ரத்தசோகை எதனால்? என்னல்லாம் சாப்பிடலாம்..!

ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது ஏற்படுகிற நிலைமையை ‘ரத்த சோகை’என்கிறோம். உடலின் பல உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சுமந்து செல்வது இந்தச் சிவப்பணுக்கள் தான். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) எனும் இரும்புச்சத்துப் பொருள்தான் இந்தப் பணியைச் செய்கிறது. எனவே, ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறைந்து உடலின் பல உறுப்புகளை பாதிக்கும்.

ஆரோக்கியமாக வாழும் ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெசிலிட்டர் வரையிலும் பெண்களுக்கு 12 முதல் 14 கிராம்/டெசிலிட்டர் வரையிலும் ஹீமோகுளோபின் இருக்கும்.

இது ஆண்களுக்கு 13.5 கிராமுக்குக் கீழும் பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ரத்தசோகை (Anaemia) என்கிறோம்.

எதனால் ஏற்படுகிறது ரத்தசோகை

சத்துக் குறைபாடு

ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தியாவதற்கு இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி12, சி, ஃபோலிக் அமிலம் தேவை.  உணவில் இந்தச் சத்துகள் தேவையான அளவுக்கு இல்லாதபோது ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தாய்க்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து அதிகமாக இரும்புச்சத்து தேவைப்படும்.  தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் உணவின் தேவை அதிகரிக்கும். அதை ஈடுகட்டத் தவறும் போது ரத்தசோகை ஏற்படும்.

ரத்தமிழப்பு

இரைப்பைப் புண் அல்லது புற்றுநோய், மூல நோய் (Piles), ஆஸ்பிரின், புரூபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளின் பக்கவிளைவு காரணமாக ரத்தம் இழப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்தசோகை வருவதுண்டு.

குடல் புழுத்தொல்லை

குடலில் கொக்கிப்புழு உள்ளவர்களுக்கு வெளியில் தெரியாத வகையில் ரத்த இழப்பு ஏற்பட்டு ரத்தசோகை நேரலாம். ஒரு கொக்கிப்புழு தினமும் 0.3 மி.லி. ரத்தத்தை உறிஞ்சுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு 300 கொக்கிப்புழுக்கள் வரை இருக்கும். அப்படியென்றால், குடல் புழுக்களால் ஏற்படும் ரத்தமிழப்பின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதரக் கோளாறுகள்

பரம்பரை ரீதியாக ஏற்படுகின்ற சிவப்பணுக் கோளாறு, ரத்தப் புற்றுநோய், தைராய்டு பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்றவை காரணமாகவும் ரத்தசோகை ஏற்படுவது உண்டு.

ரத்தசோகை அறிகுறிகள்

பசி குறையும். அஜீரணம், அளவுக்கு அதிகமான சோர்வு, அடிக்கடி தலைவலி, உடல்வலி, கைகால் குடைச்சல், தூக்கமின்மை போன்றவை முதல் கட்டத்தில் தொல்லை தரும். அடுத்து மாடிப்படிகளில் ஏறினால் மூச்சு வாங்கும். படபடப்பாக வரும். நெஞ்சு வலிக்கும்.

பெருமூச்சு, தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். முகம், நகம், நாக்கு வெளுக்கும். முகம் வீங்கும். நகங்களில் ‘ஸ்பூன்’மாதிரி குழி விழும். தலைமுடி உதிரும். அடிக்கடி தொண்டை, வாய், நாக்கு ஆகியவற்றில் புண் உண்டாகும்.

மண் உண்ணும் பழக்கம்

ரத்தசோகை உள்ளவர்களில் சில பேருக்கு ‘பிக்கா’ (Pica) எனும் மண் உண்ணும் பழக்கம் ஏற்படுவதுண்டு. திடீரென்று ஒருவர் சாம்பல், விபூதி, மண், செங்கல் பொடி போன்றவற்றை விரும்பிச் சாப்பிடத் தொடங்குகிறார் என்றால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

முக்கியமாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தான் இந்தப் பழக்கம் ஏற்படுகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் இரும்புச்சத்து இருக்கவே இருக்காது!

குழந்தைகளுக்கு ரத்தசோகை

சிறுவர், சிறுமிகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இருக்காது.  நினைவாற்றலும் படிப்பில் ஆர்வமும் குறையும். இவற்றைத் தொடர்ந்து தோல், நகம், கண், நாக்கு ஆகியவை வெளுத்துக் காணப்படுவதும் முகம் மற்றும் கணுக்கால்கள் வீங்குவதும் ரத்தசோகையின் அறிகுறிகள்.

பருவப் பெண்களுக்கு ரத்தசோகை

பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் 30 முதல் 50 மி.லி. வரை ரத்தமிழப்பு ஏற்படலாம். இதை ஈடுகட்ட போதிய அளவுக்குச் சத்துள்ள உணவுகளை உண்ணவிட்டால், ரத்தசோகை ஏற்பட்டு மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் போகும்.

திருமணத்துக்குப் பிறகு மலட்டுத்தன்மை உண்டாகும். கர்ப்பப்பை பலவீனம் அடைந்து கரு தங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை

கர்ப்பிணிகளுக்கு 5வது மாதத்தில் ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காரணம், அப்போது தான் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் அனைத்து ஊட்டச் சத்துகள் அடங்கிய சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்பட்டால் பிரசவத்துக்கு முன்பாகவே கரு கலைந்து விடுவது, போதிய வளர்ச்சி இல்லாத குழந்தை பிறப்பது, குறைப்பிரசவம் ஏற்படுவது அல்லது குழந்தை இறந்து பிறப்பது, பொய்யாக பிரசவ வலி தோன்றுவது, நஞ்சுக்கொடி இடம் மாறிவிடுவது, பிரசவத்தின்போது தாய் இறந்துவிடுவது ஆகிய கொடிய விளைவுகள் ஏற்படலாம்.

கர்ப்பிணிக்கு வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளில் குறைபாடு இருந்தால் குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்புள்ளது.

என்ன பரிசோதனை

சாதாரண ஹீமோகுளோபின் பரிசோதனை மூலமாகவே ஒருவருக்கு ரத்தசோகை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ரத்தசோகையின் வகையைக் கண்டறிய ‘மீன் கார்ப்பஸ்குலர் வால்யூம்’ (Mean Corpuscular Volume   MCV) எனும் பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

இது ரத்தச் சிவப்பணுக்களின் சராசரி அளவாகும். இது 80 எஃப் எல்லுக்கும் (Femto liter Fl) குறைவாக இருந்தால், ‘மைக்ரோசைட்டிக் அனீமியா’ (Microcytic Anaemia) என்றும், 80 முதல் 90 வரை இருந்தால் ‘நார்மோசைட்டிக் அனீமியா’ (Normocytic Anaemia) என்றும், 90க்கும் அதிகமாக இருந்தால் ‘மேக்ரோசைட்டிக் அனிமீயா’ (Macrocytic Anaemia) அதாவது, மெகலோபிளாஸ்டிக் அனீமியா (Megaloblastic Anaemia) என்றும் வகைப்படுத்தலாம்.

ரத்தசோகை வகையின் முக்கியத்துவம்

வெறும் இரும்புச் சத்து மட்டும் குறைவாக இருந்து ரத்தசோகை ஏற்படுமானால் அதை ‘மைக்ரோசைட்டிக் அனீமியா’ என்கிறோம். பெரும்பாலான இந்தியர் பாதிக்கப்படுவது இந்த வகையால்தான்.

தைராய்டு பிரச்னை, காசநோய், சிறுநீரகப் பிரச்னை, ஹெச்ஐவி தொற்று போன்றவற்றால் ஏற்படுவது ‘நார்மோசைட்டிக் அனீமியா’. இந்த வகையான நோயைக் குணப்படுத்த, அதற்குக் காரணமான அடிப்படை நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த வேண்டும்.

அடுத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக வருவது ‘மேக்ரோசைட்டிக் அனிமீயா’. இப்படி ரத்தசோகையை வகைப்படுத்தும் போது அதற்குரிய காரணம் தெரிந்துவிடும். அதற்கேற்ப சிகிச்சை முறையை அமைத்து ரத்தசோகையைப் பூரணமாக குணப்படுத்த முடியும்.

ரத்தசோகைக்கு என்ன சிகிச்சை?

நமக்குத் தினமும் சராசரியாக 1 மில்லி கிராமிலிருந்து 3 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து தேவை. என்றாலும், உடலுக்குத் தேவைப்படுகின்ற இரும்புச் சத்தின் அளவு வயதுக்கு வயது வேறுபடுகிறது. குறிப்பாக, வளர்ச்சிப் பருவத்தில் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் இதன் தேவை அதிகரிக்கிறது.

ஹீமோகுளோபின் அளவு 9 முதல் 12 கிராம்/டெசிலிட்டர் வரை இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் ரத்தசோகையைக் குணப்படுத்திவிடலாம்.

 ஹீமோகுளோபின் அளவு 7 முதல் 9 கிராம்/டெசிலிட்டர் வரை இருந்தால் இரும்புச் சத்து மாத்திரைகள், ஊசிகள் இவற்றுடன் ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் கொடுத்து சரி செய்துவிடலாம். 7 கிராமுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரத்தம் செலுத்த வேண்டும்.

இவை தவிர கொக்கிப் புழுவுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட வேண்டும். இது ஒரு பொதுவான சிகிச்சைமுறை. நோயாளியின் உடல்நிலை, கர்ப்பம், அறுவைச் சிகிச்சை போன்ற அவசரத் தேவைகளைப் பொறுத்து சிகிச்சை முறையை டாக்டர்தான் தீர்மானிக்க முடியும்.

குழந்தைகளை கவனியுங்கள்

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரத்தசோகை வருவதற்கு அவர்கள் சாப்பிடும் சத்து குறைந்த உணவுதான் முக்கியக் காரணம். இவர்களுக்குப் பெரும்பாலும் பால்தான் முக்கிய உணவாக இருக்கும்.

தாய்ப்பாலிலும் சரி, பசும்பாலிலும் சரி இரும்புச் சத்து குறைவாகவே இருக்கிறது. 100 மி.லி. பசும்பாலில் 0.1 மில்லி கிராம் தான் உள்ளது. இதனால், பால் மட்டுமே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு சீக்கிரத்திலேயே ரத்தசோகை வந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க குழந்தைக்கு 6 மாதம் முடிந்ததும் மற்ற திட உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு

பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் 20 முதல் 35 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து வெளியேறுகிறது. அதேபோல, கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, கரு உண்டானதில் தொடங்கி குழந்தைக்குப் பாலூட்டும் காலம் வரை 1,000 மில்லி கிராம் இரும்புச்சத்து கூடுதலாகத் தேவைப்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுடன், புரதச் சத்துள்ள உணவையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

சத்து மாத்திரை அவசியமா?

ரத்தசோகை நோய் உள்ளவர்கள் சரிவிகித உணவுடன் இரும்புச் சத்து மாத்திரைகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடும்போது மூன்று வாரங்களில் ஹீமோகுளோபின் அதிகரிக்க ஆரம்பிக்கும். அடுத்த மூன்று வாரங்களில் இது சரியான அளவுக்கும் வந்துவிடும். அதற்காக மாத்திரை சாப்பிடுவதை உடனே நிறுத்திவிடக் கூடாது. குறைந்தது ஆறு மாதங்களுக்கு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தம் பெருக்கும் உணவுகள்

பச்சையிலைக் காய்களிலும், கீரைகளிலும் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.

100 கிராம் அரைக் கீரையில் 39 மில்லி கிராம், 100 கிராம் சிறுகீரையில் 27 மில்லி கிராம், 100 கிராம் சுண்டைக்காய் வற்றலில் 60 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.

வெல்லத்திலும் வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட கடலைமிட்டாய், வெல்ல மிட்டாய் போன்ற உணவுகளிலும் இது அதிகம். பேரீச்சம்பழம், கொண்டைக்கடலை, துவரை, உளுந்து, பட்டாணி, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, எள் போன்றவற்றில் இரும்புச் சத்து நம் தேவைக்கு உள்ளது.

பொதுவாகச் சொன்னால், 100 கிராம் பருப்பில் 10 மில்லி கிராம்; 100 கிராம் தானியத்தில் 5 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. அசைவ உணவுகளில் ஈரலிலும் சிவப்பு இறைச்சியிலும் இரும்புச் சத்து அதிகம்.

முட்டையின் மஞ்சள்கரு, கோழி இறைச்சி, மீன், நண்டு, அன்னாசிப்பழம், பிளம்ஸ், தக்காளி, அவரை, சோயாபீன்ஸ், காலிஃபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், புரோக்கோலி, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் இலைகள், கடுகு இலைகள் போன்றவற்றிலும் இரும்புச் சத்து அதிகமுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், தினமும் ஒரு தானிய உணவு, ஒரு முட்டை, பருப்பு, 5 பேரீச்சம் பழங்கள், வாரம் 2 முறை முருங்கைக் கீரை, வாரம் ஒருமுறை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் ஈரல் சாப்பிட்டால், ரத்தசோகை வருவதை எளிதில் தடுத்துவிடலாம். நமக்குத் தேவை இந்த விழிப்புணர்வு மட்டுமே!

மேக்ரோசைட்டிக் அனீமியா

வைட்டமின் பி12 பற்றாக்குறையால் வருவது மேக்ரோசைட்டிக் அனீமியா. இது ஏற்பட்ட நோயாளிக்கு ரத்தசோகை அறிகுறிகளுடன் அடிக்கடி கால்கள் மரத்துப்போகும். பாதங்களில் எரிச்சல், ஊசி குத்துவது போல் வலி, ஜில்லிடும் உணர்வு போன்றவையும் ஏற்படும். பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் இவை அதிகமாகத் தொல்லைபடுத்தும்.

எனவே, இவர்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளுடன், வைட்டமின் பி12 மிகுந்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டியது முக்கியம்.  ஆனால், இது காய்கறிகளில் அவ்வளவாக இல்லை. ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு ஈரல், முட்டை, மீன், நண்டு ஆகியவற்றில்தான் அதிகமுள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு தயிர் பி12 வைட்டமினை தருகின்ற முக்கியமான உணவு.

ஃபோலிக் அமிலம் முக்கியம்

மேக்ரோசைட்டிக் அனீமியா ஏற்படுவதற்கு இன்னொரு காரணம், ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை. சாதாரணமாக அரிசி, கம்பு, முழுக்கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ், முளைக் கட்டியப் பயறுகள், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் நிரம்பியுள்ளது.

பசலைக்கீரை, அவரைக்காய், தக்காளி, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, புரோக்கோலி, பீட்ரூட், காளான், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கொத்தவரங்காய், கோதுமை ரொட்டி ஆகிய உணவுகளிலும் இந்த வைட்டமின் உள்ளது.

அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி, ஆட்டு ஈரல், முட்டை, மீன் ஆகியவற்றில் இது அதிகமுள்ளது. இந்த உணவுகளும் நம் தினசரி மெனுவில் ஒன்று மாற்றி ஒன்று இடம் பெற வேண்டும்.   குறிப்பாக கர்ப்பிணிகள் ஃபோலிக் அமிலம் மிகுந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியம்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். அப்போது கர்ப்பிணியின் உடலில் ஃபோலிக் அமிலம் தேவையான அளவுக்கு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிறவியில் ஏற்படுகின்ற உடல் ஊனங்களைத் தவிர்க்க இது ரொம்பவே உதவுகிறது.

கர்ப்பிணிகள் அதிகமாக டீ குடிக்கக்கூடாது, ஏன்?

நாம் சாப்பிடும் உணவில் இரும்புச் சத்து அதிகமாக இருந்தாலும் அது முறைப்படி குடலில் உறிஞ்சப்படுவதற்கு ‘வைட்டமின் ச’ யும் சிஸ்டின் (Cysteine) எனும் அமினோ அமிலமும் தேவை. இவை குறைவாக இருந்தால் இரும்புச்சத்து உடலில் சேர வழியில்லாமல் மலத்தில் வெளியேறிவிடும். எனவே, தினமும் 10 நெல்லிக்காய், 10 அத்திப்பழம், 15 திராட்சை, ஒரு கப் எலுமிச்சைச் சாறு, ஒரு ஆரஞ்சு இவற்றில் ஒன்று மாற்றி ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.

இரும்புச் சத்தை உறிஞ்சவிடாமல் தடுப்பதற்கு சில வேதிப்பொருட்கள் நம் உணவிலேயே உள்ளன. உதாரணமாக, தானியத்தின் தவிட்டில் உள்ள ‘பைட்டிக் அமிலம்’  (Phytic acid), முட்டையின் மஞ்சள்கருவில் உள்ள பாஸ்பேட், பச்சையிலை காய்களில் உள்ள ‘ஆக்சாலிக் அமிலம்’ (Oxalic acid), டீயில் உள்ள டானின் (Tanin) போன்றவை இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. எனவேதான், கர்ப்பிணிகள் அதிகமாக டீ குடிக்கக்கூடாது என்கிறார்கள், மருத்துவர்கள்.

எவ்வளவு இரும்புச் சத்து தேவை?

தினசரி உணவில் சராசரியாக 20 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது. ஆனால், இதில் 1 மில்லி கிராம்தான் உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. இதனால்தான் சத்துள்ள உணவைச் சாப்பிட்டாலும் சிலருக்கு ரத்த அளவும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிப்பதில்லை.

இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வயது வந்தவர்கள் தினமும் 20 மி.கிராம், குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் 30 மி.கிராம், கர்ப்பிணிகள் 40 மி.கிராம் என்ற அளவில் இரும்புச்சத்து உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். ரத்தசோகையால் மாதவிலக்கு ஒழுங்கில்லாமல் போகும். இந்த நிலைமை நீடித்தால் திருமணத்துக்குப் பிறகு மலட்டுத்தன்மை உண்டாகும். கர்ப்பப்பை பலவீனம் அடையும். இதன் விளைவாகக் கரு தங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.

தினமும் ஒரு தானிய உணவு, ஒரு முட்டை, பருப்பு, 5 பேரீச்சம் பழங்கள், வாரம் 2 முறை முருங்கைக் கீரை, வாரம் ஒருமுறை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் ஈரல் சாப்பிட்டால் ரத்தசோகை வருவதை எளிதில் தடுத்துவிடலாம்.

வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *