கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district)

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது.

கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது.  உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.

இம்மாவட்டமானது மூன்று பக்கங்களிலும் 71.5 கி.மீ நீளம் கடல்களால் சூழ்ந்துள்ளது. இந்த சிறிய மாவட்டமானது, நீண்ட நெல் வயல்களினாலும், தென்னந்தோப்புகளாலும், ரப்பா் தோட்டங்களாலும், அரிய வகை காடுகள், அரிய வகை மணல்தாதுக்களை கொண்ட மேற்கு கடற்கரை மற்றும் எழில்மிகு மேற்குத்தொடா்ச்சி மலை பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது.

நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் நாகர்கோவில்
பகுதி தென் மாவட்டம்
பரப்பளவு 1672 ச.கி.மீ
மக்கள் தொகை 18,70,374 (2011)
மக்கள் நெருக்கம் 1 ச.கீ.மீ – க்கு 1,111
அஞ்சல் குறியீடு 629xxx
தொலைபேசிக் குறியீடு 04652,04651
வாகனப் பதிவு TN-74 & TN-75
Contents
 1. வரலாறு
 2. மாவட்ட வருவாய் நிர்வாகம்
  1. வருவாய் கோட்டங்கள்
  2. வருவாய் வட்டங்கள்
 3. உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
 4. கன்னியாகுமரி மாவட்ட எல்லைகள்
 5. புவியியல்
  1. ஆறுகள்
  2. அணைகள்
  3. தாவரங்களும்
  4. விலங்குகளும்
  5. மருத்துவ வரலாறு
 6. அரசியல்
  1. சட்டசபைத் தொகுதிகள்
  2. மக்களவைத் தொகுதி
 7. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
  1. விவேகானந்தர் பாறை
  2. திருவள்ளுவர் சிலை
  3. காந்தி மண்டபம்
  4. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
  5. பத்மநாபபுரம் அரண்மனை
  6. சிதறால் மலைக் கோவில்
  7. மாத்தூர் தொட்டிப் பாலம்
  8. உதயகிரிக் கோட்டை
  9. உலக்கை அருவி
  10. பேச்சிப்பாறை அணை
  11. பெருஞ்சாணி அணை
  12. திற்பரப்பு அருவி
  13. முட்டம் கடற்கரை
  14. தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
  15. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
  16. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
  17. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
  18. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
 8. பொருளாதாரம்
  1. கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்
  2. ரப்பர்
  3. பழங்கள்
  4. மீன் பிடிப்பு
 9. மேலும் படிக்க

வரலாறு

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேரும். பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம். சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய் அரசும், வேணாட்டு அரசும் ஆண்டதர்க்கான ஆதாரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளது. தற்போதைய குமரி மாவட்ட நிலப்பரப்பில் தலைநகரத்தை கொண்டு, களக்காடு முதல் கொல்லம் வரை உள்ள நிலப்பரப்பை 9- ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை ஆட்சி நடத்தியவர்கள் வேணாட்டு அரசர்கள்.

பாண்டியநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் ஆய்நாடு நீங்கலான உட்பகுதிகளை உள்ளடக்கிய கொல்லத்திற்கு அப்பால் வரை அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது.

கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.

வேணாட்டை திருவடி என்ற பட்டபெயருடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1758 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர். இந்த வேணாட்டு அரசர்கள் சேரநாட்டின் வழிவந்தவர்கள். இவர்கள் திற்பாப்பூர் பரம்பரையினராகும்.

கி.பி. 1758ல் வேணாட்டு கடைசி மன்னன் இராமவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது. வேணாட்டு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் மார்த்தாண்ட வர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு, இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

கன்னியாகுமரி மாவட்டம் இரண்டு வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது.

வருவாய் கோட்டங்கள்

நாகர்கோயில்

பத்மநாபபுரம்

வருவாய் வட்டங்கள்

அகத்தீஸ்வரம்

தோவாளை

கல்குளம்

விளவங்கோடு

கிள்ளியூர்

திருவட்டார்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி மன்றங்களையும், 51 பேரூராட்சிகளையும், 9 ஊராட்சி ஒன்றியங்களையும், 95 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட எல்லைகள்

மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

புவியியல்

கன்னியாகுமரி மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பெற்றிருந்ததன் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது.

தமிழகத்திலேயே அதிக மழை பெறும் ஒரே மாவட்டம்..ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மலைகளை கொண்ட ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.

ஆறுகள்

குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகியன கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும்.

அணைகள்

பேச்சுப்பாறை அணை, முக்கடல் அணை, சிற்றாறு அணை, மாம்பழத்துறையாறு அணை.

தாவரங்களும்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

விலங்குகளும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி,பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப்பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திர கிரி மலையில் முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.

மருத்துவ வரலாறு

பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது.

மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

அரசியல்

இம்மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

சட்டசபைத் தொகுதிகள்

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குளச்சல்

பத்மநாபபுரம்

விளவங்கோடு

கிள்ளியூர்

மக்களவைத் தொகுதி

கன்னியாகுமரி

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் இடங்களில் ஒன்றாக உள்ள இக்கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கடற்கரைப் பகுதியில் பகவதி அம்மன் கோயில், மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் , சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.

விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார்.

அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை

திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.

திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

காந்தி மண்டபம்

தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது. இம் மண்டபத்தில் உள்ள மைய கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருந்த இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பாகும். இது காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்வையாளர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

சுசீந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 47-ன் அருகே அமைந்துள்ளது. இது மத்திய ஆசியாவின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும். 2002 ஆம் ஆண்டு, இப்பகுதியைப் ‘பறவைகள் சரணாலயம்’ என அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது.

பத்மநாபபுரம் அரண்மனை

தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது கேரளா அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படுகிறது.

இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சிதறால் மலைக் கோவில்

இக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது.

குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது. கிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிட்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது.

மாத்தூர் தொட்டிப் பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

வறட்சியை தீர்ப்பதற்காக 1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது. இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கொதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.

தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

உதயகிரிக் கோட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.

90 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.

உலக்கை அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும்.

அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும்.

பேச்சிப்பாறை அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.

இவ்வணையின் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும்.

இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும். இந்த அணை முன்னாள் முதலமைச்சா் காமராஜா் காலத்தில் கட்டப்பட்டது.

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது.

தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது.

கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

முட்டம் கடற்கரை

தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இவ்வூரின் கடற்கரை இயற்கை எழில் மிகுந்தது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது. இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன.

தேங்காய்ப்பட்டணம் கடற்கரை

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். அரபிக்கடலில் அமைந்துள்ள இக் கடற்கரை முழுவதும் தென்னை மரங்களால் சூழ்ந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த கடற்கரையில் தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கின்றது. இதை தேங்காய்ப்பட்டணம் காயல் என்றும் அழைப்பர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று.

கோயிலின் உற்சவ மூர்த்தியின் பெயர்கள் தியாக செளந்தரி, பால சௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். இது 1000-2000 ஆண்டு பழமையான கோயில் ஆகும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன்.

ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி ‘பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டாள். ‘மந்தைக்காடு’ என்ற பெயரே மருவி, ‘மண்டைக்காடு’ என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.

புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.

15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும்.

பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்

சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

 1. இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
 2. இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
 3. இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
 4. இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும்.

ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது.

இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது.

கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம்.

திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம்.

தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம்.

திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

பொருளாதாரம்

 1. தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
 2. காற்றாலைகளுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை.

மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

பழங்கள்

நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி,கற்பகவல்லி உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.

பலாப்பழம், மாம்பழம் தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *