பைரவர் சிவனின் உருவம்

பைரவர் சிவனின் உருவம்

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

பைரவ தோற்றம்

பிரித்தானிய சுவடிக்கூத்தில் இருக்கும் பைரவர் சிலை.

அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.

அட்சர பீடங்களின் காவலன்

சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக தோன்றினார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.

சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

பைரவ வடிவங்கள்

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட (எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

அஷ்ட (எட்டு) பைரவர்கள்

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அசிதாங்க பைரவர்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்

சண்ட பைரவர் (கால பைரவர்)

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீக்ஷன பைரவர்

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர்.

நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன

 • அசிதாங்க பைரவர் – விருத்தகாலர் கோயில்,
 • குரோத பைரவர் – காமாட்சி ஆலயம்,
 • உன்மத்த பைரவர் – பீம சண்டி கோயில்,
 • ருரு பைரவர் – அனுமன் காட்டில்,
 • கபால பைரவர் – லாட் பஜாரில்,
 •  சண்ட பைரவர் – துர்க்கை கோயிலில்,
 •  பீஷண பைரவர் – பூத பைரவத்தில்,
 • சம்ஹார பைரவர் – த்ரிலோசன சங்கம்.

அறுபத்து நான்கு பைரவர்கள்

பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

 1. நீலகண்ட பைரவர்
 2. விசாலாக்ஷ பைரவர்
 3. மார்த்தாண்ட பைரவர்
 4. முண்டனப்பிரபு பைரவர்
 5. ஸ்வஸ்சந்த பைரவர்
 6. அதிசந்துஷ்ட பைரவர்
 7. கேர பைரவர்
 8. ஸம்ஹார பைரவர்
 9. விஸ்வரூப பைரவர்
 10. நானாரூப பைரவர்
 11. பரம பைரவர்
 12. தண்டகர்ண பைரவர்
 13. ஸ்தாபாத்ர பைரவர்
 14. சீரீட பைரவர்
 15. உன்மத்த பைரவர்
 16. மேகநாத பைரவர்
 17. மனோவேக பைரவர்
 18. க்ஷத்ர பாலக பைரவர்
 19. விருபாக்ஷ பைரவர்
 20. கராள பைரவர்
 21. நிர்பய பைரவர்
 22. ஆகர்ஷண பைரவர்
 23. ப்ரேக்ஷத பைரவர்
 24. லோகபால பைரவர்
 25. கதாதர பைரவர்
 26. வஞ்ரஹஸ்த பைரவர்
 27. மகாகால பைரவர்
 28. பிரகண்ட பைரவர்
 29. ப்ரளய பைரவர்
 30. அந்தக பைரவர்
 31. பூமிகர்ப்ப பைரவர்
 32. பீஷ்ண பைரவர்
 33. ஸம்ஹார பைரவர்
 34. குலபால பைரவர்
 35. ருண்டமாலா பைரவர்
 36. ரத்தாங்க பைரவர்
 37. பிங்களேஷ்ண பைரவர்
 38. அப்ரரூப பைரவர்
 39. தாரபாலன பைரவர்
 40. ப்ரஜா பாலன பைரவர்
 41. குல பைரவர்
 42. மந்திர நாயக பைரவர்
 43. ருத்ர பைரவர்
 44. பிதாமஹ பைரவர்
 45. விஷ்ணு பைரவர்
 46. வடுகநாத பைரவர்
 47. கபால பைரவர்
 48. பூதவேதாள பைரவர்
 49. த்ரிநேத்ர பைரவர்
 50. திரிபுராந்தக பைரவர்
 51. வரத பைரவர்
 52. பர்வத வாகன பைரவர்
 53. சசிவாகன பைரவர்
 54. கபால பூஷண பைரவர்
 55. ஸர்வவேத பைரவர்
 56. ஈசான பைரவர்
 57. ஸர்வபூத பைரவர்
 58. ஸர்வபூத பைரவர்
 59. கோரநாத பைரவர்
 60. பயங்க பைரவர்
 61. புத்திமுக்தி பயப்த பைரவர்
 62. காலாக்னி பைரவர்
 63. மகாரௌத்ர பைரவர்
 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்

செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்களம் நருவெளி மிக அருகில் காவரி நதி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என சிறப்பு பெயர் பெற்ற காவிரியின் மேற்குக்கரையில் வினாயகர் கோவிலும், காசிவிஸ்வநாதர்கோவிலும், இவ்விருகோவிலுக்கும் இடையே மிக பழமையான இரட்டைகால பைரவர் கோவில் அமைந்துள்ளது.

தர்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூசஜைகள் நடைபெருகிறது. விரைவில் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகமமும் நடைபெற உள்ளது. இங்குள்ள காலபைரவரையும்,வினாயகரையும் வழிபட திருமணதடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை காரிய தடைநீங்க இரட்டைகால பைரவரை வழிபடுவோம்

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

வேறு பைரவ வடிவங்கள்

“அமர்தகர்” என்றும், “பாப பக்ஷணர்” என்றும் பைரவர் அழைக்கப்பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், “பாப பக்ஷணர்” என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.

பைரவ வழிபாடு

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பைரவ விரதம்

பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

பைரவர் கோயில்கள்

காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர்.

குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் உள்ளது. சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் இருந்தாலும், தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.

நாகை மாவட்டத்தில் உள்ளது சீர்காழி ஊரில் சட்டைநாதரை தலைவராக் கொண்டு எட்டு பைரவர்களும் கோயில் கொண்டுள்ளனர்.

திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர கால பைரவர் வீற்றிருக்கிறார்.

காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் அர்த்தநாரி பைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் ஆறகளுரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீசுவரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பொன்னலையில் அருள்மிகு நரசிங்க பைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர்.

பைரவ காயத்ரி

“ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

பைரவர் காயத்ரி

“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாம் : கால பைரவர் 108 போற்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *