திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81 :

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு.வரதராசனார் உரை

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சாலமன் பாப்பையா உரை

வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

மணக்குடவர் உரை

இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

குறள் 82 :

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

மு.வரதராசனார் உரை

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

சாலமன் பாப்பையா உரை

விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

மணக்குடவர் உரை

விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

குறள் 83 :

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

மு.வரதராசனார் உரை

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

மணக்குடவர் உரை

நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

குறள் 84 :

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

மு.வரதராசனார் உரை

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

மணக்குடவர் உரை

திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

குறள் 85 :

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

மு.வரதராசனார் உரை

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.

சாலமன் பாப்பையா உரை

விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

மணக்குடவர் உரை

விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.

குறள் 86 :

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு.

மு.வரதராசனார் உரை

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை

வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

மணக்குடவர் உரை

வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

குறள் 87 :

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

மு.வரதராசனார் உரை

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

சாலமன் பாப்பையா உரை

விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

மணக்குடவர் உரை

விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

குறள் 88 :

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

மு.வரதராசனார் உரை

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

மணக்குடவர் உரை

விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

குறள் 89 :

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

மு.வரதராசனார் உரை

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

மணக்குடவர் உரை

உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

குறள் 90 :

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

மு.வரதராசனார் உரை

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

மணக்குடவர் உரை

எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *