விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

விளக்கேற்றும் பொழுது இதை கவனத்தில் கொள்ளுங்கள்

சூரிய உதயத்தின் பொழுதும், மறையும் பொழுதும் விளக்கேற்றுவது நல்லது. வடக்கு பக்கம் வாசல் கதவை அடைத்து விட்டு விளக்கு ஏற்றவேண்டும் என்று முதியோர் சொல்வார்கள். காலையில் பிரம்ம முகூர்த்தம் சூரியன் உதிப்பதற்கு முன் 48 நிமிடம். காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.

மாலையில் கோதுளி முகூர்த்தம் சூரியன் மறைந்த பிறகு 48 நிமிடம். மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

தீப வழிபாடு

நம்முடைய நாட்டின் ஆன்மிக கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம” என்று கூறி வணங்குவது அவசியம்.

விளக்கை ஏற்றி ‘விளக்கே திருவிளக்கே’ என்ற பாடலைப் பாடலாம் அல்லது எட்டு வகை லட்சுமியின் பெயர்களைச் சொல்லி ‘போற்றி,போற்றி’ என்று சொல்லலாம்.

கடவுளை வழிபட காலையும், மாலையும் இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

தீபம் ஏற்றுவதால் உடல் ஆரோக்கியம், தனச்சேர்க்கை, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை.

குத்துவிளக்கு

தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீபிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீசிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை.

குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால் குத்துவிளக்கு கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.

எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?

  • மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.
  • வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.
  • பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.
  • வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.
  • இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.
  • எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம்?
  • நெய் தீபம் ஏற்றினால் செல்வ விருத்தி, நினைத்தது கைகூடும்.
  • நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும்.
  • இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற காரிய வெற்றி கிடைக்கும்.
  • விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் உண்டாகும்.
  • விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற அம்மன் அருள் கிடைக்கும்.

விளக்கு ஏற்றக்கூடாத எண்ணெய்கள்

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. இது மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.

விளக்கில் இடும் திரிககளின் பலன்

சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும்.

திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம்.

வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும்.

மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.

குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.

தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும். இதனால் தரித்திர யோகம் கொண்ட ஜாதகம் கூட ராஜ யோகமாக மாறிவிடும்.

வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.

விளக்கைக் குளிர வைக்கும் முறை

விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுவது தவறு. ஏனெனில் விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம் என்பது எல்லோரும் அறிந்த பொது விதி. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும். அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது. அது பாவம்.

இதையும் படிக்கலாம் : செல்வம் பெருக பெண்கள் வீட்டில் செய்ய வேண்டியவை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *