழங்கப்படுகிறது. செம்பு பாத்திரங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு பயன்படுத்தும்போது உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றது. அதனால் தற்போது புதிய வடிவில் செம்பு பாத்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

பளபளக்கும் செம்பு பாத்திரங்கள்:

தற்கால சூழலுக்கு ஏற்ப நவீன வடிவமைப்பில் செம்பு பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. பூஜையறையில் பஞ்சபாத்திரம் எனும் பாத்திரத்தில் நீர் நிரப்பி துளசி போட்டு தண்ணீரை பிரசாதமாக வழங்குவர். அதனை பருகும்போது ஏற்படும் அனுபவமே தனி. அதனடிப்படையில் தற்போது வீட்டில் பயன்படுத்தக்கூடிய செம்பு பாத்திரங்கள் தண்ணீர் சேமிக்கும் டிரம், ஜெக், குவளை, பாட்டில் மற்றும் பானைகளாக உலாவருகின்றன.

செம்பு தண்ணீர் ஜெக் நமது தினசரி பயன்பாட்டில் நிறமாறி விடும் என்பதால் மேற்புறம் சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட வாட்டர் ஜெக் வந்துள்ளன. இதனால் மேற்புற செம்பு பகுதி விரைவில் நிறம் மாறுவதும், அதிக தேய்த்து பளபளப்பாக்க வேண்டிய அவசியமில்லை.

வெளியே எடுத்து செல்லக்கூடிய அழகிய அமைப்பில் செம்பு வாட்டர் பாட்டில், செம்பு கிளாஸ் போன்றவை வுந்துள்ளது. மேலும் சூடான உணவு பொருட்களை எடுத்து செல்ல ஏதுவான ஈயம் உள் பூசப்பட்ட டிபன் பாக்ஸ், உணவு பாத்திரங்கள் போன்றவையும் வந்துள்ளன.

அன்றாட தேவைக்கு ஏற்ற செம்பு பாத்திரங்களும், பரிசளிப்புக்கு ஏற்ற டிசைன் செம்பு பாத்திரங்களும் நவீன வாழ்வியலுக்கு ஏற்றவாறு செம்மை வடிவில் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *