செவ்வாய் தோஷம் பற்றிய தகவல்கள்

sevvai thosam

ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் ஒரு கொடூரமான கிரகமாகத்தான் கருதப்படுகிறது. திருமணத்துக்கு வரன் பார்க்கும் போது பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை முதலில் கேட்கிறார்கள்.

பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிரகத்திற்கு குஜன், மங்கள், அங்காரகன், செவ்வாய் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியோருக்கும், செவ்வாய் இருக்கும் இடத்துக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு தான் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முடியும்.

லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்துக்கு, 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம்,  8-ம் இடம், 12-ம் இடம் ஆகிய இடங்களில் ஒன்றில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் ஆகும். ஆனால், மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, குரு, சனி, சூரியன் ஆகியோரின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷம் இல்லை.

2-ஆம் இடம்

இந்த இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் பணவரவில் தடை தாமதங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நிலை, எதார்த்தமாகப் பேசினாலும் அந்தப் பேச்சிலேயே குற்றம் குறைகள் கண்டுபிடித்து வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படும் சூழல் மற்றும் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் என்பதையெல்லாம் உண்டாக்கும்.

4-ஆம் இடம்

இந்த நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால் வாழ்வில் முழுமையாக அனுபவிக்க வேண்டிய சுகங்களை அனுபவிக்க முடியாமல் செய்யும்.

வீட்டில் மகிழ்ச்சி அற்றவராய் இருக்க நேரிடும். வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துகளில் பிரச்சினைகளை உண்டு பண்ணும், வீண் செலவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும். தேவையற்ற வம்பு வழக்குகள், சிக்கல்கள், விபத்துகள் போன்றவை ஏற்படும்.

7-ஆம் இடம்

7-ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தாம்பத்திய வீரியம் அதிகம் இருக்கும். இந்த இடத்தில் உள்ள செவ்வாய், மிகவும் கடுமையாக படுக்கை அறையில் பாலியல் விஷயத்தில் நடந்து கொள்வார்.

8-ஆம் இடம்

8-ம் இடத்தில் செவ்வாய் என்பது மாங்கல்ய ஸ்தானம். திருமணப் பந்தத்தை முறித்துவிடும் அல்லது ஆயுளை பங்கம் பண்ணும்.

12-ஆம் இடம்

12-ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தாம்பத்ய சுகத்தை குறிக்கும். தாம்பத்தியத்தை அனுபவிப்பதில் இயலாமை அல்லது தாம்பத்தியத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவது, அதனால் ஏற்படும் மன உளைச்சலால் நல்ல உறக்கம் இல்லாமல் போவது, இதனால் பலவித ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுவது போன்றவை உண்டாகும்.

  • இதில் (7, 8) ஆம் இடத்து செவ்வாய், கடுமையான தோஷத்தை உண்டாக்கும் என்றும், மற்ற ( 2, 4, 12 ) ஆம் இடத்து செவ்வாய் மிதமான தோஷத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகிறது.

செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு

ஒருவரின் ஜாதகத்தில் (2, 4, 7, 8, 12) ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும், சில கிரக அமைப்பு காரணமாக அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும் அல்லது பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

  • குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.
  • சூரியன், சனி, குரு, சந்திரன் ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை.
  • செவ்வாய் தனது நட்பு வீடான சிம்மம், தனுசு, மீனம் வீட்டில் அல்லது உச்ச வீடான மகரத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
  • சனி, ராகு, கேது கிரகங்களுடன் செவ்வாய் இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தாது.
  • 2-ஆம் இடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷமில்லை.
  • 4-ஆம் இடம் செவ்வாயின் சொந்த வீடான மேஷம் அல்லது விருச்சிகம் இருந்தால் தோஷமில்லை.
  • 7-ஆம் இடம் அதன் உச்ச வீடான மகரம் அல்லது நீச்ச வீடான கடகம் இருந்தால் தோஷம் இல்லை.
  • 8-ஆம் இடம் குருவின் வீடான தனுசு அல்லது மீனம் இருந்தால் தோஷம் கிடையாது.
  • 12-ஆம் இடம் சுக்கிரனின் வீடான ரிஷபம் அல்லது துலாமாக இருப்பின் தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பொதுவான விளைவுகள்

  • சமூகத்தில் அவப்பெயர்
  • திருமணம் கால தாமதம் ஏற்படும்
  • தம்பதியினர் இடையே சண்டை மற்றும் உறவினருடன் கருத்து வேறுபாடு
  • குடும்பத்தில் பண பற்றாக்குறை அல்லது பொருளாதார பிரச்சனைகள்
  • தம்பதியனரில் ஒருவருக்கு கடுமையான உடல் நிலை சீர் குலைவு
  • பெண்ணாக இருப்பின் விவாகரத்து அல்லது விதவை ஆவது , ஆணாக இருப்பின் மனைவியை இழப்பது

செவ்வாய் தோஷ பரிகாரம்

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், நம்பிக்கையோடு மிக எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம்.

  • செவ்வாய்க்குரிய கடவுளான முருகப் பெருமானை ஒன்பது நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
  • செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும்.
  • வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், முருகப்பெருமானை வழிபடவேண்டும்.
  • அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய தடைகள் நீங்கும்.
  • வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள்

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *