தருமபுரி மாவட்டம் (Dharmapuri District)

Dharmapuri District

தருமபுரி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.தர்மபுரி மாவட்டமானது அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கியது.பின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக 09-02-2004 அன்று மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் தருமபுரி
பகுதி கொங்கு நாடு
பரப்பளவு 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை 15,06,843 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 382
அஞ்சல் குறியீடு 636xxx
தொலைபேசிக் குறியீடு 04342
வாகனப் பதிவு TN-29

வரலாறு

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார். 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 2ம்-நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்கு இம்மாவட்டத்தில் இருந்தது. இந்த சமயத்தில் தெற்கில் சோழர்கள் அதிகாரத்திற்கு வந்தனர். கி.பி.894-ல் முதலாம் ஆதித்திய சோழன் கொங்கு நாட்டை கைப்பற்றினார்.கி.பி.949-950-ல் சோழர்கள் இராஷ்டகூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இராஷ்டகூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்கு பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

கங்கவாடி சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சி பகுதியாக ஆக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப்பகுதிகளை கைப்பற்றினார். பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால் அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்திருந்தது. ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனை சோழர்கள் பகுதியிலிருந்து விரட்ட யாதவர்களுக்கு முதலாம் சுந்தர பாண்டியன் உதவினார்.

13-ம் நூற்றாண்டின் வரலாறு ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்கு பிறகு ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்கு பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனை சோழ பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது. ஆனால் அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரன் மகன் வீர ராமநாதன் சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாக பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானின் முகமதிய ஆட்சியர்களால் சூழப்பட்டனர்.

விஜய நகர இராஜ்ஜியத்தின் எழுச்சி 14-ம் நூற்றாண்டில் காணப்பட்டது. மதுரையில் உள்ள முகமதிய சுல்தானின் அரசை வீழ்த்துவதற்காக கி.பி.1365-66 ஆண்டு முதலாம் புக்கா தனது கவனத்தை தெற்கு திசையில் திருப்பினார். இந்த படையெடுப்புகளில் ஒன்றில் தான் சேலம் மாவட்டம் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது.

கி.பி.1565-ம் ஆண்டு வரை பெருமையுடன் ஆண்ட விஜயநகர அரசர்களை தக்காண சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகள் தலைக்கோட்டை, ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்த்தினர். இதே சமயம் சென்னை பட்டணத்தின் ஜெகதீரராயர் மைசூருடன் சேர்த்து பாரமஹாலையும் ஆட்சி செய்தார். இதற்கிடையில் கி.பி.1623-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கரின் மூலம் மதுரை நாயக்கர்களின் புகழ் உச்சியை அடைந்தது.

பாளையக்காரர்கள் நாயக்கர்களிடம் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் இப்பகுதியை பாளையக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். பாளையக்காரர்களில் ஒருவரான இராமசந்திரநாயக்கர் காவேரியின் தெற்கு பகுதியிலுள்ள நாமக்கல் வட்டத்துடன் தலைமலை பகுதியையும், கூடுதலாக கவனித்து வந்தார். நாமக்கல் கோட்டை இவர்களாலேயே கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

காவேரியின் வலது கரையில் அமைந்துள்ள காவேரிபுரத்தையும் சேர்த்து நாயக்கர்களின் பேரரசின் முக்கிய பகுதிகள் கெட்டி முதலியார்களின் பொறுப்பில் இருந்தது. மேலும் காவேரிபுரம் மைசூர் பீடபூமிக்கு செல்லும் ஒரு முக்கிய வழிப்பாதையின் தொடக்கத்தில் அமைந்திருந்தது. இவர்களுடைய அதிகாரத்தின் மையப்பகுதி தாரமங்கலமாக இருந்ததால் அங்கே ஒரு பெரிய கோயிலை நிறுவினர். இவர்களுடைய ஆட்சி கிழக்கே தலைவாசல் வரையும், தெற்கே கோவையிலுள்ள தாராபுரம் வரை நீண்டியிருந்தது. ஓமலூர் மற்றும் ஆத்தூரில் உள்ள கோட்டைகள் கெட்டி முதலியார்களின் முக்கிய கோட்டைகளாகும்.

கி.பி.1611-ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தை சேர்ந்த காந்திராவேநரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றினார். மேலும் இவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1654-ம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து விராலகத்திரதுர்க், பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். ஓசூரை மைசூர் மன்னரான சந்திரசங்கர் தொட்டா தேவராஜ் என்பவரிடமிருந்தும், ஓமலூரை கெட்டி முதலியார்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார்.

மராட்டியர்களின் ஆக்கிரமிப்பால் மைசூர் அரசு ஒடுக்கப்பட்டது. பாரமஹால் மற்றும் தால்காட் பகுதி மராட்டியர்களின் கைகளுக்கு மாறியது. கி.பி.1688-89 -ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராயர் பாரமஹால் பகுதியின் மீது படையெடுத்து தருமபுரி மனுக்கோண்டா, ஓமலூர் பரமத்தி, காவேரிபட்டணம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். கி.பி.1704-ம் ஆண்டில் சிக்க தேவராயரின் மரணத்திற்கு முன்பு சேலத்தின் முழுபகுதியும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதற்கிடையில் கடப்பாவின் நவாப் அப்துல் நபிக்கான் தன்னுடைய அதிகாரத்தை தெற்கு நோக்கி செலுத்தி கி.பி.1714-ம் ஆண்டில் பாரமஹால் பகுதியின் தலைவரானார்.

கி.பி.1760-ம் ஆண்டு மைசூர் பாரமஹால் ஹைதர்அலியின் அதிகாரத்தில் இருந்தது. கி.பி.1767-ல் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயே அரசு ஹைதர்அலியின் மீது தாக்குதல் நடத்தி காவேரிப்பட்டணத்தை கைப்பற்றினர். பின்னர் கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர். ஹைதர்அலி மீண்டும் வலிமையுடன் போரிட்டு, ஆங்கிலேயர்களை துரத்திவிட்டு,காவேரிப்பட்டணத்தை மீண்டும் கைப்பற்றினார்.

சில மாதங்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பாரமஹால் மீது மீண்டும் ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர்.மேலும் தெற்கு தருமபுரி, சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் ஆகியவை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி சரணடைந்தது. இருந்த போதிலும் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. ஹைதர்அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கலை கைப்பற்றினார். இரண்டாம் மைசூர் போரின் போது சேலம் மாவட்டம் ஹைதர்அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஹைதர்அலிக்கு பின் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அதிக அதிகாரம் பெற்றவராக இருந்தார்.திப்புசுல்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் மராட்டியர் மற்றும் ஹைதாராபாத் நிஜாமுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கி.பி.1790-ல் மூன்றாம் மைசூர் போரை தொடுத்தனர்.ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு காவேரிப்பட்டிணத்தில் வலிமையுடன் போரிட்டது. திப்புசுல்தான் முழுபலத்துடன் போரிட்ட போதும் அவரால் ஆங்கிலேயரை தடுத்து நிறுத்த முடியவில்லை.

கி.பி.1791-ம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, நீலகிரி மற்றும் இரத்தினகிரி ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. மேலும் சில கோட்டைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆங்கிலேயர் வசம் வந்தது. கி.பி.1791-ம் ஆண்டில் திப்புசுல்தான் தெற்கிலிருந்து ஒரு படைப்பிரிவை அனுப்பினார். அது பென்னாகரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரிடத்தில் சரணடைந்தது.

கி.பி.1792-ம் ஆண்டில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே சமாதானம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புசுல்தான் ஆட்சியின் பாதி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. பாலக்காட்டு பகுதியை தவிர்த்து சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும், ஒசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது. ஆங்கிலேயரின் முதல் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிடமாக கிருஷ்ணகிரி அமைக்கப்பட்டது.

கி.பி.1799-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஒசூர் தாலூக்கா, நீலகிரி, அஞ்செட்டி, துர்க்கம், இரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் போன்ற பல இடங்கள் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் இறந்த பிறகு சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கிலேய ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.

தற்போதைய தருமபுரி மாவட்டம் ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவாக இருந்தது. 2.10.1965-ஆண்டு தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 09.02.2004-ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

தருமபுரி மாவட்டதில் இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய் கிராமங்கள் கொண்டது.

வருவாய் கோட்டங்கள்

 1. தர்மபுரி
 2. அரூர்

வருவாய் வட்டங்கள்

 1. தருமபுரி
 2. அரூர்
 3. பாலக்கோடு
 4. பாப்பிரெட்டிப்பட்டி
 5. பென்னாகரம்
 6. காரிமங்கலம்
 7. நல்லம்பள்ளி

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள்

இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், 10 ஊராட்சி ஒன்றியகளும், 251 கிராம ஊராட்சிகளும் கொண்டது.

தருமபுரி மாவட்ட எல்லைகள்

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும்

கிழக்கில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களும்

தெற்கில் சேலம் மாவட்டமும்

மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும்

புவியியல்

தருமபுரி மாவட்டம் முழுவதும், காடுகளாலும் மற்றும் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்பைடர் பள்ளத்தாக்கு பல காட்டு விலங்குகளின் தாயகமாகும். இம்மாவட்டம் யானைகளின் இடம்பெயர்வு பாதையில் வருகிறது. மனிதனுக்கும், யானைக்கும் இடையிலான மோதல்கள் இந்த பகுதிகளில் மிகவும் பொதுவானவை ஆகும். பல பழங்குடி சமூகங்கள் இந்த காடுகளை நம்பியுள்ளன.

சேர்வராயன் மலைத் தொடரின் மேலே உள்ள, வத்தல் மலை என்னும் குக்கிராமமானது, காபி மற்றும் பலாப்பழங்களை பயிரிடுவதற்கு, ஏற்ற நிலைமைகளைக் கொண்டுள்ளது. மொரப்பூர் மற்றும் அரூர் வனப்பகுதியில், காட்டுப்பன்றிகள் மற்றும் புள்ளிமான்கள் பொதுவாக காணப்படுகின்றன. காட்டெருது சில நேரங்களில், பொம்மிடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, உலா வருகிறது. தொப்பூர் மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.

ஆறுகள்

காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வன்னியாறு, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமாரநதி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.

அரசியல்

இம்மாவட்டம் 5 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதி

 1. பாலக்கோடு
 2. பென்னாகரம்
 3. தர்மபுரி
 4. பாப்பிரெட்டிப்பட்டி
 5. அரூர்

மக்களவைத் தொகுதி

 1. தர்மபுரி

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்கு பரிசல் பயணமும், எண்ணைக்குளியலும் பிரபலம்.

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும்.

‘உகுநீர்க்கல்’ என்ற தமிழ்ச் சொல்லே மருவி ‘ஒகேனக்கல்’ என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.

தீர்த்தமலை

தீர்த்தமலை கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது.இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது.

இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறுவதில்லை.

இப்புனித நீரை மக்கள் தீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனர். மேலும் இங்கு அக்கினிதீர்த்தம், குமாரதீர்த்தம் கெளரிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீர்த்தமலை என பெயர் பெற்றது.

இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர்.

தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்

தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில் அரூருக்கு அருகில் உள்ள தீர்த்தமலையில் உள்ள சிவன் கோயிலாகும். கோயில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் உள்ள ஊரும் தீர்த்த மலை என்றே அழைக்கப்படுகின்றன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்த கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும்.

சென்றாய பெருமாள் கோவில்

இக்கோயில் 9ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில். இதன் மற்றொரு பெயர் சின்னதிருப்பதி. பெருமாள் கோவிலின் துணை பெயர்  ஸ்ரீதேவி, பூதேவி, சமேக சென்ராய பெருமாள். இக்கோவிலானது கிழக்கு நோக்கி உள்ளது.

கிருஷ்ண தேவராயருக்கு இக்கோவிலில்தான் திருமணம் நடைபெற்றது.கோவில் மண்டபத்தில் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் , நம்மாழ்வார் என மூன்று ஆழ்வார்கள் உள்ளனர்.

பொருளாதாரம்

தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது. தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர் வட்டங்கள் தொழில் மையங்களாக வளர்ந்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் பதிவு பெற்ற சிறுதொழிற் கூடங்கள் 1108. இவற்றுள் ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களில் மட்டும் 384 சிறுதொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேமியா போன்ற பொருள் தயாரிக்கும் தொழிலகங்கள் அரூர், தர்மபுரி வட்டங்களில் அதிகமாகக் காணப் படுகின்றன.

கிருஷ்ணகிரியில், சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை ஒன்றை அரசு நடத்துகிறது. அரூர் வட்டத்தில் உமியிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

சிப்காட் தொழிற்பேட்டைகள்

பெங்களூருக்கு 35 கி.மீ. முன்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே இதற்கு 8 கி.மீ. தொலைவில் இரண்டாவது தொழிற்பேட்டை சுமார் 500 ஏக்கரில் ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் செயல்படுகிறது.

அசோக் லேலண்ட்

ஓசூரில் இதன் கிளை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பஸ், லாரி முதலியவற்றுக்குப் பாடி கட்டுதல் நடைபெறுகிறது. பேருந்துகளுக்கு தேவைப்படும் பலவித உதிரிப்பாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

வெளிநாட்டுத்தொழில் நுணுக்க உதவியுடன் நடைபெறும் இத் தொழிற்சாலை, பேருந்துகளை ஏற்றுமதியும் செய்து வருகிறது.

டி.வி.எஸ். மொப்பெட்

டி.வி.எஸ் நிறுவனத்தினர் மொப்பெட் என்னும் இருசக்கர மோட்டார் சைக்கிள்களை இங்கு தயாரிக்கின்றனர். இவற்றுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களும் இங்கேயே வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *