திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அருள்பாலிக்கும் கர்ப்பரட்சாம்பிகை பிள்ளை வரம் தரும் கண் கண்ட தெய்வமாக இருக்கிறார்.

மூலவர் கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்
அம்மன்/தாயார் கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் க்ஷீரகுண்டம், பிரமதீர்த்தம்
புராண பெயர் முல்லைவனம், கருகாவூர், மாதவிவனம்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
அமைத்தவர் சோழர்கள்
ஊர் கருகாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்

வரலாறு

திருக்களாவூர் என மக்களால் அழைக்கப்படும் இக்கோயில் மாதவி வனம், முல்லை வனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தல விருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என அழைக்கப்படுகிறது. கரு + கா + ஊர். கரு + தாயின் வயிற்றில் உள்ள (குழந்தை) கருவை, கா – காத்த (காக்கின்ற) ஊர் கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

ஒரு காலத்தில் இந்த இடம் முல்லை காடாக இருந்தது. நித்துருவர் வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்கு குழந்தை இல்லாத குறையினால் முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கி குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள்.

வேதிகை கருவுற்றிருந்த போது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டார். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிச்சை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிச்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது.

வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி குழந்தையாக கொடுத்தாள்.

இறைவியின் அருள் மகிமையைக் கண்டுணர்ந்த வேதிகை இத்தலத்தில் கர்ப்ப ரட்சாம்பிகையாகவே எழுந்தருளி உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள் பாலித்தாள்.

கோவில் அமைப்பு

இக்கோயில் 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. இதற்கு கிழக்கில் ஓர் ராஜகோபுரமும், தென் பக்கம் ஒரு நுழைவு வாயிலும் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் உள்ளது.

முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் சுவாமி கோயிலும் இதன் வடப்பக்கம் அம்பிகைக்குக் கோயிலும் தனித்தனி பிரகாரத்துக்குள் அமைந்துள்ளது.

சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும் தென் கிழக்கில் மடப்பள்ளி 63 நாயன்மார்களும், வடகிழக்கில் நடராஜர் சபா முன் மண்டபமும், யாகசாலையும் இருக்கின்றன.

இதற்கு அடுத்து மேல் பக்கம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராஜர் சன்னதியும், நவக்கிரகங்களும், தென் பக்கம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அருகில் தென் கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சன்னதியும் உள்ளன.

கோவிலின் சிறப்பு அம்சம்

முல்லைவனநாதர், விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள். இதில் முல்லைவனநாதர் மட்டும் மண்ணால் ஆனது. மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.

அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது ஒரு தனி சிறப்பம்சம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.

நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும். சூரியனுக்கு எதிரில் குரு. எல்லாமே அனுகிரக மூர்த்தி. வக்கிர மூர்த்திகள் கிடையாது.

அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.

இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.

தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.

இத்தலத்தில் தல விநாயகராக கற்பக விநாயகர் உள்ளார். இங்கு உள்ள நந்தி – உளிபடாத விடங்க மூர்த்தம் என்பர்.

இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன், சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞானசம்பந்தர் பாடிய தலம்.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.

ஒரே வரிசையில் தரிசனம்

இத்தலத்தில் சுவாமியையும், அம்பாளையும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரையும் ஒரு சேர வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.

நெய் மெழுகுதல்

திருமணம் கூடி வராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள்.

அவ்வாறு செய்பவர்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கின்றன. தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி, துலாபாரம் செய்கின்றனர்.

குழந்தை பாக்கியம் பெற வைக்கும் நெய்

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாதவர்களுக்கு அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, தம்பதியினர் 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.

கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் இதர பழக்க வழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும்.

சுகப்பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய்

கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது விசேசமானதாகும்.

இந்த விளக்கெண்ணெயை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ பின்விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதரண வலி தோன்றினால் அப்போது மந்திரித்த விளக்கெண்ணெயை வயிற்றில் தடவினால் நின்று நிவாரணம் கிடைக்கும்.

தங்கத் தொட்டில்

குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும். இத்தங்கத் தொட்டிலுக்கு கட்டணம் ரூ.550 ஆகும்.

புனுகு சாத்தல்

முல்லைவனநாதர் புற்று மண்ணினால் ஆனது. எனவே சுவாமியின் திருமேனியில் நேரடியாக அபிஷேகம் செய்வதில்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுச்சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.

தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு வளர்பிறை பிரதோஷத்தில் புனுகு சட்டம் சாத்தி நோய் நீங்கப் பெறலாம்.

பிரம்மன் பூஜித்தது

பிரம்மன் படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.

தீர்த்தங்கள்

க்ஷீரகுண்டர் (பாற்குளம்)

கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள இத்திருக்குளம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப்பட்டது. சிவராத்திரி காலத்தில் பெருமான் இங்கு தான் தீர்த்தம் அருளுகிறார்.

சத்திய கூபம்

முல்லைவனநாதர் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ளது. இக்கிணறு கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிறுகளிலும் முருகப்பெருமான் இதில் தீர்த்தம் அருளுகிறார்.

பிரம்ம தீர்த்தம்

இத்திருக்குளம் இவ்வூருக்குத் தென்மேற்கில் கற்சாலைக்குக் கீழ்ப்பக்கம் இருக்கிறது. மார்கழித் திருவாதிரையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கு வந்து தீர்த்தம் அருளுகிறார்.

விருத்த காவிரி

காவிரியின் கூறாகிய வெட்டாறு இது. இதையே முள்ளிவாய் என்றும் புராணங்கள் கூறும். கோயிலுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள பூஜைப் படித்துறையில் கருகாவூர்ப் பெருமான் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களிலும் பெருமாட்டி கர்ப்பரட்சகி ஆடிப்பூர நன்னாளிலும் தீர்த்தம் அருளுகிறார்.

பூஜை

இக்கோயிலில் நாள்தோறும்

காலை 5.30 – 6.00 மணிக்கு உஷக்காலம்,

காலை 8.30 – 9.30 மணிக்கு காலச்சந்தி,

பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிக்காலம்,

மாலை 5.30 – 6.30 மணிக்கு சாயரட்சை,

இரவு 8 மணிக்கு அர்த்தயாமம் ஆகியவை நடைபெறுகின்றன.

அபிஷேக நேரம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஞாயிறு அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வதற்கு தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யவேண்டும்.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள், 29 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது.

திருவிழாக்கள்

இக்கோயிலில் சுவாமிக்கு விசாகப் பெருந்திருவிழா, அம்பிகைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவங்கள், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள், நிறைபணி அன்னாபிஷேகம், கந்தர்சஷ்டி, கார்த்திகை சோம வாரப் பூஜை, அனைத்து கார்த்திகை தீபம் ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாத பிரதோஷங்கள் போன்றவை இங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஆகும்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும்.

மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்

திருக்கருகாவூர்,

தஞ்சாவூர் – 614 302.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *