செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District)

chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் செங்கல்பட்டு
பகுதி வட மாவட்டம்
பரப்பளவு 2944.96 ச.கி.மீ
மக்கள் தொகை 25,56,244 (2011)
மக்கள் நெருக்கம் 4,100/km2 (11,000/sq mi)
வாகனப் பதிவு TN-19, TN-14, TN-22, TN-85 மற்றும் TN-11
அஞ்சல் குறியீடு 603XXX, 600XXX
தொலைபேசி குறியீடு +91-44

வரலாறு

கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்ததாலும், இப்பகுதியின் கலாச்சர மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது.

பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.

பல்லவர் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து. கி.பி.900 முதல் கி.பி.1300 வரை, செங்கல்பட்டு பகுதி பிற்காலச் சோழர்களின் ஆட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியாக காணப்பட்டது. செங்கல்பட்டு பகுதியின் மற்றொரு மிக முக்கியமான வரலாற்றுக் கட்டம் விஜய நகர மன்னர்கள் ஆட்சி செய்த காலமான கி.பி.1336 முதல் கி.பி.1675 வரை உள்ள காலமாகும்.

1565-ம் வருடம் நடைபெற்ற தலைக்கோட்டை போரில், விஜயநகர மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டபின் செங்கல்பட்டு நகரம் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. செங்கல்பட்டு நகரத்தில் காணப்படும் கோட்டை விஜயநகர மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். இக்கோட்டையைச் சுற்றி காணப்படும் அகழி மற்றும் ஏரி இதன் போர்காலயுத்தி அடிப்படையிலான முக்கியத்துவத்தை அதிகப்படுக்கிறது.

1751-ஆம் ஆண்டு இக்கோட்டை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 1752-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையினை மீண்டும் கைப்பற்றினார். அதன்பின்பு, இக்கோட்டை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இது திகழ்ந்தது.

ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலிக்கும் இடையேயான போர்களில் இக்கோட்டை ஹைதர் அலியின் தாக்குதல்களை தாக்குபிடித்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு புகலிடமாக இருந்தது.

1900 களில் மண்பாண்டம் செய்யும் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் திகழ்ந்தது மட்டுமல்லாமல் இப்பகுதிக்கான குறிப்பாக அரிசி வியாபத்தின் சந்தை மையமாக விளங்கியது. மேலும், இம்மாவட்டம் பருத்தி, இண்டிகோ மற்றும் தோல் பதனிடுதல் ஆகிய தொழில்களின் மையமாக காணப்பட்டது.

இம்மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகள் உப்பு காய்ச்சுதல் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் இருந்தது. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டங்களில் 1969-ம் ஆண்டுவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமையிடமாக செங்கல்பட்டு விளங்கியது.

வருவாய் கோட்டங்கள்

 1. தாம்பரம் வருவாய் கோட்டம்
 2. செங்கல்பட்டு வருவாய் கோட்டம்
 3. மதுராந்தகம் வருவாய் கோட்டம்

வருவாய் வட்டங்கள்

 1. செங்கல்பட்டு வட்டம்
 2. திருக்கழுகுன்றம் வட்டம்
 3. திருப்போரூர் வட்டம்
 4. செய்யூர் வட்டம்
 5. மதுராந்தகம் வட்டம்
 6. தாம்பரம் வட்டம்
 7. பல்லாவரம் வட்டம்
 8. வண்டலூர் வட்டம்

புவியியல்

செங்கல்பட்டு மாவட்டம், 2945 சதுர கிலோமீட்டர் பரப்புடன் தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 57 கிலோமீட்டர் நீள கடற்கரையை கொண்டுள்ளது. மேலும். இம்மாவட்டம் மித வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையை கொண்ட பகுதியாகும்.

இம்மாவட்டமானது கடற்கரை மற்றும் வெப்ப பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் பருவகால உச்ச வெப்பநிலைகளுக்கிடைய குறைந்த அளவான வீச்சு காணப்படுகிறது.

ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலையாக உள்ள 25 டிகிரி செல்சியஸ் ஆண்டின் குளிர்ந்த வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 1400 மி.மீ ஆகும். இப்பகுதி வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் மற்றும் நவம்பரில் ஆண்டின் மொத்த மழையளவில் அதிகப்பங்கை பெறுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான நதிகளில் ஒன்றான பாலாறு செங்கல்பட்டு மாவட்டத்தின் வழியாக சுமார் 54 கிலோ மீட்டர் பயணிக்கிறது. மேற்கண்ட பாலாறு, பாலூர் எனும் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புகுந்து, வயலூர் மற்றும் கடலூர் கிராமங்களுக்கிடையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

மேலும் இம்மாவட்டத்தின் வடக்கில் அடையாறு ஆறும் தெற்கில் ஓங்கூர் ஆறும் பாய்கிறது. மேற்கண்ட ஆறுகள் தவிர சிறிய நதிகளான நீஞ்சல் மடுவு. புக்கத்துறை ஓடை மற்றும் கிளியாறு ஆகியவை இம்மாவட்டம் வழியாக பாய்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் (அ) 40 ஹெக்டேர் சராசரி ஆயக்கட்டு உடைய 528 பெரிய நீர்பாசன ஏரிகள் உள்ளன.

உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்

மாநகராட்சி

 1. தாம்பரம் மாநகராட்சி

நகராட்சிகள்

 1. செங்கல்பட்டு
 2. மறைமலைநகர்
 3. மதுராந்தகம்
 4. பம்மல்

பேரூராட்சிகள்

 1. திருப்போரூர்
 2. திருக்கழுகுன்றம்
 3. அச்சரப்பாக்கம்
 4. மாமல்லபுரம்
 5. நந்திவரம்-கூடுவாஞ்சேரி
 6. இடக்கழிநாடு
 7. அச்சிறுபாக்கம்
 8. இடைக்கழிநாடு
 9. கருங்குழி
 10. மாமல்லபுரம்
 11. திருப்போரூர்

ஊராட்சி ஒன்றியங்கள்

 1. காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
 2. தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்
 3. திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்
 4. திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
 5. சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம்
 6. லத்தூர் ஊராட்சி ஒன்றியம்
 7. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்
 8. அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்

செங்கல்பட்டு மாவட்ட எல்லைகள்

செங்கல்பட்டு மாவட்டத்தின் வடக்கில் , மேற்கில் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தெற்கில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.

அரசியல்

சட்டமன்ற தொகுதியின் பெயர் நாடாளுமன்ற தொகுதியின் பெயர்
சோழிங்கநல்லூர் சென்னை தெற்கு
பல்லாவரம் ஸ்ரீபெரும்புதூர்
தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர்
செங்கல்பட்டு காஞ்சிபுரம் (தனி)
திருப்போரூர் காஞ்சிபுரம் (தனி)
செய்யூர் (தனி) காஞ்சிபுரம் (தனி)
மதுராந்தகம் காஞ்சிபுரம் (தனி)

2008-ம் ஆண்டில் மறு சீரமைப்பின்போது அதுவரையில் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியாக இருந்துவந்தத் தொகுதி  காஞ்சிபுரம் தொகுதியாக உருமாறியது.1951-ம் ஆண்டு செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2004-ம் ஆண்டு வரையிலான 14-வது மக்களவைத் தேர்தல் வரையில் காங்கிரஸ், சுயேச்சை, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்துக் கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுவரும் தொகுதியாக விளங்கியது.

2008-ம் ஆண்டில் நடைபெற்ற மறு சீரமைப்பின்போது, செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல்வெற்றி பெற்றார்.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.

திருவிடந்தை

இக்கோயில் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் நித்திய கல்யாண பெருமாள் மூலவராக உள்ளார்.

மேலும் இங்கு அழகிய வராக பெருமாள் அமைந்துள்ளார். திருமணமாகாதவர்கள் இக்கோயிலில் வழிபடுவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

திருக்கழுக்குன்றம் – வேதகிரீஸ்வரர் கோயில்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு ‘பட்சிதீர்த்தம்’ என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்

ஏரிகாத்த ராமர் கோயில் சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமனுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.

பெயர்க் காரணம், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடிகொண்ட கோதண்டராமரிடம் வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டதாகவும் அது முதல் அக்கோயிலுக்கு ஏரி காத்த ராமர் கோயில் என்று பெயராயிற்று என்பது மரபு வரலாறு.

அச்சிறுபாக்கம் – ஆட்சீசுவரர் கோயில்

இக்கோயில் மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது.

இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் – அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.

திருநீர்மலை – நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார்.

மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.

மாங்காடு – காமாட்சி அம்மன் கோயில்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரேசுவரரைத் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது.

அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார்.

அன்னை பார்வதி மாங்காட்டில் வந்து நெருப்பில் தவமிருந்தாள். பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதி சங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.

மகாபலிபுரம்

மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். பல்லவர் காலத்தில் இது முக்கிய வணிகத் துறைமுகமாக விளங்கியது. இங்குள்ள குடைவரைக் கோயில்களையும் சிற்பங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்றனர்.

பலவித சிற்பக் கலைச் செல்வங்களை இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்கித் தருகிறார்கள். மகாபலிபுரம் எனும் பழையத் துறைமுகத்தை 7-ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் உருவாக்கினான்.

முதலாம் நரசிம்மவர்ம மாமல்லன் நினைவாக இக்கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்றழைக்கப்பட்டது. இதுவே இப்போது மருவி மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில்தான் இருக்கிறது. மகாபலிபுரத்தில் பல அபூர்வச் சிற்பங்கள் கலையழகு மிளிரக் காணப்படுகின்றன.

மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதல்முதல் பார்ப்பவை ஒரு பெரும்பாறையும், அதில் வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே. இந்தச் சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். தொண்ணூறு அடி நீளமும் முப்பதடி உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் நூற்றைம்பது சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன.

தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை முதலியவர்களையும், யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு, பூனை, பறவைகள் இவற்றையும் உயிர்ச்சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாகப் பாறையைப் பிரிக்கிறது.

வடக்கு பாகத்தில் சிவப்பிரானையும், தவக்கோலத்தில் நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும், கீழே சிறு விஷ்ணுகோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிருள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுருவில் பொறிக்கப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

மான் ஒன்று தன் பின்னங்காலால் முகத்தை சொறிந்து கொள்ளும் காட்சி, துறவி மார்பு எலும்புத் தெரியத் தவம் செய்யும் கோலம், வேறு சில பிராணிகளின் அழகு, யானைகளின் கம்பீரத் தோற்றம் இவையெலாம் பார்ப்பவரின் மனம் கவரும் சிற்ப காட்சிகள்.

பஞ்சபாண்டவர் மண்டபம் சிங்கச் சிற்பங்கள் தலைப்பகுதியில் அமைந்த ஆறு தூண்களோடு காட்சியளிக்கிறது. அடுத்து பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம்.

இந்திரன் கோபங்கொண்டு கடும்மழை பொழியச் செய்து ஆயர்பாடியில் இருப்பவர்களுக்குத் தொல்லை தருகிறான். அதைத் தடுக்க கிருஷ்ண பிரான் கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த காட்சியை இதன் சுவரில் வடித்திருக்கிறார்கள். இதன் அடியில் கோபாலர்கள் அமைதியாகத் தங்கள் அலுவல்களைக் கவனித்து வருகிறார்கள். ஒருவன் பால் கறக்கும் காட்சி விநோதமாயிருக்கிறது.

பசு தன் கன்றை நக்கிக் கொடுப்பது தத்ரூபமாய் இருக்கிறது. குட்டியுடன் இருக்கும் பெண்குரங்குக்கு ஆண்குரங்கு பேன் எடுக்கும் சிலை அமைப்பு கண்ணைக் கவர்கிறது. குன்றின் மேல் ஏறும் போது ஒரே பாறையில் இரண்டு அடுக்குகளுடன், மேலே ஒன்பது கலசங்களுடன் செதுக்கப்ட்ட கணேசரதம் காணப்படுகிறது. குன்றின் வடகோடியில் யானை, மான், குரங்கு, மயில் முதலிய சிற்பங்களைக் காணலாம்.

அடுத்து வடமேற்கில் த்ரிமூர்த்தி மண்டபம் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்பகிருகங்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது.

த்ரிமூர்த்தி மண்டபத்திலிருந்து சிறிது தூரத்தில் கோடிக்கல் மண்டபம் இருக்கிறது. இதில் பெண் துவராபாலிகைகள் கழுத்தில் சிறுமாலையுடனும், வில்லைத் தாங்கியபடியும் கம்பீரமாக நிற்கிறார்கள்.

சற்று தெற்கே வராக குகை மண்டபத்தைக் காணலாம். இதன் உட்பக்கச் சுவர்பாறையின் இடதுபுறம் வராக அவதாரச் சிற்பத்தை வடித்திருக்கிறார்கள். பூமியைக் கவர்ந்துச் சென்ற அரக்கன் கைகூப்பிக் கிடக்கிறான். திருமால் வராக வடிவம் எடுத்து லட்சுமியைத் தாங்கி நிற்கிறார். மேலே தேவர்கள் வணங்குகிறார்கள்.

இதற்கு எதிர்சுவரில் மகாபலியின் கர்வத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பம் இருக்கிறது. விண்ணை அளப்பது போல் ஒரு கால் தூக்கியிருக்கிறது. கீழே மகாபலி வியப்பும் அச்சமும் தோன்ற அமர்ந்திருக்கிறான்.

மகிஷாசுரமர்த்தினியாகச் சிங்கத்தின் மேல் ஏறி எருமைத் தலை அரக்கனோடு போர்புரியும் காட்சி அமைந்திருக்கிறது. இதற்கு எதிராகச் சாந்தமாய் ஐந்துத்தலை நாகத்தில யோக நித்திரை செய்கிறார் திருமால். திருமாலுக்கு எதிரே அடிபட்ட இருவர். இப்படி இந்த ஒரு மண்டபத்திலேயே ரெளத்திரத்தை காட்டும் சிற்பத்துக்கு எதிரில் சாந்தமே உரு எடுத்த கோலத்தையும் காணலாம்.

சற்று தெற்கே போனால் இராமானுஜ மண்டபம் இருக்கிறது. ஆனால் இது இராமானுஜரின் காலத்துக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. இதில் உள்ளத் தூண்களை நிமிர்ந்து அமர்ந்த சிங்க உருவங்கள் தாங்குகின்றன.

இதையடுத்து குன்றின்மேல் ஏறிப்போனால் இடிந்த கோபுரம் போன்ற ஒரு கட்டிடம் இருக்கிறது. இது முன்பு கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இது ஓலக்கணீசர் என்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில். இதையடுத்து முற்றுபெறாத ராயகோபுரம் ஒன்று இருக்கிறது.

இனி கீழிறங்கி நடந்தால் குன்றுக்குத் தெற்கே பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் உள்ள இடத்துக்குப் போய்ச்சேரலாம். இவற்றை நெருங்கும் போதே சீறி நிற்பது போன்ற கல் சிங்கம் ஒன்றும், அதன் பின்னால் கம்பீரமான யானை ஒன்றும் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை.

குடிசைபோல் அமைந்திருக்கும் சிறிய கோயில் திரெளபதி ரதமாகும். இதன் அடிப்புற மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பக்கிருகத்தின் உள்பகுதியில் துர்க்கை உருவம் பின் சுவரிலே புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதை காணலாம்.

தாமரை மலரின் மேல் நிற்கும் கோலம், தலையில் கரண்ட மகுடம், காலடியில் இரண்டு மனிதர்கள் மண்டியிட்டிருக்கிறார்கள், ஒருவன் தலையை அறுத்திடும் காட்சி, வெளிப்புறம் இரண்டு துவாரபாலிகைகள் வில் பிடித்து நிற்கிறார்கள். துர்க்கையினுடைய இந்த விமானத்தின் முன்னால் சிங்க உருவம் நிற்கும் விதமாய் செதுக்கப்பட்டுள்ளது.

திரெளபதி ரதத்திற்கு தெற்கே உள்ள கோயில் அர்ஜுனரதம். பழங்காலத்தில் செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு செய்த கோயில்களின் அமைப்பையொட்டி இரண்டு நிலை மாடத்துடன் செதுக்கப்பெற்றிருக்கிறது.

முன்புறத்து அர்த்த மண்டபத்தை சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதன் வெளிப்புறச் சுவரில் அழகான தூண்களும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களும் அமைந்திருப்பதைக் காணலாம்.

முன்பாகம் தவிர மூன்று புறச் சுவர் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. வடபுறம் மகா விஷ்ணுவையும் அவரருகில் கருடாழ்வானையும் பார்க்கலாம்.

இதையடுத்து ஓர் அரசனும் அரசியும் நிற்கிறார்கள். கிழக்குப்புறச் சுவரின் நடுவில் யானையின் மேல் அமர்ந்திருக்கும் இந்திரனையும், தெற்குச் சுவரில் ரிஷபத்துடன் சிவபிரானையும் காணலாம்.

அடுத்து நீண்ட சதுர வடிவில் அமைந்த கோயிலைப் பீமரதம் என்கிறார்கள். படகை கவிழ்த்து வைத்த மாதிரி மேல் பகுதி அமைப்பும், நாலுபக்கமும் சிங்கத் தூண்களும் தாழ்வாரங்களும் கொண்டது இது.

இது திருமாலுக்காக ஏற்பட்ட ஆலயம்.தெற்கு கோடியில் நாற்பதடி உயரமுள்ள கோயில் தர்மராஜ ரதமாகும். இது மூன்று அடுக்கு கொண்டது. கீழ்ப்பகுதியில் கர்ப்பகிருகம் செதுக்கப் பெறவில்லை. ஆனால் அதற்கு மேல் ஒன்றன் மீது ஒன்றாக இரண்டு கர்ப்பகிருகங்களும், சுற்றிலும் பிரகாரங்களும், நாற்பத்திரண்டு அழகிய சிற்பங்களும் இருப்பதைக் காணலாம்.

இரண்டாவது கர்ப்ப கிருகத்திலிருந்து மேலே போக படிகள் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இவற்றில் பல சிவபிரானின் திருவுருவங்கள்.கிழக்குக் கோடியில் அவரே அர்த்த நாரீசுவரராகவும் விளங்குகிறார். அவரருகில் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இப்படி சிறப்பான அமைப்புள்ள கற்கோயிலை வேறு எங்கும் காண முடியாது.

மேல்பகுதி சிவபிரானுக்கும், நடுபகுதி விஷ்ணுவுக்கும் கீழ்ப்பகுதி பிரம்மாவுக்குமாக ஏற்பட்ட திமூர்த்தி கோயில் இது. மேற்கண்ட நான்கு ரதக் கோயில்களுக்கும் முன்னால் உள்ள சிறுகோயில் சகதேவ ரதம்.இதன் வெளிப்புறத்தில சிற்பங்களே இல்லை. இது எந்த தெய்வத்துக்காகவும் அமைக்கப் பெற்றதில்லை.

இந்திரன் இங்கிருந்து மும்மூர்த்திகளை வணங்குவதாக கொண்டு அமைத்த கோயிலாக இது இருக்க வேண்டும். அவனது வாகனம் ஐராவதம் என்ற யானை. அதுவும் பின்னால் இருக்கிறது. இந்த விமானத்தின் அமைப்பும் யானையின் பின்புறத்தை ஒத்தது.

தமிழில் இந்த வகை கோயில் அமைப்பை துங்கானை மாடம் என்றும், வடமொழியில் கஜ ப்ருஷ்டம் என்றும் சொல்வார்கள்.

இனி இந்த ஊரில் வந்த வழியே திரும்பிச் சென்றால் பார்க்க வேண்டியது புகழ் பெற்ற கடற்கரைக் கோயில். அலைமோதும் கடற்கரையில் கருங்கல்லினால் முதல் முதலாகக் கட்டியது இந்தக் கோயில். அலைகள் அடிப்பதாலும், உப்பங்காற்று வீசுவதாலும் இந்தக் கோயில் பழுது பட்டிருந்தாலும், இதன் அழகு சிறிதும் குன்றவில்லை.

கடலை நோக்கியுள்ள கோயிலில் பெரிய லிங்கம் ஒன்றும், சோமாஸ்கந்தர் உருவமும் இக்கோயில் சிவபெருமானுக்காக அமைத்தது என்பதைக் காட்டும்.

இந்தக் கோயில்களின் முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய பிரகாரங்கள் இருந்தன.கிழக்கே இருந்ததைக் கடல் கொண்டுவிட்டது.

மேற்கே இருந்த பிரகாரம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மணல் மேடாக இருந்தது. மணலைத் தோண்டி மறைந்திருந்த சிற்பங்களைக் கண்டெடுத்து பல இடங்களில் வைத்து, ரிஷபங்களை வரிசையாக அமைத்து அழகு படுத்தியிருக்கிறார்கள், அரசாங்கத்தார்.

பழமையான பாடல் பெற்ற விஷ்ணுகோயிலில் வழிபாடு இல்லாத குறையை நீக்க, ஊர்நடுவில் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் ஒன்று அமைத்திருக்கிறார்கள்.

விருப்பம் உள்வர்கள் இங்கே வழிபாடு செய்து திரும்பலாம். இங்கிருந்து வடக்கே மூன்று மைல் தொலைவில் சளுவன்குப்பம் என்றொரு கிராமம்இருக்கிறது.

அங்கே கடற்கரை யோரம் விசித்திரமான குகை ஒன்றைப் பார்க்கலாம். இதன் நடுவே ஒரு சிறு அறையுடன் மேடை ஒன்றும். அதற்கு மேல் அழகிய சிங்கச் சிற்ப வரிசையும் செதுக்கப் பெற்றிருக்கின்றன.

இந்த மேடையில் அமர்ந்து பாடினாலும் பேசினாலும் நன்றாக ஒலிக்கிறது. இது பிரசங்க மேடையாக இருந்திருக்க வேண்டும்.

சிங்கச் சிற்பம் அமைந்த இக்குகைக்கு புலிக்குகை என்று தவறான பெயர் வழங்கி வருகிறது.

பொருளாதாரம்

சென்னைக்கு நகரத்தின் அருகாமையில் இருப்பதாலும், மற்ற இடங்களுக்கு செல்ல நன்கு போக்குவரத்து வசதிகள் இருப்பதாலும், செங்கல்பட்டுவைச் சுற்றி பல நவீன தொழிற்சாலை உள்ளன.

டெக் மஹிந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ, போர்டு, ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், சேம்சங், இன்ஃபோசிஸ், பெப்சி, டிவிஎஸ், சீமென்ஸ், நிசான் ரெனால்ட், அப்பல்லோ டயர்ஸ், மஹிந்திரா ஆர் & டி ஆகிய தொழிற்சாலைகள் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகள் ஆகும்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *