அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்..!

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள். அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட இதன் பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra. இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.

சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்றும் வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன.

வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை. குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரம் இரண்டு வகைப் படும். சீமை அதிமதுரம்,நாட்டு அதிமதுரம்.

சீமை அதிமதுரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.

மொத்தத்தில் அதிமதுரம் (liquorice) ஒரு அற்புத மருத்துவ மூலிகை. இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சியை போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.

அதிமதுரம் மருத்துவப் பயன்கள்

அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும்.

அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும்.

 கரு சுருங்கிய போதும், குழந்தை இளைத்த போதும், குமிழம் வேர், அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து பருகச் செய்யவும். அப்படி ஒரு மண்டலம் செய்தால் விரைவில் தீர்வு கிட்டும்.

அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால் அடிபடுதலால் உண்டாகும் இளைப்பு தீரும்.

தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.

அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.

அதிமதுரச் சாறு அல்லது கஷாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிற்றுக்கு கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கும்.

அதிமதுரத்தை இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சாப்பிட சோர்வு நீங்கும்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.

அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும்.

அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது இந்த அதிமதுரப் பொடி.

இளமையில் போக சக்தியை இழந்து விட்ட வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு புத்துயிர் அளிக்கும் அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய் தடவி, குன்றி இலையை ஒட்டவைக்க பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.

தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

கண்கள் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட வேண்டும்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து தேனில் சாப்பிட குணமாகும்.

சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள் உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம் போன்றவை தனிய அதிமதுரப்பொடி உதவும். அதிமதுரத்துடன் தேன் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *