கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்

cooling summer foods for babies

கோடை காலத்தின் உஷ்ணம் தற்பொழுது கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது. நமக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வெண்டும். கோடை காலத்தில் குழந்தைகளின் உடலில் உஷ்ணம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதோடு நீர்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுவதால் தாய்ப்பால் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

ஆறு மாத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்திருப்போம். அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடியதாகவும் நீர்சத்து அதிகமுள்ளதாகவும் இருக்க வெண்டும்.

சிறுவர்கள் நன்றாக ஓடி ஆடி விளையாடுவதினால் வியர்வை அதிக அளவில் வெளியேறும். அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் உடலுக்கு தேவையான சக்தி அளிக்ககூடியதாக இருக்க வெண்டும். கீழ்கண்ட உணவுகளை குழந்தைகளின் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.

தர்பூசணி பழம்

குளிர்ச்சி அளிக்க கூடிய உணவுகளில் முக்கியமானது தர்பூசணி இதில் நீர்சத்து 92% இருப்பதால் குழந்தைகளின் உடலில் தண்ணீர்ச்சத்து குறையாமல் இருக்கும். பொதுவாக 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தர்பூசணி பழத்தினை கொடுக்கலாம்.

ஆரம்பத்தில் கொட்டைகள் நீக்கி மசித்து கொடுக்கலாம். பின்பு பிங்கர் புட்ஸாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கலாம். இதில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றக்கூடியது.

வெள்ளரிக்காய்

தர்பூசணி பழத்தினை போன்று வெள்ளரிக்காயும் 90% சதவீதம் நீர்ச்சத்தினை உள்ளடக்கியது.இதில் எலெக்ட்ரோலைட்டுகள்,வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமுள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திலிருந்து வெள்ளரிக்காயினை கொடுக்கலாம். ஆனால் சில குழந்தைகளுக்கு வாயுக்கோளாறினை ஏற்படுத்த கூடும் என்பதால் எட்டு மாத காலத்திலிருந்து கொடுப்பது சிறந்தது.

இளநீர்

வெயில் காலத்தில் கிடைக்கும் வித விதமான கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் ஜூஸ்களை காட்டிலும் இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது இளநீர்.இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதம் எனவும் இதனை கூறலாம்.

எலெக்ட்ரோலைட் எனப்படும் உப்புக்கள் உடலின் இயக்கத்திற்கும், சுறுசுறுப்புக்கும் காரணியாக இருக்கிறது. தினமும் இளநீர் குடிப்பவர்களுக்கு உடலில் இந்த எலக்ட்ரோலைட் உப்புச்சத்துக்கள் கிடைக்கப் பெற்று, உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தந்து சிறப்பான உடல் இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது. உடல் களைப்பையும் சீக்கிரத்தில் போக்குகிறது.

தயிர்

நம் அனைவரின் வீட்டிலும் எளிதாக கிடைக்கூடிய உணவு பொருள் தான் தயிர் .கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு உணவினை நமக்கு செரிமானம் அடைய செய்கிறது .

பொதுவாக ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாது ஆனால் தயிர் குழந்தைகளுக்கு நன்மையளிக்கூடியது. இதில் கால்சியம் மற்றும் புரோடீன்கள் அதிகமுள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுவளிக்கக்கூடியது.

ஆரஞ்சு

கோடை காலத்தில் சூட்டை தணிப்பதில் சிட்ரஸ் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் ஆரஞ்சு உடலுக்கு தேவையான நீர் சத்தினை அளிக்கக்கூடியது .

ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின்-சி சத்து மட்டுமின்றி கால்சியம்,பொட்டாசியம், நார்ச்சத்து வைட்டமின்-ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

தக்காளி

84% தண்ணீர் சத்தினை உள்ளடக்கிய தக்காளிப்பழம் கோடை காலத்தில் உடலில் நீர்சத்தினை தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வைட்டமின்- சி மற்றும் வைட்டமின் -எ நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது.

இதில் அமிலத்தன்மை அதிமாக இருப்பதால் 10 மாதத்திற்கு பின்பு அறிமுகப்படுத்தலாம் இதை பச்சையாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ராஷஸ் , வயிற்று வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படவில்லையென்றால் எட்டு மாதத்திலிருந்து கொடுக்கலாம்.

பார்லி

கோடை காலத்திற்கேற்ற அருமையான தானியம் தான் பார்லி. அரிசி மற்றும் கோதுமையினை ஒப்பிடும் பொழுது பார்லியினை உபயோகிப்பது குறைவு தான் ஆனால் உடலில் நீர் சத்தினை தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திலிருந்து பார்லி தண்ணீர் மற்றும் பார்லி கஞ்சி போன்றவை கொடுக்கலாம்.

சீரகம்

உடலின் வெப்பநிலையினை சமநிலைப்படுத்துவதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. உணவினை நன்கு செரிமானம் அடைய செய்கிறது. குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திலிருந்து சீரக தண்ணீரினை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு சாதம் தயாரிக்கும் பொழுது சேர்த்து சமைக்கலாம்.

முலாம்பழம்

முலாம் பழத்திலும் கிட்டத்தட்ட 90% நீர் சத்துக்கள் இருப்பதால் நன்கு செரிமானம் அடைய செய்கின்றது . இப்பழத்தின் சதை பகுதியினை நன்கு மசித்து குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.

வாழைப்பழம்

குழந்தைகளுக்கு நாம் அனைவரும் விரும்பி கொடுக்கும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம் ஆனால், இது உடல் சூட்டினை தணிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் உடலின் வெப்பநிலையினை சமநிலைப்படுத்துகின்றது.

சுரைக்காய்

சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும். சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து பாஸ்பரஸ் சத்து வைட்டமின்-பி போன்றவை உள்ளன.

சுரைக்காயினை நன்கு வேக வைத்து மசித்து குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து கொடுக்கலாம். செரிமான சக்தியினையும் அதிகரிக்கக்கூடியது.

பப்பாளி பழம்

நம் வீடுகளிலும் அருகில் உள்ள சந்தையிலும் சுலபமாக கிடைக்கும் அற்புதமான பழம். தண்ணீர் சத்து நிறைந்த இந்த பழத்தினை சிறிதளவு மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சப்ஜா விதைகள்

பாசில் விதைகள் என்று அழைக்கப்படும் சப்ஜா விதைகள் சீரகத்தினை போன்றே உடல் சூட்டினை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் அவை பித்தத்தை குறைக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்பு கொண்டது.

குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து இந்த விதைகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது விதைகளை ஊறவைத்த தண்ணீரினை கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *