கார்த்திகை சோமவாரம் விரதம்..!

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். எனவே இந்நாளில் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சோமாவரம் என்றால் திங்கள். சோமன் என்றால் பார்வதியுடன் கூடிய சிவன். சந்திரனுக்கு சோமன் என்று ஒரு பெயர் உண்டு. இதை முதன் முதலில் சந்திரன் கடைப்பிடிப்பதாகவும் அதனால் சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்த்திகை மாதம் இந்துக்களால் புனித மாதமாகவும், விரத மாதமாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை தீபம், காலபைரவ ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி போன்ற விரதங்கள் கார்த்திகையில் அனுஷ்டிக்கப்படுகின்றன. இம்மாதத்தில் பல விரதங்கள் இருந்தாலும் கார்த்திகை சோமவார விரதம் சிவபெருமானுக்கு உரியது. இந்த விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், விஷேசமானதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சோமவார விரதம் துன்பங்களை விலக்கி மகிழ்ச்சியை அளிக்கும் விரதம்.

கார்த்திகை சோமவாரம் வரலாறு

நீண்ட காலத்திற்கு முன்பு, சந்திரன் சிவனைப் பிரார்த்தனை செய்து, சோமவார விரதத்தைக் கடைப்பிடித்த பிறகு சிவனின் சடாபாரத்தில் (திரிசடாமுடி) அமர்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றார். இதைக் கண்ட பார்வதி தேவி, சிவபெருமானிடம் திங்கள்கிழமை விரதம் இருந்து அருள் புரிய வேண்டினாள்.

எம்பெருமான் சோமவார தினத்தில் உபவாசம் இருந்து சிவநாமங்களை உச்சரித்து இயன்றவரை தான தருமங்கள் செய்து நற்குணம் அமைந்த வேதியனையும், அவன் மனைவியையும் அழைத்து அவர்களையே சிவனாகவும், உமையாகவும் பாவித்து விருந்து உபசரித்து தான தருமங்கள் செய்ய என்று கூறினார்.

வசிஷ்டர், சேமசன்மார், தன்மமித்தியர் முதலியோர் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, பெருஞ்செல்வம், நற்கதி, புத்திரபேறு அடைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். சிவபெருமானின் சிறப்புமிக்க இந்த நாளில் விரதமிருந்து பல பாக்கியங்களில் வாழ்வோம்.

சோமவார விரதத்தின் முறை

இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள் முதல் கடைசி திங்கள் வரை செய்ய வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். “திங்கட்கிழமை காலை நீராடி எழுந்தவுடன் வீட்டில் தீபம் ஏற்றி விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், பாயசம் முதலியவற்றைப் படைத்து, சிவாஷ்டகம், சிவபுராணம் படித்து, சிவ அஷ்டோத்திரங்களை சொல்லி, கோயிலுக்குச் சென்று சிவனுக்கு வில்வத்திலும், சக்திக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்து கும்பிடலாம். கோவிலுக்கு வரும் உறவினர்களுக்கு முடிந்ததை பிரசாதமாக கொடுக்கலாம்.கோவிலுக்கு வரும் வயதான தம்பதிகளை பார்வதி பரமேஸ்வரனாக தியானித்து மஞ்சள்,குங்குமம் தாம்பூலம் கொடுத்து, அவர்களை வணங்கி ஆசி பெறலாம்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒரு நாள் முழுவதும் விரதம் இருப்பது நல்லது. வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளை உப்பில்லாமல் சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் அருந்தலாம். பின்னர் மாலையில் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து சிவனை வழிபட வேண்டும். இந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது பலனளிக்கும்.

சோமவார விரதம் இருப்பதன் பலன்கள்

சோமவார விரதத்தை ஆண் பெண் இருபாலரும் அனுசரிக்கலாம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணமான மற்றும் பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்குவார்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்கும். தாயாருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளும் நீங்கும். கணவன், மனைவி இருவரும் இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் , அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெறுவார்கள்.

“ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை நாள் முழுவதும் தொடர்ந்து ஜபித்து வந்தால், வாழ்வில் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

நாமும் கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் அனுசரித்து பார்வதி சமேத சிவனின் அருளைப் பெறுவோம்.

சிவாலயத்தில் சோமவாரம்

கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு திருமஞ்சனம், சங்காபிஷேகம், இடப வாகன வீதியுலா உற்சவம் நடைபெறும். இத்தினத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இம்மாதத்தில் நான்கு திங்கட்கிழமைகளில் சிவாலயத்தை தரிசிப்பது அவசியம். கார்த்திகை மாதத்தில் ஐந்து சோமவாரங்கள் இருந்தால், ஐந்தாவது சோமவாரம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *