மேல்மலையனூர் அங்காளம்மன்..!

அங்காள பரமேஸ்வரி அம்மன் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் என்னும் பகுதியில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது.

மூலவர் அங்காளபரமேஸ்வரி
இறைவன் தாண்டேஸ்வரர்
இறைவி அங்காளம்மன்
தல விருட்சம் வில்வம், மயில் கொன்றை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஊர் மேல்மலையனூர்
மாவட்டம் விழுப்புரம்

தல வரலாறு

melmalayanur angalamman history

முன் ஒரு காலத்தில் சிவபெருமானைப் போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப் போன்று இருந்த பிரம்மர் ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது சிவனே என நினைத்த பார்வதி தேவி பிரம்மருக்கு பாத பூசை செய்தாள். அச்சமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட பார்வதி தனது தவறை உணர்ந்தாள். அப்போது தான் வந்திருப்பது பிரம்மன் என்று அறிந்த பார்வதி தேவி மிகவும் கோபப்பட்டாள்.

பிரம்மன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனையாக இவனது ஒரு தலையைக் கொய்துவிட வேண்டும் என்று வேண்டி பணிந்தாள். சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்தார். இதனால் அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றிற்று. கீழே விழுந்த தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது.

பிரம்மனின் நிலையைக் கண்ட சரஸ்வதி மிகவும் கோபப்பட்டு, பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக என்று சிவனை சபித்து தனது கணவனின் தலையைக் கொய்திட காரணமாயிருந்த பார்வதியை நோக்கி நீ செடி, கொடிகளை அணிந்து கோர ரூபமாய் கானகத்தில் அலைந்து திரிக என்று சபித்தாள்.

பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்ட சிவபெருமானின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் சாப்பிடுகிறது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி, தாகத்தால் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, திருமாலிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டறிந்தாள். பின்னர் சிவபெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தினருகில் ஒரு தீர்த்தமுண்டாக்குமாறு கூறினாள். பெருமான் தனது சூலாயுதத்தால் ஒரு தீர்த்தமுண்டாக்கினார். அத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று இன்றும் வழங்கப்படுகிறது.

அங்குத் தேவி உணவு வகைகளைத் தருவித்து மயானத்தில் சூறையிட்டாள். அந்த உணவையருந்த பெருமானின் கையைப் பற்றியிருந்த பிரம்ம கபாலம் கீழே இறங்கியது. கபாலம் இறங்கியதும் பெருமான் அக்னி தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அப்போது கபாலம் பார்வதி தேவியைப் பற்றிக் கொண்டது. தேவி பேருருவங்கொண்டு தனது காலால் கபாலத்தை மிதித்து பின்பு அதனையடுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டாள். அப்போது தேவியின் கோர உருவம் அவளை விட்டு விலகியது. அந்தத் திருவுருவமே அருள்மிகு அங்காளம்மன் ஆகும்.

கபால மாலை தரித்துக் கோபத்துடன் விளங்கிய அங்காளம்மனைச் சாந்தம் செய்து மதியில்லாத காரிருள் நாளில் உனதருள் வேண்டி மக்கள் வருவர், நீ இவ்விடத்தே எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள் செய்து வருக என்று பார்வதி தேவி கூறியருளினாள். அதன்படி அங்காளம்மனும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தாண்டிய பெருமான் தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட சிவன், பூங்காவனத் தாயின் இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால் அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர்.

மூலவர்

இக்கோவிலில் மூலவராக இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஒரு கையில் தீய சக்தியை அழிக்க கூடிய கத்தியும். மறு கையில் வாழ்வளிக்கின்ற குங்குமமும் வைத்து அருள் பாலிக்கின்றாள். அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலில் சுயம்புவாக தோன்றிய புற்று இருக்கின்றது. அதற்கு அருகே உற்சவர் சிலையான அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை இருக்கின்றது.

தல பெருமை

தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்ததால் கோபமடைந்த தட்சன், சிவனை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். பார்வதி தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும்.

சிவன் இதை அறிந்து மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சாம்பலை தருகிறார்கள்.

தனிச்சிறப்பு

angalamman special

சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய திருத்தலம்.

இத்தலத்து அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள், சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஓம் சக்தி என்ற ஓங்கார சக்தியாக, ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவாகச் சூறையிடுவதாக உணவு வழங்குவதாகக் கருதப்படுகிறது. ஆகையால் ஒம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவைச் சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள் ஆவி ஆன்மாக்களைத் தலைகளாகக் கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப் பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதைப் போன்று தலைகளால் மாலை கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காளி அங்காளியாக விளங்குகிறாள்.

மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாகக் கருதப்படுவதால் அமாவாசை தோறும் தொடர்ந்து மூன்று முறை வருகை தந்தால் அவர்களைப் பிடித்துள்ள பிணிகள், தோஷங்கள், வைப்பு, ஏவல், பில்லி, சூனியம், காட்டேரி, சேட்டை எதுவாயினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது.

குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளிக்கிழமை மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோயிலுக்கு வந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி கபால வேடம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது இக்கோயிலின் சிறப்புகளாகும்.

இத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டிய படி நடக்கிறது. இக்கோயில் இளங்கோயில் வகையைச் சேர்ந்தது, சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதம்தோறும் அமாவாசையில் நடைபெறும். இந்த உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சித்திரை முதல் பங்குனி வரை வரக்கூடிய அமாவாசையில் நள்ளிரவில் நடைபெறும் உற்சவம் ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சாமியாடி வழிபாடு மேற்கொள்வார்கள். ஊஞ்சல் உற்சவத்தினைக் கண்டால் எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது பொதுமக்களின் நீண்ட கால நம்பிக்கை.

திருவிழா

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி மாத தேர்த்திருவிழாவும் உள்ளது.

கும்பாபிஷேகம்

குடமுழுக்கு – 7/2/2001

கும்பாபிஷேகம் – 18/11/2015

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

melmalayanur angalamman

இக்கோயிலுக்கு வந்தால் குழந்தை பாக்கியம், திருமணம் தடைகள், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறு, பேய் பிடிப்பது என்று பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

இக்கோயிலில் உள்ள அம்மன் மிகவும் அகர ரூபத்தில் இருப்பதால் ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்படும்.

அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

இந்த சன்னதி அமாவாசை அன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்,

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் – 604 204.

தொலைபேசி எண் : 04145-294466

இதையும் படிக்கலாம் : மாசாணியம்மன் கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *