அருள்மிகு சூரியனார் திருக்கோயில்

சூரியனார் கோயில் ( Suriyanar Kovil ) தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒன்பது நவகிரகங்களில் முதன்மையானது. இந்த கோவிலில், மற்ற எட்டு கிரகங்களின் தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரியனார் கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு செல்வச் செழிப்பும், வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவர் சிவசூரியன்
அம்மன்/தாயார் உஷாதேவி, பிரத்யுஷாதேவி
தல விருட்சம் வெள்ளெருக்கு
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
ஊர் சூரியனார்கோவில்
மாவட்டம் தஞ்சாவூர்

சூரியனார் கோவில் தல வரலாறு

suriyanar temple

காலவ முனிவர் எதிர்காலத்தைக் கணிப்பதில் வல்லவர். அவருக்கு தொழுநோய் வரப்போகிறது என்று முன் கூட்டியே அறிந்து, ​​இந்த கொடிய நோயிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நவகிரகத்தை நோக்கி கடுந்தவம் செய்தார். முனிவரின் தவ வலிமையில் மகிழ்ந்த நவக்கிரகங்கள் அவருக்கு காட்சி புரிந்து வரத்தை வழங்கினர்.

தான் வகுத்த விதிகளை மாற்றியதால் கோபமடைந்த பிரம்மா, கால முனிவர்களுக்கு நேர்ந்த கதியே நீயும் சந்திக்க நேரிடும் என்று நவகிரகங்களை சபித்தார். அவரது சாபத்தால் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நவக்கிரகங்கள், சாபத்தில் இருந்து விடுபட சாப விமோச்சனம் வேண்டி மன்றாடினார்.

திருமங்கலக்குடி சூரியனார் கோயிலுக்குச் சென்று தன் அருளைப் பெறுமாறு பிரம்மா கேட்டுக் கொண்டார். எனவே, நவக்கிரகங்கள் பிராணநாதரையும், மங்களாம்பிகையையும் வேண்டி, அங்கு விநாயகப் பெருமானின் சிலையை வணங்கி தவம் செய்கிறார்.

கடவுள் அவர்களுக்கு பாவ விமோச்சனம் வழங்கினார். காலவ முனிவர் அவர்கள் தவம் செய்த இடத்தில் நவராத்திரிக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில் எழுப்பினார்.

இந்தக் கோயிலின் முதன்மைக் கடவுளான சூரியநாராயணன் தனது மனைவிகளான பிரத்யுஷா தேவி மற்றும் உஷா தேவியுடன் தேரில் இருப்பது போல் காட்சியளிக்கின்றார்.

சூரியனார் கோவில் தல பெருமை

suriyanar kovil

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோவில்கள் உள்ளன. வடக்கே கோனார்க் கோயிலும் தெற்கே சூரியனார் கோயிலும் உள்ளன. கோனார்க்கில் உருவ வழிபாடு கிடையாது. ஆனால் இந்த சூரியனார் கோவிலில் சிலை வழிபாடு உள்ளது.

கருவறையில், சூரிய பகவான் திருமண கோலத்தில் இடதுபுறம் உஷா தேவியுடன் வலதுபுறம் தேவி பிரத்யுஷாதேவியுடன் நிற்கிறார். சூரிய பகவான் தாமரை மலர்களை தமது இருகைகளில் ஏந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கிறார். சூரிய பகவான் மிகவும் உக்கிரமானவர். எனவே அவரை சமாதானப்படுத்த குரு பகவான் எதிரில் உள்ளார். இதனால் தான் சூரிய பகவானை வழிபடலாம். மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்தின் முன் நந்தி இருப்பது போல் இங்கு குதிரை உள்ளது.

இக்கோயிலில் அனைத்து நவக்கிரகங்களையும் ஒரே இடத்தில் காணலாம். நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

சூரியபகவான் திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு காட்சி தருவது சிறப்பு.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சூர்ய பகவான் சாந்தமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் மற்ற அனைத்து கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் சொந்த வாகனங்கள் கிடையாது. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

இது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்.

இங்கு சூரிய பகவான் தனது இடது புறம் உஷாதேவியுடனும், வலது புறம் பிரத்யுஷா தேவியுடனும் தனது இரு கைகளிலும் தாமரை ஏந்தி, மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சூரியனார் கோவில் வழிபடும் முறை

suriyanarkovil

மற்ற ஆலயங்களை போலல்லாது, இத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று பிராணவரதரையும், அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும்.

பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும். அதன் பிறகு, வெளிப் பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும். கடைசியாக சுக்கிர பகவானையும் , ராகுவையும் வழிபட வேண்டும்.

மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக ( மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல ) வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.

பிரார்த்தனை

நவக்கிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால், பல்வேறு சிரமங்களில் இருந்து விடுபட ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.

ஏழரை வருட சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷ முள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஞாயிறு அன்று அதிகாலை முதல் தொடர்ந்து பன்னிரண்டாம் நாள் ஞாயிறு முடியும் வரை இரண்டரை மாதங்கள் (78 நாட்கள்) இந்தத் தலத்தில் தங்கி நாடோறும், நவதீர்த்தங்களிலும் நீராடி விரதம் அனுஷ்டித்து திருமங்கலக்குடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் வழிபட வேண்டும்.

நேர்த்திக்கடன்

நாடி பரிகாரம் இங்கு விசேஷமானது. நவக்கிரக ஹோமம் செய்யலாம். சூர்ய அர்ச்சனை செய்யலாம். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம்.

நவகிரக தோசம் வில நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிசேகம் செய்தல் நல்லது.

அபிஷேகம் தவிர, பக்தர்கள் துலாபாரம், கோதுமை, வெல்லம் மற்றும் விளைச்சல் ஆகியவற்றறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இத்தலத்தில் சர்க்கரை பொங்கல் அபிசேகம் செய்வது முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகின்றனர்.

அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

திருவிழா

இத்தலத்தில் மிக முக்கிய திருவிழா ரதசப்தமி உற்சவம் தை மாதம் – 10 நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும்.

பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும்.

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்,

சூரியனார்கோயில்,

தஞ்சாவூர் மாவட்டம் – 612 102.

தொலைபேசி எண் : 0435-2472349

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *