திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

குறள் 191 :

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

மு.வரதராசனார் உரை

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

மு.கருணாநிதி உரை

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

குறள் 192 :

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

மு.வரதராசனார் உரை

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

மு.கருணாநிதி உரை

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

மணக்குடவர் உரை

பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.

குறள் 193 :

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

மு.வரதராசனார் உரை

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

மு.கருணாநிதி உரை

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

மணக்குடவர் உரை

நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

குறள் 194 :

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

மு.வரதராசனார் உரை

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

மு.கருணாநிதி உரை

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

மணக்குடவர் உரை

ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

குறள் 195 :

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

மு.வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

மு.கருணாநிதி உரை

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

குறள் 196 :

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.

மு.வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

மு.கருணாநிதி உரை

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

குறள் 197 :

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

மு.வரதராசனார் உரை

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

மு.கருணாநிதி உரை

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

மணக்குடவர் உரை

சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.

குறள் 198 :

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

மு.வரதராசனார் உரை

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

மு.கருணாநிதி உரை

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

மணக்குடவர் உரை

அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

குறள் 199 :

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

மு.வரதராசனார் உரை

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

மு.கருணாநிதி உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

மணக்குடவர் உரை

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

குறள் 200 :

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

மு.வரதராசனார் உரை

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

மு.கருணாநிதி உரை

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

மணக்குடவர் உரை

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *