முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்

‘முருகு’ என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ – மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.

முருகன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் தலங்கள்

சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை, பார்வை இழந்த அடியவர் ஒருவர் வழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத்தந்தவர் இந்த முருகன்.

பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும், முருகனை பல்லடம்- உடுமலைப்பேட்டை பாதையில் உள்ள தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.

நாகை, தில்லையாடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குரு சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பொருமான்.

சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக முருகன் தரிசனம் தருகிறார்.

கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் வழக்கத்துக்கு மாறாக இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது முருகன் அமர்ந்துள்ளார்.

திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில் எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

தென்காசிக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ பாலமுருகனை காணலாம்.

கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் பெயர்களில் முருகப்பெருமான் திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.

பிரணவத்திற்குப்பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோலை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைப்பட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

கோவைக்கு அருகில் உள்ள அநுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச்சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை வரதராஜப்பெருமாள் என்ற நெல்லை மாவட்டம் இலஞ்சியில் பெயரில் தரிசிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்து கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.

குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோவிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.

பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்கச்சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். அந்தப்பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏரி தரிசிக்கலாம்.

மாமல்லபுரம்-கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்கு சமமாக போற்றப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : முருகனுக்கு உகந்த சஷ்டியின் விரத மகிமை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *