சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

மூலவர் கோட்டை மாரியம்மன்
தல விருட்சம் அரச மரம்
தீர்த்தம் மணிமுத்தாறு
ஊர் சேலம்
மாவட்டம் சேலம்

கோட்டை மாரியம்மன் கோயில் வரலாறு

கோட்டை மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள்.

இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் அம்மனை பற்றி கூறியுள்ளார்.

திருமணிமுத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர். கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்குவதற்கு 1876 வருடம் சித்திரை மாதம் தர்ம சத்திரம் ஒன்று கட்டப்பட்டது. இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

1982-1989 ஆம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 1993 ஜூலை 1 அன்று கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கோட்டை மாரியம்மன் திருக்கோலம்

salem kottai mariamman
சேலம் கோட்டை மாரியம்மன்

கோட்டை மாரியம்மனின் சிரசில் சுவாலை கிரீடம் அக்கினி சுவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாக உடுக்கையும், இடது மேற்கரத்தில் பாசமும் மற்றும் வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தி வீற்றிருக்கிறாள்.

அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு சிவசக்தியாக ஈசான திசை நோக்கி அன்பும், கருணையும் ததும்பும் வடிவமாய், ஆனந்தம் பொங்கும் புன்முறுவல் முகத்தினை உடையவளாய் வீற்றிருந்து, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும்.

இக் கோவிலின் கருவறை ஆரம்பத்தில் சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் இருந்தது. தற்போது மாரியம்மன் வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் 2023 அக்டோபர் 27 நடைபெறவுள்ளது.

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

ஆடித்திருவிழா

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழா ஆடிப்பெருந்திருவிழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய 7 மாரியம்மன் கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பண்டிகையின் போது கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாதசுவாமி கோயிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. இது தொன்றுதொட்டு நடந்து வரும் அற்புத நிகழ்ச்சியாகும்.

கோட்டை மாரியம்மனுக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை மாறாக ஊட்டிவிடப்படுகிறது.

ஆடித்திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு மாரி அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றன.

கம்பம் நடுதல்

kambam naduthal
கம்பம் நடுதல்

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி நன்கு சீவப்படும்.

இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் கோயிலை 3 முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.

கம்பம் நடுதல் விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்ற மங்கல கோலத்துடன் உள்ள அம்மனிடம் திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர்.

குறிப்பாக பெண்கள் மழை வளம் வேண்டி கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி 3 முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரி அம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.

பிரார்த்தனை

பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அம்மை நோய், கண் சம்பந்தப்பட்ட நோய் நீங்க, திருமணத் தடை, குடும்ப பிரச்சனை நீங்க இங்கு வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து 3 முறை கோயிலை சுற்றி வருவார்கள். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.

மாரியம்மன் கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.

பூப்போட்டுப் பார்த்தல்

இக் கோயிலில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது.குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்தியோகம் கிடைக்க என பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை , சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப் பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு செல்வார்கள்.

கண்ணடக்கம் சாத்துதல்

கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை மாரி அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள்.

மண் உரு சாத்துதல்

அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.

உப்பு மிளகு போடுதல்

பக்தர்கள் தங்களுடைய குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று அம்மனை நினைத்து வேண்டிக்கொண்டு குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம். இந்த கோட்டை மாரியம்மனை வழிபட்டால் கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

நடை திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,சேலம் மாவட்டம்.

தொலைபேசி எண் :  0427 226 7845.

மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கோவில்கள்

500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில்;

1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில்;

5 மீட்டர் தூரத்தில் குமரகுரு சுப்ரமணியசாமி கோவில்;

1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில்;

இதையும் படிக்கலாம் : ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *