சிவராத்திரி என்றால் சிவன், நவராத்திரி என்றால் அம்மன், ஏகாதசி என்றால் பெருமாள், பங்குனி உத்திரம், தைப்பூசம் என்றால் முருகனுக்கு மாசி மகம் என்பது எந்த தெய்வத்திற்கு உரியது என்ற கேள்வி எழுகிறது. இதனாலேயே பலருக்கு மாசி மகத்தின் மகத்துவம் தெரியாது. மாசி மகத்தன்று எந்த தெய்வத்தை வழிபட வேண்டும், வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாசி மகம் நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவது சிறந்தது. வீடுகளுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி, மகாமகம் குளத்தில் நீராடிய பலனை பெறலாம். இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறையின் பாவங்கள் நீங்கும்.
சிவபெருமான்
மாசி மகம் நாளில் அனைத்துக் கோயில்களிலும் தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் தான் சிவபெருமான் வருணனை சாபத்திலிருந்து விடுவித்தார். இதனால் மாசிமகம் சிவனை வழிபட உகந்த நாளாக அமைகிறது.
அம்மன் வழிபாடு
உமா தேவியார் மகா நட்சத்திரத்தில் தட்சாவின் மகளான தட்சயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. எனவே, இந்த நாள் பெண்களுக்கு விரத நாளாகவும் கருதப்படுகிறது. சக்தியை வழிபட வேண்டிய நாள் இது.
முருகன் வழிபாடு
முருகன் தந்தைக்கு மந்திரம் உபதேசம் செய்த நாள் மாசிமகம். மாசிமகம் முருகப் பெருமானை வழிபடும் சிறப்புமிக்க நாளாக அமைகிறது.
பெருமாள் வழிபாடு
மாசி மகத்தன்று தான் பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாள். எனவே, இந்த நாள் பெருமாளை வழிபடும் நாளாக மாறியது. மாசி மகம் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாள் ஆற்றலை நீக்குவதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
கேது வழிபாடு
கேது பகவான் ஞானத்தையும் முக்தியையும் அளிப்பவராகவும், மகம் நட்சத்திரத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். எனவே இந்த நாளில் கேது பகவானை வழிபடும் அறிவு தழைத்தோங்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம்.
முன்னோர் வழிபாடு
மகம் நட்சத்திரம் “பித்ருதேவ நட்சத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது. நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். மாசிமகம் அன்று முறையாக விரதம் இருப்பது வாழ்வில் சகல பாக்கியங்களையும் தரும்.
குல தெய்வ வழிபாடு
மாசிமகம் திருநாளில் குல தெய்வத்தை வழிபடுவதும், தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தரும்.
மகா விஷ்ணு, உமாமகேசுவரர், முருகன் ஆகிய முப்பெரும் தெய்வங்களை வழிபட்டால், இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி, முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். எனவே, மாசி மகம் அன்று அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம்.
இதையும் படிக்கலாம் : சித்ரா பௌர்ணமி சிறப்புகள்