கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district)

Coimbatore district

கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும். கோயம்புத்தூர் சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கோயம்புத்தூர்
பகுதி கொங்கு நாடு
பரப்பளவு 4723 ச.கி.மீ
மக்கள் தொகை 34,58,045 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 731
அஞ்சல் குறியீடு 641xxx, 642xxx
தொலைபேசிக் குறியீடு 0422
வாகனப் பதிவு TN-37, TN-37Z, TN-38, TN-40, TN-41, TN-41Z, TN-66, TN-99

வரலாறு

கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இதன் வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது. அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. ஆயினும் இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை. இப்பகுதி இராஷ்டிரகுட்டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது.

இராஷ்டிரகுடர்களிடமிருந்து சோழர்களின் பொற்காலம் எனப் போற்றப்படும் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கைகளிலிருந்து வீழ்ந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த பாண்டியர்களாலும், ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது. பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் 1377 – 78ல் இப்பகுதியை போரிட்டு வென்றனர். சில காலம் இப்பகுதி நாயக்கர்களின் சுதந்திரமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.

முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை, விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது. இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் விழுந்தது, அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினார். ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மகாராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த இராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவிற்கே பிரிட்டிஷார் வழங்கினர்.

அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான வருவாய் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை ஆங்கிலேயர் தங்களின் மெட்ராஸ் மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் ஆங்கிலேயர்ருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது.

1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

கோவை வட பகுதிகளுடன் சேலம் பகுதிகள் சில இணைக்கப்பட்டன. தென் பகுதி தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டமாக உருவானது. 1866ஆம் ஆண்டு நகராட்சியானது. அப்போதைய மொத்த மக்கள் தொகை 24,000 ஆகும். அதன் பிறகு வளர்ச்சி பெற்று 01.05.1981 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது சாலை வசதி, விமானம், இரயில் போக்குவரத்து மற்றும் இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.

கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் கோவையை கைப்பற்றி படைத்தளம் அமைத்தனர். பின்னர் மைசூர் மன்னர்கள் இதை கைப்பற்றிக் கொண்டனர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடன் பலமுறை போர் செய்தனர். இதனால் இப்பகுதி அடிக்கடி கைமாறிக் காண்டே இருந்தது. 1768ல் ஆங்கிலேயர்கள் கோவையை கைப்பற்றி இழந்தனர். 1783ல் மீண்டும் இதுவே நிகழ்ந்தது. 1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார்.

1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதனை 1947 வரை அரசு புரிந்தனர். திப்பு இறந்ததும் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்ஹெசி பிரவு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் . திப்புவின் வாரிசுகளுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு அரசு உரிமை பறிக்கப்பட்டது. பழைய அரச குடும்பத்தினரான கிருஷ்ண ராஜ உடையாரிடம் மைசூரை ஆளும் உரிமையை ஒப்படைத்த ஆங்கிலேயர்கள் கன்னடம், வயநாடு, கோயம்புத்தூர், ஈரோடு,தாராபுரம், ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஹைதராபாத் நிஜாமுக்கு ஊட்டி ஆகிய பகுதிகள் தரப்பட்டன. இந்த பிரிவினைகளால் கோவை பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருந்த்தால் 1799ம் ஆண்டு கோவை பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் 20-10-1803 லிருந்து 20-01-1805 ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு: பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு , கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம்,உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம், கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது.

1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.

1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது,இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை என் 1917ன் படி வருவாய் துறை தேதி:31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம்,ஈரோடு, பெருந்துறை, மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 11 வருவாய் வட்டங்களையும், 38 உள்வட்டங்களையும், 295 வருவாய் கிராமங்களையும் கொண்டது.

வருவாய் கோட்டங்கள்

  1. கோயம்புத்தூர் தெற்கு
  2. கோயம்புத்தூர் வடக்கு
  3. பொள்ளாச்சி

வருவாய் வட்டங்கள்

  1. கோயம்புத்தூர் தெற்கு
  2. பேரூர்
  3. மதுக்கரை
  4. சூலூர்
  5. கோயம்புத்தூர் வடக்கு
  6. அன்னூர்
  7. மேட்டுப்பாளையம்
  8. பொள்ளாச்சி
  9. கிணத்துக்கடவு
  10. வால்பாறை
  11. ஆனைமலை

புவியியல்

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயமும், அதனைச் சார்ந்த தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது.

அரசியல்

இம்மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

மக்களவைத் தொகுதிகள்

  1. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
  2. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

சட்டமன்றத் தொகுதிகள்

மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் வடக்கு
தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர் தெற்கு
சிங்காநல்லூர் கிணத்துக்கடவு
பொள்ளாச்சி வால்பாறை
சூலூர் கவுண்டம்பாளையம்

ஆறுகள்

ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகின்றன. கல்லார், கௌசிகா, சங்கனூர் பள்ளம் போன்ற சிற்றாறுகளும் இங்கு பாய்ந்து வருகின்றன. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் எனக் கருதப்படும், சிறுவாணி ஆற்று நீர் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, கோவையின் சுற்றுலாத் தலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அணைகள்

புதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, நீலி அணைக்கட்டு, வெள்ளூர், சிங்காநல்லுர், குறிச்சி போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றால் கோவை, பல்லடம் பகுதி நிலங்களில் 15,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுக்கு, குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளால், 9000 ஏக்கர் நிலங்களும், உடுமலை வட்டார பயிர் நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. அமராவதி நீர்த்தேக்கத்தின் வழியாக, 40,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதியை அடைகின்றன.

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும் இங்கு நிறைய சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், ஆன்மீக மற்றும் வழிபாட்டு இடங்களும் உண்டு.

பேரூர் பட்டீசுவரர் கோயில்

 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.

பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

பாலமலை அரங்கநாதர் கோயில்

பாலமலை பாலமலை அரங்கநாதர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டம், பாலமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயிலில் பாலமலை அரங்கநாதர் சன்னதியும், செங்கோதையம்மன், பூங்கோதையம்மன், விநாயகர், ராமானுஜர், பரமவாசுதேவர், காளிதாசர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில்

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

கோனியம்மன் கோயில்

கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது.

இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.

லோக நாயக சனீசுவரன் கோயில்

சனி பகவானுக்கு இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று பெயர் காரணம், சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டது , வாகனமான காகமும் இரும்பினால் ஆனது. ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது.

ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறதுசனிபகவானின் விக்ரகம் தனது உலோகமான எஃகு இரும்பினால் காணப்படுவது உலகினில் இங்கு மட்டும்தான்

மாசாணியம்மன் கோயில்

இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும்.

இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.

ஆனைமலை

மேற்கு தொடர்ச்சி மலைகள் 1400 மீட்டர் உயரத்தில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பொள்ளாச்சியின் அருகே இந்த விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது இங்கு யானை, காட்டு எருது,  தேவாங்கு கரடிகள்,  கருப்பு நிறப் பறவைகள்,  எறும்பு தின்னி,  போன்ற விலங்குகள், காணப்படுகின்றன.

இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில் முதலைகள் ஏராளமாக உள்ளன.  குன்றுகள்,  அறிவியல்,  தேக்கு மரங்கள்,  தோப்புகள்,  பண்ணைகள்,  அணைக்கட்டுகள்,  நீர்த்தேக்கங்கள்,  என இயற்கை எழில் கைகுலுக்கிக் கொள்ளும் அழகான பிரதேசம். ‘டாப்ஸ்லிப்’  பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ‘ சிற்றுந்து’  அல்லது யானை மீது உல்லாச சவாரி சென்று வரலாம்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, கோயம்புத்தூருலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பொள்ளாச்சி 14 கி.மீ., உடுமலைப்பேட்டை 30 கி.மீ. தொலைவில் உள்ளன.

ஆழியாறு அணை

ஆழியாறு அணை கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும்.முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும்.

கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர்.பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை . 1962-ல் இந்த அணை திறக்கப்பட்டது.இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது.

உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.[6] இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது.

வால்பாறை

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3914 அடி உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.

சிறுவாணி ஆறு

சிறுவாணி நதி கோயம்புத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும்.

கோவை குற்றாலம் அல்லது சிறுவாணி நீர்வீழ்ச்சி என்பது சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது.

இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.

பொருளாதாரம்

நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது.

சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும், கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர்.

1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர்.தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *