ஈரோடு மாவட்டம் (Erode district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996 ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | ஈரோடு |
பகுதி | கொங்கு நாடு |
பரப்பளவு | 5722 ச.கி.மீ |
மக்கள் தொகை | 22,51,744 (2011) |
மக்கள் நெருக்கம் | 1 ச.கீ.மீ – க்கு 391 |
அஞ்சல் குறியீடு | 638xxx |
தொலைபேசிக் குறியீடு | 0424 |
வாகனப் பதிவு | TN 33,TN 86 |
- வரலாறு
- பெயர்க் காரணம்
- மாவட்ட வருவாய் நிர்வாகம்
- உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
- ஈரோடு மாவட்ட எல்லைகள்
- புவியியல்
- அரசியல்
- சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
- சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
- கொடிவேரி அணைக்கட்டு
- பவானிசாகர் அணை
- வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
- பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
- பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
- பண்ணாரி மாரியம்மன் கோயில்
- கூடுதுறை
- பவானி சங்கமேசுவரர் கோயில்
- சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்
- தொண்டீசுவரக் கோவில்
- மகிமாலீசுவரர் கோயில்
- கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயில்
- பொருளாதாரம்
- மேலும் படிக்க
வரலாறு
ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், மோடின் சுல்தான் மற்றும் மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர்.
ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினை செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின், கிழக்கு இந்திய கம்பெனியானது ஆட்சி புரிந்தது.
ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாகவும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது.
அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஒரு ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது.
கேர்ரிசன் 1807இல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன.
பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராச ராச சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர்.
இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும், தொல்பொருள் சிறப்பும் மிக்க ஈரோடு மாவட்டம், தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அப்போதைய கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு நகரம், 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊராகத்திகழ்ந்தது. பல அன்னியப்படைகள் தாக்கி அழித்தன, அனைத்து செல்வங்களும் கொள்ளையடித்து கொண்டு போகப்பட்டன. அதனால் 1792 ஆம் ஆண்டில் ஈரோடு நகரம் வெறும் 400 இடிந்த வீடுகளையும் 3000 மக்களையும் மட்டுமே கொண்டிருந்தது.
பின்பு 4-3-1799 ல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தப்பகுதி முழுவதும் கும்பினியர் வசமானது. அப்பொழுது நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நொய்யல் வடக்கு மாவட்டம் மற்றும் நொய்யல் தெற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு முறையே பவானியும், தாராபுரமும் தலைநகரங்களாயின. நொய்யல் வடக்கு மாவட்டத்தில் கோயமுத்தூர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளும், நொய்யல் தெற்கு மாவட்டத்தில் கரூர், பொள்ளாச்சி, தாராபுரம் போன்ற பகுதிகளும் அடங்கியிருந்தன.
பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால், 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகராகக்கொண்டு மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த ஈரோடு தாலுகாவை, பெருந்துறை தாலுகாவுடன் இணைத்து ஈரோட்டை துணை தாலுகாவாக மாற்றினர். அதேபோல், காங்கேயம் தாலுகாவை, தாராபுரத்துடன் இணைத்தனர், மேலும் சத்தியமங்கலம் தாலுகா தலைமையகத்தை கோபிசெட்டிபாளையத்துக்கு மாற்றினர்.பின்னர் 1868 ஆம் ஆண்டில் ஈரோடு மீண்டும் தாலுக்கா அந்தஸ்த்து பெற்றபோது தனி தாலுகாவாக இருந்த பெருந்துறை, ஈரோடு தாலுகாவுடன் இணைக்கப்பட்டது.
24-9-1979-ல் மாநில நிர்வாக சீர்திருத்தக்குழுவின் பரிந்துரைப்படி ஈரோடு நகரைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவும், மேலும் தாராபுரம் தாலுகாவைப் பிரித்து காங்கேயம் தாலுகாவும், ஈரோடு தாலுகாவைப் பிரித்து பெருந்துறை தாலுகாவும் மற்றும் கோபிச்செட்டிபாளையத்தை தலைமையிடமாகக்கொண்டிருந்த சத்தியமங்கலம் தாலுகாவை பிரித்து கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் என இரண்டாப்பிரித்தும் மொத்தம் மூன்று புதிய தாலுகாகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டது.
அதன்படி கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்த ஈரோடு, பெருந்துறை, பவானி, காங்கேயம், கோபிச்செட்டிபாளையம் தாலுகாக்களையும், சேலம் மாவட்டத்திலிருந்த சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாக்களையும் இணைத்து ஈரோடு மாவட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியாளர்கள், திருச்செங்கோட்டையும், சங்ககிரியையும் ஈரோட்டுடன் இணைத்தால் சேலம் மாவட்டத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி தாலுகாக்களைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சத்தியமங்கலம் மற்றும் தாராபுரத்தை சேர்த்து, ஏனைய ஐந்து தாலுகாகளையும் உள்ளடக்கி மொத்தம் ஏழு தாலுகாகளுடன் புதிய மாவட்டம் உருவானது. 1997ஆம் ஆண்டு வரை பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைநகரான ஈரோடு நகரின் பெயராலேயே ஈரோடு மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டில், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, ஈரோடு மாவட்டத்திலிருந்த தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுகாக்கள் முழுமையாகவும், பெருந்துறை தாலுகாவிலிருந்த ஒரு பகுதியும் (ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் ஒன்றியப்பகுதிகள்) பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
பெயர்க் காரணம்
‘ஈரோடு’ எனும் சொல்லானது, பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு’ என்றானதாக சொல்கின்றனர்.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
ஈரோடு மாவட்டமானது, இரண்டு வருவாய் கோட்டங்களும், பத்து வருவாய் வட்டங்களும், 35 உள்வட்டங்களும், 375 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டங்கள்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
வருவாய் வட்டங்கள்
- ஈரோடு வட்டம்
- மொடக்குறிச்சி வட்டம்
- பவானி வட்டம்
- பெருந்துறை வட்டம்
- கொடுமுடி வட்டம்
- கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்
- சத்தியமங்கலம் வட்டம்
- அந்தியூர் வட்டம்
- நம்பியூர் வட்டம்
- தாளவாடி வட்டம்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
ஈரோடு மாவட்டம் ஒரு மாநகராட்சியும், 4 நகராட்சியும், 42 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்ட எல்லைகள்
மாவட்டத்தின் இயற்கை எல்லைகளாக வடக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கிழக்கில் காவிரி ஆறும், தெற்கில் நொய்யல் ஆறும் அமைந்திருக்கின்றன.
தெற்கில் திருப்பூர் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும், ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல்
ஈரோடு மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன.
ஆறுகள்
பவானி, காவேரி, பாலாறு, உப்பாறு, நொய்யல், மோயாறு ஆகியன ஈரோடு மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும்.
அணைக்கட்டுகள்
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பாளையம், காளிங்கராயன் அணை. குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை.
அரசியல்
இம்மாவட்டம் 8 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
சட்டசபைத் தொகுதிகள்
- ஈரோடு கிழக்கு
- ஈரோடு மேற்கு
- மொடக்குறிச்சி
- பெருந்துறை
- பவானி
- அந்தியூர்
- கோபிசெட்டிபாளையம்
- பவானிசாகர்
மக்களவைத் தொகுதி
- ஈரோடு
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் இந்தியாவில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் காப்பகம் ஆகும்.இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 1,411.6 km2 ஆகும்.15.3.2013 ஆம் ஆண்டிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நரை அணில், யானை, சிறுத்தை, ஆற்று நீர் நாய், செம்புல்லிப் பூனை, அலுங்கு, கள்ள மான், கடமான், காட்டெருமை, செந்நாய், கரடி உள்ளிட்ட 35 வகை பாலூட்டிகளும், மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகளும் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன. மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடிக் கழுகு போன்ற 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை, போன்ற ஊர்வன இனங்களும் இங்கு காணப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு இந்த உய்விடத்தில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இங்கு 241 வகைப் பறவைகள் 150 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
கொடிவேரி அணைக்கட்டு
ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள பெரியகொடிவேரியில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
கொடிவேரி அணை 1125ஆம் நூற்றாண்டில் ஊராளி செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. கொடிவேரியில் பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து 10 கி.மீ வடக்கே உள்ள கல்கடம்பூரில் உள்ள கம்பத்ராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன.
சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற்பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.
மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், பண்ணாரி அம்மனும் நஞ்சுண்டேஷ்வரரும் நான் அவ்விடம் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ அங்கே வர மாட்டோம் என்று சொல்கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது.
பவானிசாகர் அணை
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீத்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 ல் நிறைவடைந்தது.
இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும்.
- தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான்.
பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான்.
தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.
இங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது.
இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.
அருகில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு அமரபநீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு ஆதிநாரயனபெருமாள் திருக்கோவில் மற்றும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன.
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை மற்றும் சாலை வசதிகளும் உண்டு. தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் பெரிய திருவிழாக்கள் ஆகும். பச்சைமலையில் தங்க தேர் மற்றும் பெரிய முருகர் சிலை ஆகியவை கவனத்தை ஈர்க்க கூடியவை.
பண்ணாரி மாரியம்மன் கோயில்
சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது.
பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
கூடுதுறை
கூடுதுறை அல்லது முக்கூடல் ஈரோட்டிற்கு அருகில் பவானி என்ற இடத்தில் அமைந்துள்ள புனிதமான இடமாகும்.இந்த இடமானது காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் மாயநிலையிலான அமுதா ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
கூடுதுறையின் கரையில் பவானி சங்கமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.இந்த ஆற்றின் பெயரானது தமிழில் ‘கூடு’ என்ற சொல்லிலிருந்தும் இணைதல், ‘துறை’ என்ற சொல்லிலிருந்தும் ஆற்றுப்படுகை உருவாகியுள்ளது.
பவானி சங்கமேசுவரர் கோயில்
பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் பவானி என்னும் ஊரில் அமைந்துள்ளது. தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது.
மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோயிலின் முதன்மை கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்
சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசியமும் நிகழ்கிறது.
தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
தொண்டீசுவரக் கோவில்
ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன.
தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.
கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான்.
வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.
மகிமாலீசுவரர் கோயில்
இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் அமைந்துள்ளது. இரு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் இவ்வூர் ஈரோடை என்றழைக்கப்பட்டு, பின்னர் ஈரோடு என்றானது. இவ்வூர் முன்னர் மகிமாலீசுவரம் என்றழைக்கப்பட்டது.
கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் கீழே விழாத வகையில் உள்ளது. 63 நாயன்மார்கள் சிலைகளும் 16 வகை லிங்கத் திருமேனிகளும் உள்ளன.
ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும்.
கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயில்
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் ஈரோட்டில் உள்ள வைணவத் திருத்தலம். கொங்கு நாட்டில் சோழர்களால் அமைக்கப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சரித்திரப் பெருமை கொண்ட திருக்கோயில்.
துர்வாச முனிவர் தாம் திருமாலைக் கோபத்தில் அவமதித்த பிழைக்காக வருந்தி கடுந்தவமிருந்து மீண்ட பொழுது ’ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் அமைத்த திருக்கோயில்.
பொருளாதாரம்
ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது.
இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பொதி செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது.
- ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது.
- சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும்.
மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய் புகழ் பெற்றது.