கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர்.
கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர். மாசி மாதத்தில் வதனா ரம்பத்திலும் கந்தபுஷ்கர்ணியிலும் நீராடி கந்தனை வணங்கினால் வேதனைகள் நீங்கும். சித்திரை மாத முப்பது நாளும் வதனாம்பரத்தில் நீராடி வேலாயுதனை போற்றுவோர் மோட்சத்தை அடைவர்.
தட்சணாயினம், உத்தராயணத்தன்று கந்தபுஷ்கரணியிலும், மூகாரம்பத்திலும் நீராடி முருகனுக்கு நிவேதனம் செய்தவர் சகல பலனையும் பெறுவர்.
ஆடி மாதம் முப்பது நாளும் பசும் பாலை குமரனுக்கு நிவேதனம் செய்பவர் முருகனின் திருவடி தாமரையை சேர்வார்கள். ஆவணி மாதம் முப்பது நாளும் வேதவிதிப்படி ஆறுமுகனை போற்றுபவர் நூறு யாகம் செய்த பலத்தினை பெறுவார்கள்.
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று முகாரம்பத் தீர்த்தத்தில் நீராடி சிரார்த்தம் செய்தவருடைய பிதிர்க்களெல்லாம் சத்திய லோகத்தை அடைவர்.
ஐப்பசி, மார்கழி மதத்தில் ததியோதனம் குமரனுக்கு படைத்தவர் மோட்ச லோகத்தை அடைவர்.
தை மாதம் முப்பது நாட்களும் கோவில் முழுவதும் அகில் புகையினால் சுவாசிக்கச் செய்தவர் குலத்தினரெல்லாம் சிவபிரான் திருவடியையும், கிருத்திகை நட்சத்திரத்தில் நெல்லி இலையினால் முருகக்கடவுளை அர்ச்சித்தவர் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு யாக பலனையும் பெற்று ஆனந்தமாக வாழ்வார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
சரவண பொய்கை
திருச்செந்தூர் கோவில் அருகில் சரவண பொய்கை உள்ளது. இங்கு ஆறு தீப்பொறிகளும், தாமரை மலரில் குழந்தைகளாக கிடப்பது போலவும், அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி, ஒருசேர எடுக்க தனது இரு திருக்கரங்களையும் நீட்டுவது போலவும் திருத்தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சரவணப்பொய்கை குளத்தில் ஏராளமான மீன்கள் துள்ளி விளையாடுவது கண்கொள்ளா காட்சியாகும்.
நாழிக்கிணறு
சண்முக விலாசத்துக்கு தெற்கே நாழிக்கிணறு உள்ளது. முருகன் சூரனை வென்றதும் தன் படைகள் தாகம் தணிக்க கைவேலால் இந்த இடத்தில் குத்தினார். அதில் இருந்து நல்ல தண்ணீர் பொங்கியது. 24 அடி ஆழத்தில் நாழிக்கிணறு உள்ளது. 34 படிகள் இறங்கி செல்ல வேண்டும்.
தற்போது பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு, உவர் நீங்க நாழிக்கிணற்றில் குளிக்கின்றனர். இது தவறு. நாழிக்கிணற்றில் தான் முதலில் நீராட வேண்டும். கடல் தீர்த்தமாக உள்ளதால் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு தீர்த்தம் ஆட வேண்டும் என்று மூத்தோர்கள் சொல்லி உள்ளனர். நாழிக்கிணற்றில் நீராடிய பின் கடலில் நீராடல் மரபு என்று பட்டினப்பாலையில் எழுதப்பட்டுள்ளது.
திருநீறு அல்ல பணம்
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டத் தொடங்கிய காலத்தில் செந்திலாண்டவனே மனித உருவில் தோன்றி, வேலையாட்களுக்கு திருநீறு பிரசாதத்தை கூலியாக கொடுத்து, அதனை தூண்டுகை விநாயகர் கோவிலை கடந்த பின்னர் திறந்து பார்க்க வேண்டுமு என்று கூறி மறைந்ததாகவும், அவ்வேலையாட்கள் அவ்வாறு பார்த்த போது திருநீறு கூலிப்பணமாக மாறியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கணக்கு கேட்கும் முருகன்
சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும்- வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும்.
கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும். அதன் பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.
இதையும் படிக்கலாம் : முருகனுக்கு உகந்த சஷ்டியின் விரத மகிமை..!